Sunday, December 01, 2013
சென்னை::இலங்கையில் நடந்த இறுதி கட்டப் போரை நிறுத்த, மத்திய அரசு முழு
முயற்சிகளும் எடுத்தது. ஆனால், புலிகளும், இலங்கை அரசும் அதற்கு ஒத்து
வராததால், போரை நிறுத்த முடியாமல், போனது நடந்தது,'' என, மத்திய நிதி
அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
இலங்கை தமிழர் வாழ்வுரிமையும், இந்திய அரசின் நிலையும்' என்ற கருத்தரங்கம்
சென்னையில் நடந்தது.
இதில், சிதம்பரம் பேசியதாவது:இலங்கை பிரச்னை குறித்து பார்லிமென்ட்டில்
பேசவேண்டும். இல்லையேல் தமிழகத்தில், பொதுக்கூட்டங்களில் பேச வேண்டும்.
பார்லிமென்ட்டில் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் அனுமதிப்பதில்லை. அதனால், அங்கு
பேச முடிவதில்லை. தமிழகத்தில், பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டும். ஆனால்,
பொதுக்கூட்டங்களை, காங்கிரஸ் நடத்துவதில்லை. இதனால், வாய்ப்பை நானே ஏற்படுத்திக்
கொண்டு, இந்த கூட்டத்தை நடத்தி, இலங்கை பிரச்னையில், மத்திய அரசின் நிலையை
விவரிக்கிறேன்.இலங்கை, இறையாண்மை கொண்ட ஒரு நாடு. அந்நாட்டை பிரித்து, தனிநாட்டை
உருவாக்கிக் கொடுக்க முடியாது. இந்தியாவில், காஷ்மீரையும், வடகிழக்கு மாநிலங்களில்,
நாகா மற்றும் மிசோ நாடுகளையும் கேட்டு போராடி வருகின்றனர்.
அவர்களுக்கு, நாட்டை பிரித்துக் கொடுத்துவிட முடியுமா? அதுபோல் தான்,
இறையாண்மை கொண்ட இலங்கையைப் பிரித்து, தனிநாடு உருவாக்க முடியாது.ஆனால், "இலங்கை
வாழ் தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத் தர வேண்டும்' என, ராஜிவ் ஜெயவர்த்தனே
ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.
இதன்படி, தமிழை, இலங்கையின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக்க
வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, ஒரே மகாணத்தை உருவாக்க
வேண்டும். அரசியல் மற்றும் பிற உரிமைகளை, தமிழர்களுக்கு அளிக்க வேண்டும்.இதற்கு,
இலங்கையின் அரசியல் சாசன சட்டத்தில், 13வது திருத்தத்தைக் கொண்டு வரவேண்டும்.
இதையேற்று, 13வது அரசியல் அமைப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.ஆனால், அதை அமல் செய்ய,
இலங்கை அரசு முரண்டு பிடிக்கிறது.
இதற்கிடையே, இலங்கையில், இறுதிகட்டப் போர் நடந்த,
2009ல், இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில், மத்திய
அரசு, வெளிநாட்டில் நடக்கும் போர் குறித்து எந்த முடிவும் எடுக்க
முடியாது.இருந்தாலும், தன்னால் முடிந்தளவு, இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரை
நிறுத்த, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், போரை நிறுத்த, ப்
புலிகளும், இலங்கை அரசும் ஒத்து வரவில்லை. இதனால், பெரும் மன வருத்தம் தரக்கூடிய,சம்பவங்கள் நடந்தேறியது. இந்தியாவின் விருப்பப்படி போர் நிறுத்தப்பட்டு
இருந்தால், பிரபாகரன் இன்று உயிரோடு இருந்திருப்பார். இதைப் பற்றி இனி பேசிப்
பயனில்லை. இருக்கக் கூடிய, இலங்கைத் தமிழர்களின் நலனைப் பாதுக்காக்க வேண்டியதே நமது
கடமை.இதற்காக, ஐ.நா., சபையில் குரல் கொடுத்தோம். இலங்கைக்கு எதிராகக் கொண்டு
வரப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றினோம்.
இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில், இந்திய பிரதமர் பங்கேற்காமல்
இருந்தது, இலங்கைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கருத்தை
எதிரொலிக்கும் வகையில் தான், கனடா நாடு, காமன்வெல்த் மாநாட்டை
புறக்கணித்தது."இலங்கை சென்ற, பிரிட்டன் பிரதமர், டேவிட் கேமரூன், பேசியது போல,
இந்திய பிரதமர் ஏன் பேசவில்லை' என்கின்றனர். இந்திய பிரதமர், இலங்கை
சென்றிருந்தால், அப்படிப் பேசியிருக்க முடியும். ஆனால், பிரதமர் செல்லாமல்,
வெளியுறவு அமைச்சரை காமன்வெல்த் மாநாட்டுக்கு அனுப்பியது தான், விவேகமான செயல்.
இதன்மூலம் தான், இலங்கைப் பிரச்னையில், தொடர்ந்து தலையிட்டு, தமிழர்கள் நலனை
பாதுகாக்க முடியும்.
நாம் முழுமையாக காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்து இருந்தால்,
இலங்கையுடன் தொடர்ந்து உறவு கொள்ளமுடியாது. நமக்கு, விசா கொடுக்க, இலங்கை அரசு
மறுக்க முடியும்.இந்திய பிரதமர், யாழ்பாணத்துக்கு செல்வார். அங்கிருக்கும் முதல்வர்
விக்கேனஸ்வரனுடன் ஆலோசித்து, தமிழர்களின் நலனை மேம்படுத்துவார். இந்தியாவைப்
பொறுத்தவரை, இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்கும், 13வது அரசியல் அமைப்பு
சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் நடந்த படுகொலைக்கு சர்வதேச விசாரணை
நடத்தி, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். போரில் இடம்பெயர்ந்த தமிழர்களை மறு
குடியமர்வு செய்யவேண்டும். இதிலிருந்து, எந்த காலகட்டத்திலும் பின்வாங்க மாட்டோம்.
இவ்வாறு, சிதம்பரம் பேசினார்.
No comments:
Post a Comment