இலங்கை::வீம்புக்காக போலியாகத் தமது கண்களை மூடிக்கொண்டு நாடகமாடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கண்களைத் திறக்க கடந்த வாரம் பாராளுமன்றத்தில் முயற்சி ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. பாரிய அபிவிருத்தி கண்டுள்ள வடக்கு கிழக்கின் இன்றைய உண்மை நிலையைப் பார்க்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருக்கிறார்.
அத்துடன் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைந்து இனப்பிரச்சி னைக்குத் தீர்வுகாண முன்வருமாறும் அவர்களிடம் அமைச்சர் ஹக்கீம் அழைப்பு விடுத்திருக்கிறார். நாட்டின் உச்ச சபையான பாராளுமன்றத்தில் அமைச்சர்கள், சக பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலேயே அமைச்சர் ஹக்கீம் இந்த இரு அழைப்புக்களையும் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இன்றைய அரசாங்கம் வடக்கு கிழக்கில் மேற்கொண்டு வரும் அபிவிருத்திகளைப் பார்த்து பொதுநலவாய மாநாட்டிற்கு இலங்கை வந்திருந்த வெளிநாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் பாராட்டுகையில் அப்பகுதிகளில் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் நீங்கள் மட்டும் ஏன் எதிர்மாறான கருத்துக்களை முன்வைக்கிச்ர்கள் என்பதே அமைச்சர் ஹக்கீமின் கேள்வியாகவும், ஆதங்க மாகவும் உள்ளது. உண்மையில் தூங்குபவரை இலகுவாக எழுப்பிவிடலாம், ஆனால் தூங்குபவர் போன்று பாசாங்கு செய்து நடிப்பவரை எழுப்புவது என்பது மிகவும் சிரமமான காரியமே என்பது போல உண்மை எதுவென நன்கு தெரிந்திருந்தும் வீம்புக்காகவும், வீறாப்புக்காகவும் எதுவுமே தெரியாதது போன்று நடித்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைத் தட்டி எழுப்ப மு.கா தலைவர் ஹக்கீம் முயற்சித்திருக்கிறார்.
அவரது இந்த முயற்சியை வரவேற்க வேண்டும். அவர் இதனை எப்பொழுதோ செய்திருக்க வேண்டும். காலந்தாழ்த்தியேனும் அவர் முயற்சித் தமையை நாம் வரவேற்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்த வரையில் இது செவிடன் காதுகளில் ஊதப்படும் சங்கின் ஒலியாக கேட்காது இருந்தாலும் சைகை மூலமாவது விளங்கிக் கொண்டு செயலாற்றும் இக்கட்டானதொரு நிலையில் அக்கட்சி உள்ளது. அதனால் அவர்களுக்கு இதுவொரு சாதகமான அழைப்பாகவே இருக்கும்.
ஏனெனில் வடக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதவி, அதிகாரம் மற்றும் ஆசனப் போட்டி காரணமாக எழுந்த உட்கட்சி முரண்பாடுகளால் அக்கட்சி இப்போது வாக்களித்த தமிழ் மக்களின் ஆதரவை இழந்து வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இப்போது எவராவது தாங்கிப் பிடித்து நிமிர்த்தி காப்பாற்றி விட வேண்டிய நிலையில் அக்கட்சி உள்ளது. அதற்கு அமைச்சர் ஹக்கீமின் பகிரங்க அழைப்பும், விமர்சனமும் அவர்களுக்கு நிம்மதியைக் கொடுத்திருக்கும்.
அதனால்தான் இதுவரை காலமும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கேற்பதில்லை எனும் உடும்புப் பிடி போன்ற உறுதியான முடிவிலிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த முடிவில் தற்போது தளர்வுப் போக்கைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு அமைச்சர் ஹக்கீமே அடித்தளமிட்டுள்ளார். அவர் அம்முயற்சியில் தளராது செயற்பட்டால் விரைவில் தமிழ்க் கூட்டமைப்பு தெரிவுக் குழுவிற்குச் சமூகம் அளிக்கும் சூழல் நிச்சயம் ஏற்படும்.
உண்மையில் இனப்பிரச்சினையை வைத்தே தமிழ்க் கூட்டமைப்பு தமிழ் மக்களிடையே அரசியல் செய்து வருகிறது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டால் அக்கட்சியினால் அரசியல் செய்ய முடியாது. அதற்காகவே தீர்வு காணும் முயற்சிகள் கைகூடும் வேளைகளில் அதனைக் குழப்பி வருவது அக்கட்சியின் செயற்பாடாக உள்ளது. அரசாங்கத்தை பொய்யாக வசைபாடி தமிழ் மக்களில் கணிசமானோரின் ஆதரவைப் பெற்று வடக்கில் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து அவர்களது இம்முயற்சியில் வீழ்ச்சி காணப்பட்டுள்ளது. ஏனெனில் வடக்கின் முதலமைச்சராகத் தெரிவாகியுள்ள முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இக்கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கிறார். அரசியல் செய்வதை இலக்காகக் கொண்டிராத அவர் மக்களது பிரச்சினைகள் தீர முன்னுரிமை அளித்து வருகிறார். இனியும் கால நேரத்தை வீணடிக்காது விரைவாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என்பது அவரது கருத்தாக உள்ளது. அதனை வாக்களித்த மக்களில் பெரும்பாலானோரும் விரும்புகின்றனர்.
இந்நிலையில் தாம் தனிமைப்படுத்தப்பட்டுவிடக் கூடும் எனும் பயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தீவிரமானதொரு மாற்று வழியப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். இதுவரை காலமும் நம்பியிருந்த சர்வதேசமும் கைவிட்ட நிலையில் தமிழ்க் கூட்டமைப்பு செய்வதறியா நிலையிலுள்ளது. கெமரூனின் யாழ்ப்பாண விஜயமும், சனல்4இன் செயற்கை வீடியோவும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கெமரூன் வந்தார், சுற்றிச் சுற்றிப் படமெடுத்தார்கள், பத்திரிகைகளில் அவை பிரசுரமாகின, அவர் சென்றுவிட்டார் என்பதாகவே மக்கள் கருதுகிறார்கள். வேறு எந்தச் சர்வதேச நாடுகளும் கண்டு கொள்வதாக இல்லை.
இந்நிலையில் பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் விடுத்த அழைப்பு தமிழ்க் கூட்டமைப்பிற்கு தேன் வார்த்தது போலிருந்தது. தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்களிடையே ஒருவித மனமாற்றத்தை இது ஏற்படுத்தியுள்ளது. இது தமக்கிடையேயான உட்கட்சி அரசியல் சுழியிலிருந் தும், மக்களது மனவெறுப்பிலிருந்தும் தம்மைத் தற்காலிகமாக சுதாகரித்துக் கொள்ள உதவும் என அவர்கள் நினைத்து முடிவெடுத்துவிட்டனர். இதுவே உண்மை. எனினும் உண்மையான யதார்த்த நிலையை ஓரளவு உணர்ந்து கொண்டதால் தமிழ்க் கூட்டமைப்பின் மனமாற்றம் தற்காலிகமானதாக இருந்தாலும் அதுவே இறுதியில் நிரந்தரமாகவும் அமையும். வார இறுதியில் சம்பந்தன் தெரிவுக் குழுவில் கலந்து கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்திருந்தார். எனினும் அது அவரது உதட்டளவிலிருந்தே வந்தது. உள்ளத்திலிருந்து வரவில்லை. தமது கட்சிக்குள் உள்நெருக்கடிகள் தோன்றும் போது அவர் இவ்வாறு கூறுவதை நாம் முன்னரும் பலதடவைகள் அவதானித் துள்ளோம்.
எனவே தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போன்று மு.காவின் தலைவர் ஹக்கீம் இதே முனைப்புடன் செயற்படுவாராயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு விரைவாகவே அழைத்துவர முடியும். அத்துடன் அவர்களது வாயாலேயே வடக்கு கிழக்கில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் பாரிய அபிவிருத்திகளை உண்மை எனப் பகிரங்கமாகவே ஒப்புக்கொள்ள வைக்கவும் முடியும்.
இவை இரண்டும் இடம்பெற்றால் அரசாங்கத்திற்கு மட்டுமல்ல இந்நாட்டில் வாழுகின்ற தமிழ்பேசும் மக்கள் அனைவருக்குமே அது வெற்றியாக அமைந்து விடும். அதன் பெருமை மு.கா தலைவரை வந்து சேரும். தனது கட்சிக்குள் பாரிய நெருக்கடிகள் ஏற்படும்போதெல்லாம் வழமையான தனது அதே புன்முறுவலுடன் அனைத்தையும் வெட்டியாளும் சாணக்கியம் நிறைந்த மு.கா தலைவரினால் இம்முயற்சியில் நிச்சயம் வெற்றிகாண முடியும் என்பது எமது நம்பிக்கையாகும்.
No comments:
Post a Comment