Wednesday, October 30, 2013
தஞ்சை::தஞ்சை மாவட்டத்தில் கள்ளத்தனமாக தங்கம் கடத்தப்படுவதாக சென்னை மத்திய வருவாய் புலனாய்வு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள் தஞ்சை மாவட்டத்தில் முகாமிட்டு தீவிர சோதனை நடத்தி வந்தனர்.
நேற்று பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் சிலர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிவதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 பேர் அதிகாரிகளின் பார்வையில் இருந்து நழுவி ஓட்டம் பிடித்தனர். இதைப் பார்த்த அதிகாரிகள் சுதாரித்துக்கொண்டு அந்த 3 நபர்களையும் விரட்டிச்சென்று பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 23), புதுக்கோட்டை மாவட்டம் மும்பாளையம்பட்டினம் கிராமத்தை சேர்ந்த காதர் மைதீன் (55), இப்ராகீம் (53) என்பது தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது அதில் 7.5 கிலோ தங்க கட்டிகள் இருந்தது. அந்த தங்க கட்டிகளை 3 பேரும் கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்ட தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.2 கோடியே 34 லட்சம் ஆகும். இதையடுத்து அதிகாரிகள் 3 பேரையும் கைது செய்து முத்துப்பேட்டை சுங்க இலாகா அலுவலகத்திற்கு அழைத்து வந்து சுமார் 4 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே நடுக்கடலில் என்ஜின் இல்லாமல் பழுதாகி நின்றிருந்த இலங்கையை சேர்ந்த படகை சேதுபாவாசத்திரம் கடலோர காவல் படையினர் கைப்பற்றினர். அந்த படகில் இருந்த நவீன வகை என்ஜின் கழற்றி எடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த படகு அங்கு வந்தது எப்படி? அந்த படகில் வந்தவர்கள் யார்? என்று கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில்தான் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் சென்னை மத்திய வருவாய் புலனாய்வு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 7.5 கிலோ கடத்தல் தங்கத்தை பிடித்துள்ளனர்.
எனவே, இந்த தங்கத்தை இலங்கையில் இருந்து யாரேனும் படகில் கடத்தி வந்து இவர்களிடம் கொடுத்தார்களா அல்லது இது வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கமா என்ற கோணத்தில் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment