இலங்கை::யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க உட்பட ஆறு மேஜர் ஜெனரல் தரமுடைய அதிகாரிகளுக்கு ஜனவரி 1ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலத்தில் இலங்கை இராணுவத்தில் நடந்த பாரிய, உள்ளக இடமாற்றங்களாக இவை கணிக்கப்படுகின்றன. யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டுவரும் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, இராணுவ தலைமையகத்தின் நிர்வாக நிறைவேற்று அதிகாரியாக இடமாற்றப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டுவரும் மேஜர் ஜெனரல் உதய பெரேரா, யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாகவும், நிர்வாக நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாகவும், மேஜர் ஜெனரல் எல்.பி.ஆர்.மார்க், ஆயுதப் படைப்பிரிவின் பிரதம தளபதியாகவும் இடமாற்றம் பெற்றுள்ளனர்.
இதேவேளை, இராணுவ செயலாளராக செயற்பட்டுவரும் மேஜர் ஜெனரல் எஸ்.ரணசிங்க, கிளிநொச்சி மாவட்ட கட்டளைத் தளபதியாகவும், இராணுவ செயலாளராக மேஜர் ஜெனரல் டி.ஏ.கருணாசேகரவும் இடமாற்றப்பட்டுள்ளனர். அதேசமயம் பிரிகேடியர் தரமுடைய ஐந்து இராணுவ அதிகாரிகளுக்கும் அடுத்த வருடத்திலிருந்து இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.
இராணுவ தலைமையகத்தின் இராணுவ உதவி நிதிக்கு பொறுப்பான மேஜர் ஜெனரல் சி.கே.ராஜபக்ஷ, எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதிமுதல் வடக்கின் முன்னோக்கிய பரமாரிப்பு பிரிவின் கட்டளை அதிகாரியாக பதவிமாற்றம் பெற்றுள்ளார்.
தற்சமயம் வடக்கின் முன்னோக்கிய பராமரிப்பு பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் ஏ.வி.ரூபசிங்க, இராணுவ தலைமையகத்தின் இராணுவ உதவி நிதிக்கு பொறுப்பான இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியின் முன்னோக்கிய பராமரிப்பு பிரிவின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் டபிள்யூ.காரியவசமும், இராணுவ தலைமையக தொழில்பாடுகளின் இயக்குநராக பிரிகேடியர் முதன்னயகேவும், இராணுவ மரபுப் பிரிவின் இயக்குநராக பிரிகேடியர் வி.ஏ.சுதசிங்கவும் இடமாற்றம் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment