இலங்கை::இறந்தவர்கள், காணாமற்போனோர் மற்றும் அப்பாவி மலையக தொழிலாளர் வர்க்க மக்களை வைத்து சில தமிழ் அரசியல்வாதிகள் இன்று தமது அரசியல் இருப்பையும், பிழைப்பையும் நடத்தி வருகின்றனர். இவர்கள் தாம் கொழும்பில் சொகுசாக பொலிஸாரினதும், இராணுவ வீரர்களினதும் பாதுகாப்பிலிருந்தவாறு மக்களுக்கு நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டு மறைமுகமாகத் தீங்கு செய்து வருகின்றனர். இன்னமும் எத்தனை காலத்திற்கு இவர்கள் மக்களை இவ்வாறு ஏமாற்றப் போகிறார்களோ தெரியவில்லை என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் கேள்வி எழுப்பினார். தயவு செய்து இறந்தவர்களை வைத்து இருப்போரை இம்சைக்கு உள்ளாக்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யுத்தத்தின் போது இறந்த உறவுகளுக்கு அவர்களது ஞாபகார்த்தமாக வீடுகளில் அஞ்சலி செலுத்துவதில் எந்தவிதமான தவறும் இல்லை. அதனை யாரும் தடுக்க முடியாது, தடுக்கவும் இல்லை. ஆனால் தமிழ்க் கூட்டமைப்பின் அரசியல் வாதிகள் சிலர் தமது அரசியல் இருப்பிற்காக மாவீரர் களுக்கு அஞ்சலி என பொது இடங்களில் கூடி செயல்பட முனைந்தமை பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் ஆரோக்கிய மானதல்ல. இன்றைய (தொடர் பக். 11)காலகட்டத்தில் இதுபோன்ற தேவையற்ற விடயங்களை மக்களின் நன்மை கருதி நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் பிரபா கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் பிரபாகரனுக்கு பிறந்த நாள் எனத் தெரிவித்து உரையாற்றினார். இது ஜனநாயக நாடு, யாரும் எதுவும் பேசலாம், அதுவும் பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதியாக அவருக்குப் பேசும் உரிமை உள்ளது. இவையெல்லாம் உண்மையே. ஆனால் யுத்தம் நிறைவடைந்து மக்கள் இன, மத, மொழி பேதங்களை மறந்து சமாதானமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்துவரும் இக்காலகட்டத்தில் இவ்வாறான தேவையற்ற வீர வசனப் பேச்சுக்கள் தேவையா? இவ்வாறு பேசுவதனால் நாம் எதனைச் சாதிக்கப் போகிறோம்? மக்களில் ஒருவராவது இவரை இவ்வாறு பேசுமாறு கேட்டனரா? யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எத்தனையோ விதமான தேவைகள் உள்ளன. அவை குறித்துப் பேசலமே.
தமிழ் ஊடகங்களிலும், இணையச் செய்தி வலைப்பின்னல்களிலும் இடம்பிடிப்பதற்காக இவ்வாறு தரம்தாழ்த்திச் செயற்பட வேண்டாம் என்றும் பிரபா கணேசன் எம்.பி. தெரிவித்தார். உண்மையில் பாராளமன்றத்தில் அந்த உறுப்பினரின் பேச்சுக்கும் தமது கட்சிக்கும் தொடர்பில்லை எனவும் அது அவரது தனிப்பட்ட கருத்து எனவும் இரா. சம்பந்தன் ஐயா தெரிவித்ததை நான் வரவேற்கிறேன். அந்தக் குறிப்பிட்ட உறுப்பினரின் பேச்சை சம்பந்தன் அவர்கள் மறைமுகமாக எதிர்த்தே தனது அறிக்கையை விட்டுள்ளார். தலைவரது அரசியல் அனுபவத்தை அக்கட்சியிலுள்ளவர்களும் உள்வாங்க வேண்டும். சம்பந்தன் ஐயாவின் நெகிழ்வுப் போக்கு வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ்ச் சமூகத்திற்கு நன்மைகளைத் தேடித்தர வேண்டும்.
இச்சம்பவம் போலவே கொழும்பில் உள்ள தமிழ் அரசியல்வாதி ஒருவர் அறிக்கை அரசியல் நடத்தி வருகிறார். இவர் காணாமற்போனோருக்கு உதவி செய்வதாக அமைப்பொன்றை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார். இதுவரை இவரால் காணாமற்போன ஒருவரையாவது கண்டு பிடிக்க முடிந்ததா? அந்த அப்பாவி மக்களை வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து கொழும்பிற்கு அவர்களது செலவிலேயே அழைத்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட வைத்து அவர் தான் பிரபல்யம் அடைந்து வருகிறார். இதுவே உண்மை என்று அறியாத உறவுகளைத் தொலைத்த அப்பாவி மக்கள் இவரை நம்பி ஏமாந்து வருகின்றனர் எனவும் பிரபா கணேசன் எம்.பி. தெரிவித்தார்.
அதேபோன்று அப்பாவித் தோட்டத் தோழிலாளர்களான மலையக தொழிலாளர் வர்க்கத்தினரையும் இவர் சூட்சுமமாக ஏமாற்றி வருகிறார். பத்திரிகைகளில் வெளியாகும் அரசாங்கத்தின் மக்களுக்கான அபிவிருத்தி தொடர்பான செய்திகளை வைத்துக் கொண்டு வேண்டுமென்றே அதற்கு எதிராக தனது கற்பனையில் அறிக்கைகளைத் தயாரித்து ஊடகங்களுக்கு அனுப்பி மக்களைக் குழப்பி வருன்றார். உதாரணத்திற்கு மலையகத்தில் ஐம்பதாயிரம் தனி வீடுகளை அமைக்கவே அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஆனால் இவரோ மாடி வீடு கட்டி அரசு தொழிலாளர்களது காணிகளைச் சுவீகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிக்கை விட்டுள்ளார் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
தான் எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்திற்காக வாக்காளத்து வாங்கவில்லை எனவும் உண்மையையே எடுத்துரைப்பதாகவும் தெரிவித்த பிரபா கணேசன் எம்.பி, தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், கொழும்பைத் தமது கோட்டை எனக் கற்பனையில் கூறிவரும் மேலக அரசியல்வாதிகளும் மக்களுக்காகத் தம்மைத் திருத்திக் கொள்ள முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment