Thursday, December 26, 2013
இலங்கை::தமிழ் மக்களுக்கு கூட்டமைப்புத்தான் முக்கியமென்றால் அரசாங்கத்தை நாடவேண்டாம். சம்பந்தனிடமும் விக்கினேஸ்வரனிடமுமே அனைத்து உதவிகளையும் பெற்றுக்கொள்ளட்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து செயற்படாவிட்டால் வட மாகாண சபையினை கலைப்பதே ஒரே வழி முறையாகும். ஜனாதிபதி இதை செய்ய வேண்டும் எனவும் அவ் இயக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர கருத்துத் தெரிவிக்கையில், யுத்த கால கட்டத்தின் போதும் யுத்தத்திற்குப் பின்னரும் அரசாங்கமே தமிழ் மக்களைப் பாதுகாத்து வருகின்றது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வடக்கில் இருந்த தமிழ் மக்களை இராணுவத்தினரும் அரசாங்கமுமே காப்பாற்றியது. அந்த நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் என்ன செய்தார்கள்?
புலிகளை ஆதரித்து வடக்கில் உள்ள அப்பாவித் தமிழர்களை கொலை செய்தமைக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை கைது செய்ய வேண்டும். அதேபோல் இலங்கை அரசாங்கம் யுத்தக் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் செய்வதாக சர்வதேச நாடுகள் குற்றம் சுமத்துகின்றன. முதலில் சம்பந்தன், மாவை போன்றோரே மனித உரிமை மீறல்களை செய்தனர். அவர்களையே மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.
அன்று தீவிரவாதத்தில் ஈடுபட்டு விட்டு இன்று அரசியல் சாயம் பூசிக்கொண்டு
அப்பாவி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். இதை தமிழ் மக்களும் நம்பி ஏமாறுவது மட்டுமே மிச்சமாக உள்ளது. தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் முக்கியமென்றால் அவர்களின் வழியில் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் தமிழர்கள் அரசாங்கத்தின் உதவிகளை எதிர்பார்க்கக் கூடாது. சம்பந்தன், விக்கினேஸ்வரனிடமே தமிழர்கள் உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட கூட்டமைப்பினருக்கோ வட மாகாண சபைக்கோ விருப்பமில்லாவிடின் அரசாங்கத்துடன் கூட்டமைப்பினர் ஒத்துப்போகாவிடின் அரசாங்கம் உடனடியாக வட மாகாண சபையினை கலைக்க வேண்டும். ஜனாதிபதியின் அதிகாரங்களைக்கொண்டு வட மாகாண சபையினைக்கலைத்து இராணுவ பாதுகாப்பின் கீழ் வடக்கினை கொண்டு வர வேண்டும். இராணுவத்தினரை வட மாகாணத்தில் இருந்து அகற்றினால் மீண்டும் வடக்கில் தீவிரவாதம் உருவாக்கப்படும் என்பதை ஜனாதிபதி மறந்து விடக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment