Thursday, November 28, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அதிகாரம் கிடைத்த பின்னர் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி புலிகளின் மாவீரர் தினத்தை அனுஷ்டித்துள்ளது:மொஹமட் முஸ்ஸாமில்!

Thursday, November 28, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உயிரிழந்த புலிப் பயங்கரவாதிகளை மாவீரர்கள் என்று கருதியே செயற்பட்டு வந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வடக்கில் ஆட்சி அதிகாரம் கிடைத்த பின்னர் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி புலிகளின் மாவீரர் தினத்தை அனுஷ்டித்துள்ளது.
 
கூட்டமைப்பு வடக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரம் கிடைத்த பின்னர் மாவீரர் தினத்தை அனுஷ்டித்ததோடு, அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கொடூரமான கொலையாளியான பிரபாகரனை வீரன் என புகழ்ந்து பேசினார்.
 
இப்படியான நேரத்தில் ஈபிடிபியின் நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவர் டேனியல் ரெக்ஸிமன் இனந்தெரியாத துப்பாக்கி தாரியினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்தி கிடைத்துள்ளது.
 
இந்த சம்பவம் ஈபிடிபியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கொலை செய்ய அன்று வேலுப்பிள்ளை பிரபாகரன் மேற்கொண்ட முயற்சிகளை எமக்கு நினைவுப்படுத்துகிறது.
 
2009 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி வடக்கு மாகாண புலிகளிடம் இருந்து முற்றாக மீட்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற முதலாவது அரசியல் கொலையாக இந்த கொலை வரலாற்றில் பதியப்படும்.
 
சுகவீனம் காரணமாக மனைவியின் வீட்டில் இருந்த போதே நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக எமக்கு அறியக்கிடைத்துள்ளது.
 
பிரபாகரன் எப்படி தனது பயங்கரவாத பயணத்தை ஆரம்பித்தார் என்பது எமக்கு தெரியும்.
 
செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்றவர்களின் தனி நாட்டு கொள்கைகளினால் போஷிக்கப்பட்ட பிரபாகரன் இனந்தெரியாத ஆயுதாரியாக யாழ்ப்பாண மேயர் துரையப்பாவை சுட்டுக்கொன்று விட்டு தனது பயணத்தை ஆரம்பித்தார்.
 
செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்றவர்கள் அன்று தமிழ் இனவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் போஷித்து பிரபாகரன் ஒருவரை உருவாக்கினார்கள்.
 
இன்று பிரிவினைவாதத்தையும் இனவாதத்தையும் போஷிக்கும் சம்பந்தன், சுமந்திரன், ஸ்ரீதரன் போன்றவர்கள் இனந்தெரியாத துப்பாக்கி தாரிகளை உருவாக்கி வருகின்றனர்.
 
இவ்வாறான நிலையில் நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரின் இந்த அரசியல் கொலை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன சொல்லப் போகிறது? என முஸ்ஸாமில் குறிப்பிட்டுள்ளார்.
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இனவாத பிரிவினைவாதத்திற்கு துணைபோவதாக முஸ்ஸாமில் தெரிவித்திருந்தார்.
அத்துடன் கூட்டமைப்புடன் சேர்ந்து கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி அந்த மாகாணத்தை வடக்குடன் இணைக்க முஸ்லிம் காங்கிரஸ் முயற்சித்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment