நியூயார்க்::உலகின் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் ரஷ்ய அதிபர் புடின் முதலிடம் பிடித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.அமெரிக்காவில் இருந்து வெளிவரும் போர்ப்ஸ் பத்திரிகை, ஆண்டுதோறும் உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் அமெரிக்க அதிபர் ஒபாமா 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளாக முதல் இடம் பிடித்திருந்த ஒபாமா, இந்த முறை ஒரு இடம் பின் தள்ளப்பட்டுள்ளார். முதல் இடத்தை ரஷ்ய அதிபர் புடின் பிடித்துள்ளார். சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் திட்டத்தை தடுத்தது மற்றும் ரஷ்யாவில் 13 ஆண்டுகள் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தியது, கடந்த 2012 மார்ச் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றது என்ற வகையில் புடினின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
ஆனால், அமெரிக்க அதிபராக 2வது முறை பதவியேற்றாலும் அரசின் நிதிசுமை, பற்றாக்குறை, தவறான கொள்கை முடிவுகளால் அரசு அலுவலகங்கள் 16 நாட்கள் முடங்கின. இது உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும், அமெரிக்க உளவு நிறுவனமான என்எஸ்ஏவின் ரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்நோடனுக்கு அமெரிக்க எதிர்ப்பை மீறி ரஷ்யா தஞ்சம் அளித்த விவகாரமும் புடினின் செல்வாக்கு அதிகரிக்க காரணம். அதுவே ஒபாமா செல்வாக்கு சரிவுக்கு காரணம் என்று போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில் 3ம் இடத்தில் சீன அதிபர் ஜீ ஜின்பிங், 4ம் இடத்தில் போப் பிரான்சிஸ், 5ம் இடத்தில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது. செல்வாக்கு மிகுந்தவர்களை தேர்வு செய்ய போர்ப்ஸ் பத்திரிகை இந்த ஆண்டு 72 உலக தலைவர்களின் பெயர்களை பரிசீலித்தது. இதில் 13 பேர் புதிதாக சேர்க்கப்பட்டனர். அவர்களில் சாம்சங்க் நிறுவன தலைவர் லீ குன்ஹீ 41வது இடத்திலும், நைஜீரிய கோடீஸ்வரர் அலிகோ டாங்கோடி 64வது இடத்திலும் உள்ளனர். அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி நிறுவன தலைவர்கள், கோடீஸ்வரர்கள் என பல தரப்பினரின் பெயர்களும் இடம் பெற்றிருந்த இந்த பட்டியலில் உலக அளவில் 9 பெண்களின் பெயர்கள் மட்டுமே இருந்தன.
No comments:
Post a Comment