Thursday, December 5, 2013

வட மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்த்தரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தவராஜா நியமிக்கப்படலாம்?

Thursday, December 05, 2013
இலங்கை::வட மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்த்தரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தவராஜா நியமிக்கப்படலாம் என  தெரிய வருகிறது.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியன் கடந்த மாதம் 26ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வட மாகாண சபையின் தற்போதைய எதிர்க் கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் தொடர்பு பட்டிருப்பது உறுதியாகி இருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை  நெடுந்தீவினைச் சேர்ந்த லண்டன் சசிந்திரன் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து  (03.12.13) நள்ளிரவு வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் கொழும்பில் வைத்து பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினராலும், றெக்ஷிசனின் மனைவி ஊர்காவற்றுறை பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மூவரும்  (04.12.13) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன், கமலேந்திரனிடம் இருந்து மீட்கப்பட்ட பிஸ்டல் உள்ளிட்ட பொருட்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

இதன்போது மூவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறும், அவரிடம் இருந்து மீட்கப்பட்ட பிஸ்டல் உள்ளிட்ட பொருட்களினை பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் இவரது மாகாண சபை உறுப்பினர் பதவி பறிபோகலாம் என்ற சூழலில் இவருக்கு அடுத்தநிலையில் விருப்பு வாக்குகளைப் பெற்ற தவராசா மாகாண சபை உறுப்பினராகி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் எதிர் கட்சி தலைவர் என்ற பெயரை அடையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment