Sunday, December 1, 2013

சமகால அரசியலும் வட பகுதி மக்களும்!

Sunday, December 01, 2013
இலங்கை::வட பகுதி மக்களின் வாழ்க்கையில் புரையோடிப் போயிருந்த அசாதாரன சூழ்நிலையின் தாக்கங்களும் அவற்றின் வடுக்களும் சிறிது சிறிதாக மாற்றமடையக் கூடிய சூழல் தற்போது உருவாகியுள்ளது.
 
யுத்தம் நிலவிய காலப்பகுதியில் பிரதான உற்பத்தி நிலையங்கள் பாலங்கள் உள்ளிட்ட முக்கியமான கட்டமைப்புக்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. இதன் மூலம் இராணுவத்தினர் வடபகுதியை அடைய முடியாதவாறு பல தடைகள் ஏற்படுத்தப்பட்டது. ஆயினும் இவற்றால் பாதிக்கப்பட்டது அப்பாவி பொதுமக்களே. எனினும் யுத்த நிறைவையடுத்து குறுகிய காலத்துக்குள் அனைத்து பாலங்கள் வீதிகள் என்பன நிர்மாணிக்கப்பட்டுவிட்டன. வீதிகளின் சீரற்ற நிலையினால் சிறு பிரயானத்துக்குக்கூட நீண்ட நேரத்தை செலவிட்ட மக்கள் குறுகிய நேரத்துக்குள் கொழும்பையோ அல்லது முக்கியமான நகரங்களையோ சென்றடைந்து தமது பணிகளை பூர்த்தி செய்யக்கூடிய நிலை தற்போது உருவாகியுள்ளது.
 
அன்று பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன. இன்று ஏனைய நகரங்களுடன் போட்டியிடக்கூடிய வன்னம் அவர்களது கல்வி நிலையுள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். சுருங்கக்கூறினால் அன்று மறுநாள் விடியலின் உறுதியற்ற நிலையிலேயே மக்கள் தமது காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தனர். இன்று நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதுடன் ஊடகங்களினூடாக தமது சுதந்திரத்தை வெளியிடக்கூடிய வாய்ப்பும் உள்ளது. இராணுவத்தினராலோ அல்லது அரசினாலோ இடையூறுகள் ஏற்பட்டிருப்பின் மக்கள் ஒருபோதும் இவ்வாறான சலுகைகளை பெற்றிருக்கமுடியாது.
 
மோதல்கள் இடம் பெற்ற காலப்பகுதியில் மக்கள் இழந்தவையும் அநுபவித்த துயரங்களும் அதிகம். இந்தியா போன்ற வெளிநாடுகளின் உதவிகளுடனும் சர்வதேச நிறுவனங்களின் உதவியுடனும் வடபகுதியில் அபிவிருத்திப்பணிகள் இடம் பெறுவதுடன் அரசினால் பல்வேறு பாரிய மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல பணிகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றமை யாவரும் அறிந்த விடயம்.
 
வடபகுதி மக்கள் சமத்துவத்துடன் வாழும் பொருட்டு பல முன்னாள் தமிழ் அரசியல் தலைவர்கள் அகிம்சை வழியில் போராட்டங்களை மேற்கொண்டனர். சில சந்தர்பங்களில் வெற்றியும் கண்டனர். கால ஓட்டத்தில் மாறிவந்த அரசியல் தலைவர்களால் மக்கள் திருப்தியற்ற நிலையில் இருந்தனர். எனவே இச்சந்தர்பத்தின் போது தூரநோக்கற்ற சில இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆயுதப் போராட்டமும் எதிர்ப்பு அரசியலும் அச்சமூகத்தை இந்நிலைக்கு கொண்டுவரக் காரணமாயிற்று. இவை மக்களின் விடியலுக்காக எனும் தோரனையில் தனிமனிதர்களாளோ அல்லது குறிப்பிட்ட குழுக்களினாலோ முன்னெடுத்துச் செல்லப்பட்டாலும்
ஆயுதப் போராட்டத்தின் விளைவாக வடபகுதி மக்கள் கல்வி, மருத்துவம், குடியேற்றம், விவசாயம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பின்னடைவைச் சந்தித்தனர்.
 
இதற்கும் மேலாக அப்பாவி மக்கள் தங்களது அன்பிக்குறிய உறவினர்களையும் உடைமைகளையும் இழந்ததுடன் காலா காலமாக வாழ்ந்து வந்த வாழ்விடங்களை கைவிட்டு அல்லது இடம்பெயர்ந்து வாழக்கூடிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகினர். எனவே கடந்த காலத்தைப்பற்றிக் கதைத்துக் கொண்டிருப்பதன் மூலம் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. இளம் சமூகத்தின் எதிர்காலத்துக்காகவேனும் கடந்த கால அநுபவத்தைக் கொண்டு தூரநோக்குடன் செயற்படக்கூடிய சந்தர்ப்பமாக தற்போது உருவாகியுள்ள சமாதானத்தை பயன்படுத்தவேண்டும்.
 
அசாதாரன சூழ்நிலையில் அராசாங்கத்தின் நேரடி தொடர்பு இல்லாமல் வாழ்ந்து வந்த சில மக்கள் அரசு பற்றிய சரியான விளக்கம் இல்லாமலோ அல்லது அரசுக்கு எதிரான கருத்துக்களுடனோ வாழ்ந்து விட்டனர். ஆனால் தற்போது மக்களுக்கு எங்கு செல்வதற்கும் சுதந்திரம் இருப்பதால் தாமாகவே உண்மை நிலையை அறியக்கூடிய வாய்ப்பு உள்ளது.
 
அசாதாரன சூழ்நிலை நிலவிய காலப்பகுதிக்குள் தவறான வழி நடத்தல்களினால் வடபகுதி மக்கள் சகல துறைகளிலும் பின்னடைவையே கண்டனர். ஒப்பீட்டளவில் தற் போதய எண்ணிக்கையை விட நூற்றுக்கணக்கான பொறியியலாளர்கள், வைத்தியர்கள், பட்டதாரிகள் என பல்வேறு துறைகளிலும் முன்னேறியிருப்பர் தொடர்ந்தும் எதிர்ப்பு அரசியலில் ஈடுபடுவதன் மூலம் எமது சந்ததியினரின் எதிர்காலத்துக்கு நாமே தடையாக அமைந்துவிடக் கூடாது.
 
இன்று வடபகுதியிலிருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு கோரிக்கைகள் விடப்படுகின்றன மக்களின் கோரிக்கைகளின் பேரில் இராணுவத்தினர் வெளியேறும் பட்சத்தில் உருவாகும் சாத்தியப்பாடுகள் பற்றி சற்று புரிந்து கொள்ளவேண்டும். ஏனெனில் இராணுவத்தினருக்கு கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் அரசுக்கே உள்ளது. ஆகவே அரசின் வேண்டுகோளுக் கிணங்கவே இராணுவத்தினரை வெளியேற்றமுடியும் ஏனென்றால் நாட்டின் பாதுகாப்புக்கு வடபகுதியிலும் சரி நாட்டின் ஏனைய பகுதியிலும் சரி இராணுவத்தினரின் தேவைப்பாடானது இன்றியமையாததாகும். பூகோளரீதியில் எமது நாட்டின் இட அமைவானது நாலாபக்கமும் கடலால் சூழப்பட்டு கேந்திர முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.
 
கடந்த காலங்களில் இலங்கையானது அவ்வப்போது பலமிக்க நாடுகளின் படையெடுப்புக்களுக்கு உட்பட்டதுடன் காலனித்துவ ஆட்சியின் கீழும் இருந்தது. எமது நாட்டின் வராலாற்றை கற்ற நாம் நாட்டின் பாதுகாப்புக்கு இராணுவம் முக்கியம் என்பதை சற்று உணரவேண்டும்.
பிராந்திய நாடுகளுக்கிடையே இராணுவ ஆதிக்கம் நிலவும் இச்சூழலில் வடபகுதியில் இராணுவத்தினர் இல்லாதிருந்தால் அதனை வாய்ப்பாக பயன்படுத்தி வெளிச்சக்திகள் வடபகுதியில் நிலைகொண்டு தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல ஏதுவாக அமையலாம். இது தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பது வெளிப்படை. மறுபுறம் பார்த்தால் இராணுவத்தினர் வடபகுதியில் இருப்பதால் மக்களுக்கு எந்தவிதத்திலும் பாதிப்புக்கள் இல்லை
 
அவ்வாறு இராணுவத்தினரால் இடையூறுகள் இருந்து இருப்பின் நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலில் அதிகமான மாகாணசபை உறுப்பினர்களை தமிழ் மக்கள் பெற்றிருக்க முடியாது. சில ஊடகங்களும் அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களும் தமது சுயலாபத்துக்காக மக்களை குழப்பத்துக் குள்ளாக்குகின்றனர்.
 
சமாதானத்துக்கு முன்னர், குறிப்பிட்ட எல்லைக்குள் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வாழ்ந்து வந்த மக்கள் தமது எதிர்காலத்துக்காக சில குழுக்களிலே தங்கி வாழவேண்டும் எனும் மாயை மக்கள் மத்தியில் இருந்தது அல்லது அவ்வாறானதோர் தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இது எவ்வழியிலும் அப்பாவி மக்களின் தவறல்ல முற்றிலும் அவர்களை வழி நடாத்தியவர்களின் தவறே.
 
எனவே மக்கள் தமது சிறார்களின் எதிர்காலத்துக்காகவேனும் தம்முள் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் அதாவது இன மத பேதமின்றி ஒரு நாடு அல்லது ஒரு தேசம் எனும் என்னக்கருவுக்கமைய மத்திய அரசுடன் இணைந்து தங்களது மாகாண சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் பிரதேச வளர்ச்சிக்காகவும் அபிவிருத்திகளுக்காகவும் உறுதுணையளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

No comments:

Post a Comment