Wednesday, October 30, 2013
ஸ்ரீநகர்::எல்லையில் பதட்டத்தை தணிக்க இந்தியா_பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே கொடி அமர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
எப்போதும் இல்லாத அளவுக்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தாண்டு மட்டும் 136 தடவைகள் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். அதுவும் இந்த மாதம் மட்டும் 30_க்கும் மேற்பட்ட தடவைகள் எல்லைக்கட்டுப்பாடு கோட்டை தாண்டி இந்திய காவல் நிலையங்கள் மீது 30_க்கும் மேற்பட்ட தடவைகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ராணுவ அதிகாரி உள்பட பலர் உயிரிழந்தனர் மற்றும் பல வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இதனையொட்டி எல்லை பகுதிக்கு மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே நேரில் போய் நிலைமையை ஆய்வு செய்து வந்தார். அப்போதும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறலில் ஈடுபட்டதால் எல்லையையொட்டி உள்ள பகுதிகளுக்கு அவரால் செல்ல முடியவில்லை.
பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாலும் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி அதிக அளவில் இருப்பதாலும் இரண்டு நாடுகளின் ராணுவ அதிகாரிகளின் கொடி அமர்வு கூட்டம் நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளை இந்திய ராணுவ அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இதற்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் சம்மதித்தாலும் கடந்த 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இந்த கூட்டத்தை நடத்த பாகிஸ்தான் தரப்பில் மறுக்கப்பட்டுவிட்டது. இந்தநிலையில் நேற்று இரண்டு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் கலந்துகொள்ளும் கொடி அமர்வு கூட்டம் தொடங்கியது.
இந்தியாவின் எல்லைப்பகுதியில் உள்ள ஒரு முகாமில் இந்த கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தின்போது பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வருவது குறித்தும் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி அதிகரித்து இருப்பது குறித்தும் அவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் உதவி செய்து வருவது குறித்தும் இந்திய ராணுவ அதிகாரிகள் புகார் தெரிவிப்பார்கள் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment