Wednesday, October 30, 2013

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என வலியுறுத்தி சேலத்தில் இன்று அதிகாலை கோணிப்பைகளில் தீ வைத்து வருமானவரி அலுவலகத்தில் வீச்சு!

Wednesday, October 30, 2013
சேலம்::சேலம் வருமானவரி துறை அலுவலக வளாகத்தில் இன்று அதிகாலையில் சாக்குபைகளை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து மர்ம நபர்கள் வீசிச் சென்றனர்.  இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என வலியுறுத்தி தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. சென்னையில் நேற்று முன் தினம் அதிகாலையில் தபால் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

இந்நிலையில், சேலம் வருமான வரி துறை அலுவலகத்தில் இன்று சாக்கு தீப்பந்தங்கள் வீசப்பட்டன. அஸ்தம்பட்டி காந்தி ரோட்டில் வருமான வரி அலுவலகம் உள்ளது. இங்கு அதிகாலை 4.20 மணிக்கு மர்ம நபர்கள் சிலர் முகத்தை துணியால் மறைத்தபடி  வந்தனர். அவர்கள், 4 சாக்கு பைகளை பெட்ரோலில் நனைத்து அதை வருமான வரித் துறை அலுவலகத்திற்குள் வீசி தீ வைத்தனர். டியூப் லைட்டுகளை உருட்டுக் கட்டையால் உடைத்தனர். பின்னர் 20 துண்டு பிரசுரங்களை வீசி விட்டு சென்றனர்.

தீ கொழுந்து விட்டு எரிவதை பார்த்ததும் இரவு காவலாளி பாலசுப்ரமணி சத்தம் போட்டார். அலுவலகத்தின் பின்புறத்தில் இருந்த காவலாளி நடராஜனும், அருகில் இருந்தவர்களும் ஓடி வந்தனர். அதற்குள் அங்கிருந்து மர்ம நபர்கள் பைக்கில் தப்பி விட்டனர். காவலாளிகள், வளாகத்தில் எரிந்து கொண்டிருந்த சாக்கு பைகளின் மீது மணலை போட்டு தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

அங்கு வீசப்பட்டிருந்த துண்டு பிரசுரத்தில், “தமிழக அரசின் தீர்மானத்தை அவமதிக்கும் இந்திய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம். மத்திய அரசே, தமிழர்களின் உணர்வை அவமதிக்காதே. சல்மான் குர்ஷித்தே, மன்மோகன் சிங்கே, இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாதே. சட்டமன்ற தீர்மானத்தை இழிவுபடுத்திய இலங்கை தூதர் கரியவாசகமே, இந்தியாவை விட்டு வெளியேறு, இந்திய அரசே, மத்திய அரசே, தமிழர்களின் கோரிக்கையை அவமதித்து இந்தியா உடைவதற்கு வழி வகுக்காதே,  திராவிடர் விடுதலை கழகம்‘ என்று அச்சிடப்பட்டிருந்தது.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று காவலாளிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

காவலாளி பாலசுப்ரமணி கூறுகையில், “வருமான வரி துறை அலுவலகத்தில் நானும், நடராஜனும் காவல் பணியில் ஈடுபட்டிருந்தோம். இன்று அதிகாலை 4.20 மணிக்கு 4 பேர், 2 பைக்கில் அலுவலகத்தின் நுழைவு வாயில் கேட்டிற்கு வந்தனர். அவர்கள் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு, அலுவலக வளாகத்திற்குள் சாக்கு பைகளில் பெட்ரோல் ஊற்றி தீப்பற்ற வைத்து வீசினர். வாயிலில் உள்ள லைட்டுகளை உடைத்தனர். அவர்களை பார்த்து நான் சத்தம் போட்டேன். அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் 4 பேரும் தப்பிச் சென்று விட்டனர்“ என்றார்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment