Thursday, January 2, 2014

நடத்தையில் சந்தேகப்பட்டு (இலங்கை அகதி) மனைவி கொலை; போலீஸ்காரருக்கு வலைவீச்சு!

Thursday, January 02, 2014
சேலம்::காதல் மனைவியை தலையணையால் அமுக்கி கொலை செய்ததாக அவரது கணவரான போலீஸ்காரரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
 
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ரமா என்கிற ஞானக்குமாரி(வயது24). இவரை நாகியம்பட்டியை சேர்ந்த மனோஜ்குமார்(28) என்பவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். மனோஜ்குமார் காஷ்மீரில் மத்திய ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இளமாறன்(5), பிரபாகரன்(1) என 2 மகன்கள் உள்ளனர்.

புத்தாண்டு விடுமுறையையொட்டி கடந்த 30–ந் தேதி மனோஜ்குமார் காஷ்மீரில் இருந்து நாகியம்பட்டி அகதிகள் முகாமுக்கு வந்தார். அப்போது மனைவியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மனோஜ்குமார் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.
 
இந்த நிலையில், நேற்று காலை மனோஜ்குமார் மீண்டும் நாகியம்பட்டியில் உள்ள அகதிகள் முகாமுக்கு வந்து மனைவி ரமாவிடம் தகராறு செய்தார். அப்போது மகன்கள் இளமாறன், பிரபாகரன் ஆகிய இருவரையும் வெளியில் அனுப்பி விட்டு கதவை பூட்டிக் கொண்டு ரமாவை மனோஜ்குமார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுவன் இளமாறன் தகவல் தெரிவித்ததின்பேரில், அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று மனோஜ்குமாரின் வீட்டுக்கதவை தட்டினார்கள்.

இதைத்தொடர்ந்து கதவை திறந்து வெளியில் வந்த மனோஜ்குமார் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டார். பொதுமக்கள் உள்ளே சென்றுப் பார்த்த போது அங்கு ரமா கட்டிலில் அசைவற்ற நிலையில் கிடந்தார். உடனே அவரை மீட்டு தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் அன்பரசன் பரிசோதனை செய்து விட்டு ரமா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
 
இதுகுறித்து தம்மம்பட்டி போலீஸ் நிலையத்தில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் புகார் கூறினார்கள். அப்போது போலீசார் புகாரை ஏற்று நடவடிக்கை எடுக்க தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் அதிருப்தியடைந்து சுமார் 100 பேர் தம்மம்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மனோஜ்குமாரை கைது செய்ய வேண்டும் என்று கோஷம் போட்டனர். பின்னர் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் உதயகுமார் அகதிகள் முகாமை சேர்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
 
விசாரணையில் ரமாவை மனோஜ்குமார் தாக்கி, தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து தலைமறைவாக உள்ள மனோஜ்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

No comments:

Post a Comment