Monday, December 30, 2013
இலங்கை::வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயாராகவே உள்ளார். ஆனால் சம்பந்தனின் பிடிவாதமே விக்னேஸ்வரனை தடுக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கத்துடன் இணைத்தால் அதுவே ஜனநாயகத்தின் பெரிய வெற்றியாகும் என்று ஜனநாயக இடது சாரி முன்னணியின் தலைவரும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
கூட்டமைப்பின் கோரிக்கைகள் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டன. நிறைவேறாத வாக்குறுதிகளுக்காக போராடுவதை விடவும் அரசாங்கத்துடன் இணைந்து தமிழர்களின் உரிமைகளை பெற்றுக் கொள்வதே புத்திசாலித்தனமான விடயமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கூட்டமைப்பின் கோரிக்கைகள் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டன. நிறைவேறாத வாக்குறுதிகளுக்காக போராடுவதை விடவும் அரசாங்கத்துடன் இணைந்து தமிழர்களின் உரிமைகளை பெற்றுக் கொள்வதே புத்திசாலித்தனமான விடயமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நேற்று மகரகம இளைஞர் மன்றத்தில் இடம்பெற்றது. இதில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் இன்று அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஜனநாயக ஆட்சிக்கான அடித்தளத்தினை இட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ், மலையக கட்சிகள் மற்றும் வடக்கில் முக்கிய தலைவர்களையும் அரசாங்கத்தில் இணைத்து நாட்டின் அனைத்து இனத்தவர்களுக்கான ஆட்சியினையும் நடத்தி வருகின்றது. ஆனால் இன்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மட்டுமே தமது பிடிவாதத்தில் பிரிவினைக்கான உரிமைகளை கோரி நிற்கின்றனர்.
வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அரசாங்கத்துடன் இணங்கி வட மாகாண செயற்பாடுகளை நடத்தவே விரும்புகின்றார். வடக்கிற்கான அபிவிருத்திகளை தமிழ் மக்களின் உரிமைகளை பெற்று அமைதியாக ஆட்சி நடத்த வேண்டுமென்பதே வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் அவாவாகும். எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் பிடிவாதமும் அரசாங்கத்துடன் முரண்படுவதன் காரணத்தினாலேயே விக்கினேஸ்வரன் எம்முடன் இணைந்து செயற்பட முடியாதுள்ளது. இன்று அரசாங்கத்திற்கு இருக்கும் பெரிய சிக்கல் தமிழ்தேசியக் கூட்டமைப்பே ஆகும். அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்பதே உண்மை. சர்வதேசத்தையும் தமிழ் மக்களையும் தூண்டி விட்டு தனி தமிழ் ஈழத்தினை உருவாக்கவே சம்பந்தன் நினைக்கின்றார்.
அதேபோல் ஜனாதிபதிக்கு இருக்கும் மிகக் கடினமான விடயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை அரசாங்கத்துடன் இணைப்பதேயாகும். பிரிவினைவாதக் கொள்கையில் எதற்கும் பிடிகொடுக்காத தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கத்தின் கொள்கைகளுக்குள் கொண்டு வந்தால் அதுவே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கும் நாட்டின் ஜனநாயக முன்னேற்றத்திற்கும் கிடைக்கும் மிகப் பெரிய வெற்றியாகும்.
அத்தோடு சம்பந்தன் ஜனாதிபதியோடு பேச்சுவார்த்தைகளுக்கு இணங்கி அரசுடன் இணைந்து செயற்பட விரும்பினால் அத்தோடு சர்வதேச பிரச்சினைகளுக்கும் இலங்கையின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும்.
அன்று பிரித்தானிய ஆதிக்கத்தின் கீழ் இலங்கை அடக்கப்பட்டாலும் இலங்கைக்குள் பிரிவினைவாதமென்ற ஒன்று காணப்படவில்லை. கோட்டை இராச்சியம், யாழ்ப்பாண இராச்சியம்இ கண்டி இராச்சியமென தனித்து காணப்பட்ட போதும் அனைத்து மக்களும் விடுதலையென்ற ஓர் கொள்கையில் போராடினர். ஆனால் இன்று வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் கிடைத்தும் எமது இனங்களுக்கிடையே பிரிவினை யுத்தம் ஏற்பட்டு விட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் யதார்த்தமானவை அல்ல. தனி இராச்சியத்தினை கோரி சுய ஆட்சிக்கான அடித்தளத்தினையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்புகின்றது. இதனை எந்த அரசாங்கம் வந்தாலும் நிறைவேற்ற முடியாதென்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் ஏனையவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். எந்த இனத்தவரும் யாருக்கும் அடிமைகளில்லை என்பதை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டதனாலேயே வட மாகாண சபைத் தேர்தலை ஜனாதிபதி நடத்தினார்.
வடக்குத் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெறுமென்பது அரசாங்கத்திற்கு நன்றாகவே தெரியும். எனினும் தெற்கைப் போன்று சுதந்திரமாக செயற்படக்கூடிய மாகாணமாக வடக்கும் இருக்க வேண்டும். வடக்கு மக்களுக்கென சுதந்திரமாக செயற்படவும் தமது விருப்பங்களை நிறைவேற்றும் உறுப்பினர்கள் வடக்கில் இருக்க வேண்டும் என்பதற்காகவே வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டது.
எனவே நிறைவேறாத கொள்கைகளுக்காக கூட்டமைப்பு போராடுவதை விடவும் அரசாங்கத்துடன் இணைந்து தமிழர்களின் உரிமைகளை வென்றெடுத்து ஜனநாயக ரீதியிலான ஆட்சியினை நடத்த இணங்க வேண்டும். அதுவே இன்றைய கால சூழ் நிலையின் தேவையாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment