Monday, December 30, 2013

கிளிநொச்சி மாவட்ட இந்து ஆலயங்களின் மீள் கட்டுமானத்திற்கு 60 இலட்சம் ரூபா நிதி: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கினார்!

Monday, December 30, 2013
இலங்கை::கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களை மீளக் கட்டியெழுப்புவதற்காக சுமார் அறுபது இலட்சம் ரூபா நிதியினை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று வழங்கினார்.

இந்து கலாசார அமைச்சின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த நிதியினை மாவட்டத்தில் உள்ள 30 ஆலயங்களின் புனரமைப்பிற்காக வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள ஏனைய ஆலயங்களின் புனரமைப்பிற்காக, 7.8 மில்லியன் ரூபா நிதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே நேற்று மேலும் 60 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், 2004ம் ஆண்டு காலப்பகுதியில் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு புறம்பான பிரதேசங்களாகக் காணப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட ஆலயங்களுக்கு நாம் நிதி ஒதுக்கீடுகளை செய்திருந்தோம். இன்றைய சூழலிலும் யுத்தத்தால் பாதிப்படைந்த இந்து ஆலயங்களை மீளக் கட்டியெழுப்பும் பணிக்கு அரசு தனது பங்களிப்பை வழங்கி வருகின்றது.
 
அதனடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த நிதி ஆலயங்களை புனரமைப்பதற்கு போதுமானது என நாம் கருதவில்லை. இருப்பினும், இவ் ஆலய புனரமைப்பிற்காக மேலதிக நிதி வளங்களை பெற்றுத்தருவதற்கும் நாம் முயற்சித்து வருகின்றோம். அந்த வழிவகைகள் சாத்தியப்படுமிடத்து, ஆலயங்களின் வளர்ச்சிக்கு மேலதிக உதவிகளையும் எம்மால் வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
 
இங்கு உரையாற்றிய கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதிகேதீஸ்வரன், கிளிநொச்சி மாவட்டத்திலே மீள்குடியேற்றத்தின் பின்னர், இந்து ஆலயங்களை புனரமைப்பதற்காக அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த செயற்பாட்டுக்கு கௌரவ அமைச்சர் டக்ளஸ் தோவானந்தா அவர்கள் பாரிய முயற்சிகளை முன்னெடுத்திருந்தார். அதன் பயனாக இவ்வருடம் 7.8 மில்லியன் ரூபா நிதியினை கிளிநொச்சி மாவட்டம் பெற்றுள்ளது. இதில் 1.8 மில்லியன் ரூபா நிதியினை பெற்றுக்கொண்ட ஒன்பது ஆலயங்கள் தமது கட்டுமாணப் பணிகளை ஆரம்பித்திருக்கின்றன. தற்போது அடுத்தகட்டமாக மேலும் 30 ஆலயங்களை புனரமைப்பதற்கு சுமார் 60 இலட்சம் ரூபா நிதி கிடைக்கப் பெற்றுள்ளது என அவர் தெரிவித்தார்.
 
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், 30 ஆலயங்களுக்கும் தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான வேலைத் திட்டங்களை ஆரம்பிப்பதற்கான அங்கீகாரங்களை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும், ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் அவர்களும் வழங்கி வைத்ததுடன், ஏற்கனவே வேலைத் திட்டங்களை நிறைவு செய்த ஆலயங்களுக்கான காசோலைகளையும் வழங்கினர்.
 
இதில், வேம்பொடுகேணி கண்ணகி அம்மன் ஆலயம், முரசுமோட்டை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், சிறிஸ்கந்தபுரம் ஸ்ரீ முருகன் ஆலயம், புதுமுறிப்பு கற்பகப்பிள்ளையார் ஆலயம், இராமநாதபுரம், ஸ்ரீ நந்தவனப் பிள்ளையார் ஆலயம், கிளிநொச்சி ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயம், இராமநாதபுரம் விநாயகர் ஆலயம், இரத்தினபுரம் சிவசித்தி விநாயகர் ஆலயம், தர்மபுரம் ஸ்ரீ பாலமுருகன் ஆலயம், குஞ்சுப்பரந்தன் கொண்டையன் விநாயகர் ஆலயம், பெரியபளை இரட்டைக்கேணி கண்ணகி அம்மன் ஆலயம்,
 
சோரன்பற்று ஸ்ரீ விக்னேஸ்வரா பிள்ளையார் ஆலயம், முகமாலை பெரியதம்பிரான் ஆலயம், தம்பகாமம் அருள்மிகு நீலியப்பிள்ளையார் ஆலயம், பூநகரி நல்லூர் மடத்துப்பிட்டி பிள்ளையார் ஆலயம், செம்மன்குன்று ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், சித்தன்குறிச்சி முருகமூர்த்தி ஆலயம், கௌதாரிமுனை கள்ளிக்குள பிடாரி ஆலயம், புதுக்காட்டு ஐயனார் ஆலயம், சோரன்பற்று நீலிப்பால கண்ணகி அம்மன் ஆலயம், தர்மபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்,
 
சுண்டிக்குளம் கல்லாறு விநாயகர் ஆலயம், மலையாளபுரம் வடக்கு அதிசயப்பிள்ளையார் ஆலயம், கரியாலைநாகபடுவான் அரசடி ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம், மட்டுவில்நாடு அத்தி அரசடி விநாயகர் ஆலயம், சாமிப்புலம் பெரியதீவு முன்னோடி ஞானவைரவர் ஆலயம், வண்ணாங்கேணி ஸ்ரீ மகாகாலி அம்மன் ஆலயம், பூநகரி நல்லூர் ஸ்ரீ முருகன் ஆலயம், பெரியபரந்தன் ஊற்று விநாயகர் ஆலயம், இராமநாதபுரம் மாவடி ஸ்ரீ முருகன் ஆலயம் ஆகிய முப்பது ஆலயங்களுக்கும் குறித்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
இந்நிகழ்வில், ஈ.பி.டி.பியின் வட மாகாண சபையின் உறுப்பினர் வை.தவநாதன் மற்றும் பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் சிறீஸ்கந்தராசா ஆகியோரும் கலந்துகொண்டு ஆலயங்களுக்கு காசோலைகளை வழங்கினர். இதில் கரைச்சி பிரதேச செயலர் நாகேஸ்வரன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் சத்தியசீலன் ஆகியோரும் மற்றும் ஆலய பரிபாலன சபைகளின் தலைவர், செயலாளர்களும், அரச திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment