இலங்கை::நாட்டைத் துண்டாடாமல் ஒரே நாட்டில் அதிகாரத்தைப் பகிர்ந்து முன் னேற்று வதே எனது குறிக்கோளாகும். அதற்கு சகல மக்களும் ஒன்றுபட்டுழைக்க வேண்டும் என்று வட மாகாணத்தில் போட்டியிட்டு முதன்மை உறுப்பினராக அதிக விருப்புவாக்கு பெற்றுத் தெரிவாகியுள்ள உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர் காலத்தில் மத்திய அரசின் ஒத்துழைப்புடன் நேச மனப்பான்மையுடன் ஒத்துழைக்க நான் தயாராக இருக்கிறேன். நாட்டைப் பிரித்தால் நான் ஒத்துழைக்க மாட்டேன். அதற்குத் துணைபோகவும் மாட்டேன். உதவிகளும் செய்யமாட்டேன். இன்று சில பெளத்த குருமார்கள் நாம் நாட்டை பிரித்தாளப் போகின்றோம். அதற்கான முஸ்தீபு வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் எம்மீது சேறு பூசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதில் எதுவித உண்மையும் இல்லை. இது உண்மைக்கு முற்றிலும் முரணானது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
உண்மையாகவே நாம் எமது வட மாகாண சபையின் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்யவே எதிர்பார்க்கின்றோம். இதற்காக நாம் மத்திய அரசின் உதவியையும் நாடி செயல்பட தயாராக இருக்கின்றோம்.
நாம் இச் சந்தர்ப்பத்தில் நாட்டை துண்டாட துணைபோகாமல் அதிகாரப் பகிர்வைச் செய்து நாட்டை முன்னேற்றிச் செல்லவே நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். அல்லாமல் நாட்டைத் துண்டாடி மீண்டும் பிரச்சினைகள் உருவாக்கிவிடுவது எமது நோக்கமுமல்ல. அது பற்றி நினைப்பதுமில்லை. இந்த நாட்டை துண்டாட நான் முதலமைச்சராக வரவில்லை. மாறாக ஒரே நாட்டில் அதாவது பிளவுபடாத நாட்டில் ஒரே அரசின் கீழ் ஆள்வதையே நான் விரும்புகிறேன் என்பதையும் தெளிவாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். எனவே இனியாவது சந்தேகக் கண் ணோடு எம்மை நோக்காது சகோதர எண்ணம் கொண்டு நோக்குங்கள் என்று பொய் வதந்திகளைப் பரப்பி வருப வர்களிடம் நான் வினயமாகக் கேட்டுக் கொள்கிறேன்.
இப்போது வடக்கில் யுத்தம் இல்லை. அதனால் படையினர் அங்கு தங்கத் தேவையில்லை. இதனால் வீண் சந்தேகம் எழுகின்றபடியால் படையினர் அங்கிருந்து வாபஸ் பெறப்பட வேண்டும். இதனால் நாம் தனி நாடு கோருகிறோம் என்ற அர்த்தம் அல்ல என்றும் திரு. விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
ஒரே நாட்டினுள் இரண்டு விதமான மக்கள் கூட்டம் இருக்கும்போது மொழி முறையாகவோ மத முறையாகவோ பின்பற்றும் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் தங்களை தாங்களே ஆளும் வகைக்கு நாட்டின் அதே ஒழுங்கு அமைப்பினுள் தொடர்ந்து இருப்பதற்கு வழி செய்வது தான் சமஷ்டி. அதற்கு பிரிவினையென்று நாமம் சூட்டி தென் பகுதியில் குளிர்காய்வது தான் விசித்திரமாக இருக்கின்றது. தேர்தல் முடிவுகள் வெளியான தினத்திலிருந்து வட பகுதி மக்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருக்கின் றார்கள்.
போருக்குப் பின்னரான மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாங்கள் முனைந்துள்ளோம். இப்பொழுதே பல வெளிநாடுகளிலிருந்து நிதி உதவி தருவதாக கூறுகின்றார்கள். இது சம்பந்தமாக நாம் அரசாங்கத்துடன் பேசி அவர்களின் அனுசரணையுடனேயே செய்ய வேண்டியிருக்கும். நிபுணத்துவம் வாய்ந்தவர்களுடன் இச் செயற் திட்டம் பற்றி கலந்துரையாடி மக்களுக்கு நன்மை பயப்பதாக இருந்தால் நிநியுதவிகளைப் பெற்று ஆவண செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
அரசாங்கம் இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட எங்களது சபை நல்ல விடயத்தை எடுத்துச் செல்ல வழிவகுக்குமாயின் அரசாங்கத்திற்கும் நன்மை பயக்கும். மக்களும் பலன் காண்பார்கள். வட மாகாண சபையுடன் இணைந்து செயற்பட அமைச்சர் பஷில் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இனத் துவேஷத்துடன் செயல்பட சிலர் இருக்கின்றார்கள்.
அதன் காரணத்தினால் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வாரோ தெரியவில்லை. காலம் காலமாக வந்த அரசியல் பின்னணி இது.
No comments:
Post a Comment