Sunday, December 29, 2013

தமிழ் தேசிய கூட்டமைப்பின் காரைதீவு பிரதேசசபையின் தவிசாளர் தனது பதவியை இராஜினாமா செய்தார்!

Sunday, December 29, 2013
இலங்கை::அம்பாறை மாவட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா இராசையா தனது தவிசாளர் பதவியில் இருந்து இன்று இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான இராஜினாமா கடிதம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் உப தலைவருமான பொன்.செல்வராசா ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா இராசையா அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

காரைதீவு பிரதேச சபையின் தவிசாளராகிய நான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு அதிகபடியான வாக்குகளைப்பெற்று தவிசாளராக நியமிக்கப்பட்டேன்.

இந்த நிலையில் எமது பிரதேசசபையின் செயற்பாட்டுக்கு பிரதேசசபையில் உள்ள ஏனைய மூன்று உறுப்பினர்களும் எனக்கு எதுவித ஒத்துழைப்புகளையும் வழங்குவதில்லை.பிரதேசசபையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தரமால் தொடர்ந்து குழப்ப நிலைகளை ஏற்படுத்திவருகின்றனர்.

இது தொடர்பில் கடந்த காலத்தில் பல தடவைகள் எமது கட்சி தலைமையின் கவனத்துக்கு கொண்டுசென்றபோதிலும் இது தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே தொடர்ந்து செயற்படமுடியாத நிலையில் எனது பதவியை இராஜினாமா செய்கிறேன்.எனினும் கட்சியோ மக்களோ நான் மீண்டும் தவிசாளராக கடமையாற்றுமாறு தீர்மானித்தால் கடமையாற்றவும் தயாராகவுள்ளேன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற சபையின் வரவுசெலவுத்திட்டம் உறுப்பினர்களின் எதிர்ப்பினால் தோக்கடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
 

கூடிப்பேசி ஆராய்ந்த பின்னரே இறுதி முடிவு: தமிழ் தேசிய கூட்டமைப்பு  உறுப்பினர் விஜயரட்ணம்!

கல்முனை மாநகர பட்ஜட் முன்மொழிவுகள் எமக்குக் கிடைக்கப் பெற்றன. கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது இந்த முறை வரவு செலவுத் திட்டம் பொருத்தமற்றது என்றே நான் கருதுகின்றேன் என மாநகரசபையின் தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர் அழகக்கோன் விஜயரட்ணம் வாரமஞ்சரிக்கு தெரிவித்தார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நால்வர் இருக்கின்றோம். எனினும் நாம் பட்ஜட் தொடர்பில் எவ்வாறு வாக்களிப்பது என இன்னும் முடிவு செய்யவில்லை.

எமது உறுப்பினர்கள் நால்வரும் கூடிப் பேசி, ஆராய்ந்து ஒரு தீர்க்கமான தீர்மானத்துக்கு வருவோம் எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் எமது தலைமையின் அறிவுறுத்தலும் எமக்குக் கிடைத்தவுடன் தான் எமது முடிவு குறித்த இறுதித் தீர்மானத்திற்கு வருவோம் எனவும் விஜயரட்ணம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment