Thursday, December 5, 2013

முதல்வர் ஜெயலலிதாவுடன் ஜெகன்மோகன் சந்திப்பு!

Thursday, December 05, 2013
சென்னை::தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சென்னை தலைமைச் செயலகத்தில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகசன் மோகன் ரெட்டி சந்தித்ததும் பேசினார். ஆந்திர மாநிலத்தை 2 ஆக பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கு சீமாந்திரா மக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் ஒருங்கிணைந்த ஆந்திராவே நீடிக்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்துகின்றனர்.

ஆந்திர மாநிலத்தை பிரிக்ககூடாது என்பதை வலியுறுத்தி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஏற்கனவே ஆந்திராவில் உண்ணாவிரதம் இருந்தார்.

ஏற்கனவே, ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து ஜெகன்மோகன் ரெட்டி மனு கொடுத்துள்ளார். அதன் பிறகு ஒவ்வொரு மாநிலமாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார். மேலும், அதற்கு ஆதரவு திரட்டும் வகையில், மேற்கு வங்காள முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல் மந்திரி நவீன்பட்நாயக் மற்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.

இந்த நிலையில், தமிழக முதல்_அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து, ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்திற்கு ஆதரவு திரட்டுவதற்காக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி  நேற்று சென்னை வந்தார்.

நேற்று காலை 10.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒய்.எஸ்.அனில் ரெட்டி, நிர்வாகிகள் ஏ.கே. ஜாகீர்உசேன், பெரம்பூர் சரவணா தலைமையில் தொண்டர்கள் மேள தாளம் முழங்க சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி தலைவர் ஜெகதீஸ்வர ரெட்டி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். வழி நெடுக தாரை தப்பட்டை வரவேற்பு வழங்கப்பட்டது.

போயஸ்கார்டனில் உள்ள தனது அண்ணன் மகன் ஒய்.எஸ். அனில்ரெட்டி வீட்டிற்கு சென்றார். அங்கும் சென்டை மேளம் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது.

அங்கு கட்சியின் முக்கிய பிரமுகர்கள் நெல்லூர் எம்.பி. ராஜமோகன் ரெட்டி, முன்னாள் எம்.பி. மைசூரா ரெட்டி, சுப்பராம ரெட்டி, பாலுமேனி எம்.எல்.ஏ. ஆகியோர் சந்தித்து பேசினர்.

பின்னர் நேற்று  மதியம் தமிழக முதல்_அமைச்சர் ஜெயலலிதாவை தலமை செயலகத்தில் ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பின் போது ஆந்திர மாநிலத்தை பிரிக்கக்கூடாது என்ற தனது கோரிக்கைக்கு ஆதரவு கேட்டார்.

முதல்வரை ஜெகன்மோகன் சந்தித்தபோது நெல்லூர் எம்.பி. ராஜமோகன் ரெட்டி, ஓங்கோல் எம்.எல்.ஏ. சீனிவாச ரெட்டி, பாலசவுரி எம்.எல்.ஏ உட்பட பலர் இருந்தனர்.

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நன்றி:-

நேற்று சென்னை வந்த ஜெகன்மோகன் ரெட்டி  செய்தியாளரை சந்தித்தபோது கடுமையான வேலை பளுவுக்கு இடையில் என்னை சந்திக்க நேரம் ஒதுக்கியதிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நன்றி கூற கடமைபட்டுள்ளேன் என்றார்...

 கருணாநிதியை சந்தித்தார் ஜெகன் மோகன் ரெட்டி!

நேற்று மாலை, 5:30 மணிக்கு, சென்னை கோபாலபுரத்தில் உள்ள, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வீட்டிற்கு, ஜெகன் மோகன் ரெட்டி வந்தார். அவரை, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், தி.மு.க., ராஜ்யசபா தலைவர் கனிமொழி, வரவேற்றனர். கருணாநிதி ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது.

வெளியே வந்த ஜெகன் மோகன் ரெட்டி அளித்த பேட்டி: முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்து, ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்திற்கு, ஆதரவு கேட்டேன். அவர்கள் இருவரும் விலை மதிக்க முடியாத தங்களின் நேரத்தை, எனக்கு ஒதுக்கி தந்தனர். அவர்கள் இருவரும், என் கருத்தை கேட்டதற்கு நன்றி. மூன்றாவது அணி குறித்து, எந்த அரசியலும், அவர்களிடம் நான் பேசவில்லை. பார்லிமென்டில், ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு, அ.தி.மு.க., தி.மு.க., எம்.பி.,க்கள் ஆதரவு அளிப்பரா என்பது குறித்து, எனக்கு தெரியாது. அவர்கள் என்ன நிலை எடுக்கப் போகின்றனர் என்பதை, அவர்கள் தான் தெரிவிக்க வேண்டும்.

ஒரு மாநில சட்டசபையின் அனுமதி பெறாமல், மக்களின் கருத்துக்களை கேட்காமல், மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க முடியாது. மக்களிடம் கருத்து கேட்காமல், மாநிலத்தை பிரிப்பது இது தான் முதல் முறை. அடுத்த ஆண்டு நடக்கும் லோக்சபா தேர்தல் தான், பொது ஓட்டெடுப்பாக அமையும். லோக்சபா தேர்தலில் எங்கள் கட்சிக்கு, 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில், வெற்றி கிடைக்கும். அடுத்த பிரதமர் யார் என்பதை, எங்கள் கட்சி தான் நிர்ணயிக்கும். காங்கிரஸ் கட்சிக்கு, நாங்கள் சவாலாக இருக்கிறோம். தேர்தலில் தோல்வி அடைந்தால், தெலுங்கானா மாநிலம் குறித்து, நாங்கள் பரிசீலிப்போம். வேண்டுமானால், ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்திற்கு, "தெலுங்கானா' பெயரை சூட்டலாம்; ஆந்திராவை இரண்டாகப் பிரிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment