Sunday, December 29, 2013

மீனவ பிரதிநிதிகள் பிரதமரை சந்தித்த மறுநாளே புதுகை மீனவர்கள் 22 பேர் சிறை பிடிப்பு!

Sunday, December 29, 2013
மணமேல்குடி::மீனவர்கள் பிரச்னைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என்று தன்னை சந்தித்த மீனவ  பிரதிநிதிகளிடம் பிரதமர் மன்மோகன் சிங் கூறிய மறுநாளே, புதுக்கோட்டை மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். இதனால் மீனவர்களிடையே மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
 
நாகை, புதுக்கோட்டை, காரைக்கால், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை, இந்திய கடல் பகுதியில் மீன்பிடிக்கும் போது இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். இதுவரை 227 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து கடந்த 3 மாதங்களாக சிறையில் அடைத்துள்ளது. அவர்களது 77 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க கோரி, நாகையில் கடந்த 12ம் தேதி முதல் அக்கரைபேட்டையை சேர்ந்த 500 விசைப் படகு மற்றும் 500 பைபர் படகு மீனவர்கள் 7 ஆயிரம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று 18வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதேபோல் நாகையில் நாகூர் உள்பட 8 மீனவ கிராமங்களை சேர்ந்த 30 ஆயிரம் பேர் 16ம் தேதி முதல் கடலுக்கு செல்லவில்லை. இன்று 14வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கடந்த 21ம் தேதி முதல் நாகை தாலுகா மீனவாகள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர். 4 நாட்கள் ஆன நிலையில் திமுக தலைவர் கருணாநிதி உத்தரவின்பேரில் நாடாளுமன்ற நிலைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் திமுகவினர் பேச்சுவார்த்தை நடத்தியதால் உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், கடந்த 26ம் தேதி டெல்லி சென்ற மீனவ பிரதிநிதிகள் 11 பேர், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, ஏ.கே.எஸ்.விஜயன் எம்பி ஆகியோர் தலைமையில் நேற்று முன்தினம் மாலை மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்து பேசினர். அதேபோல் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து மனு அளித்தனர். அதில் இலங்கை சிறையில் வாடும்  மீனவர்களை விடுதலை செய்து, அவர்களின் உடமைகளை விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என கூறியிருந்தனர். மனுவை பெற்று கொண்ட பிரதமர், மீனவர் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணும் பணியை வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் ஒப்படைத்துள்ளேன்.

அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மேனன் இணைந்து இந்த பிரச்னைக்கு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். விரைவில் இந்த பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்படும் என்றார். மேலும், கைதான மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக இருநாட்டு மீனவர்கள், மற்றும் அரசுகள் இடையே வரும் ஜனவரி 20ம் தேதி சென்னை அல்லது டெல்லியில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யும்படி சல்மான் குர்ஷித்திடம் கூறியிருக்கிறேன். விரைவில் சுமூக தீர்வு காணப்படும் என்று பிரதமர் கூறியிருந்தார். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து 255 படகுகளில் 1020 பேரும்,  கோட்டைபட்டினத்தில் இருந்து 230 படகுகளில் 920 மீனவர்கள் என சுமார் 1940 மீனவர்கள் நேற்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இன்று அதிகாலை அவர்கள்  மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த பாலதண்டாயுதத்தின் படகில் சென்ற சத்யபிரியன் (23), விஜேந்திரன் (45), சீராளன் (45) உள்பட 22 மீனவர்களை கைது செய்ததுடன், அவர்களது 6 விசை படகுகளையும் பறித்து சென்றனர். கைது செய்யப்பட்ட 22 பேரும் இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தமிழக, இலங்கை மீனவர்களுடன் வரும் 20ல் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பிரதமர் அறிவித்த மறுநாளே 22 மீனவர்கள் சிறைபிடிக் கப்பட்டுள்ளது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment