Monday, September 30, 2013
சென்னை::இலங்கை கடற்படையால் அடிக்கடி இன்னல்களுக்கு உள்ளாகும் தமிழக மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
சென்னை::இலங்கை கடற்படையால் அடிக்கடி இன்னல்களுக்கு உள்ளாகும் தமிழக மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
இலங்கை_தமிழக மீனவர்கள் இடையே டிசம்பர் மாதம் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று 20.9.2013 அன்று தங்களுக்கு கடிதம் அனுப்பியதை நினைவு கூறுகிறேன். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கொடுமையான தாக்குவது நீடித்ததாலும் இதில் இந்திய அரசு கடுமையான வலிமையான நடவடிக்கை எடுக்காததால் இது போன்ற தாக்குதல், கடத்தல் போன்றவை பாக்ஜலசந்தியில் நடந்ததாலும் கடத்தப்பட்ட மீனவர்கள் நீண்ட நாட்கள் ஜெயிலில் வைக்கப்பட்டதாலும் இந்த கடிதம் எழுதப்பட்டது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை மீனவர்களிடம் பேசுவது தான் சரியாக இருக்கும் என்று எங்கள் மீனவர்கள் நினைத்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களுடைய கோரிக்கைக்கு உதவி செய்யும் வகையில் இதை செய்தோம். இதற்கு மேலும் தாக்குதல் நடக்க கூடாது. மீனவர்கள் கடத்தப்படக் கூடாது. அவர்கள் நீண்ட நாள் சிறை வைப்பதை நிறுத்த வேண்டும். பாரம்பரியமாக மீன் பிடிக்கும் இடத்தில் தொடர்ந்து அவர்கள் மீன் பிடிக்கும் உரிமை வேண்டும். செயற்கையாக உருவாக்கப்பட்ட எல்லைகளை மதிக்க தேவையில்லை என்ற வகையில் இந்த பேச்சு வார்த்தை நடத்த விரும்பினோம்.
மேலும் கச்சத்தீவு தொடர்பாக வழக்கு கோர்ட்டில் இருப்பதால் அது பற்றியும் இந்த பேச்சுவார்த்தையில் விவாதிக்க கூடாது. பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து தமிழக அரசின் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் கூறியிருந்தோம். ஆனால் நான் எழுதிய கடிதத்தின் மை காய்வதற்கு முன்பே 22.9.2013 அன்று மீண்டும் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கடத்தி சென்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 20 மீனவர்களை 6 படகுகளுடன் அவர்கள் கைது செய்துள்ளனர். பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பாக்ஜலசந்தியில் மீன் பிடித்து கொண்டு இருக்கும் போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் 7.10.2013 வரை காவலில் வைக்கப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதே போல புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 18 மீனவர்களை 19.9.2013 அன்று 5 படகுகளுடன் கைது செய்து 10.9.2013 வரை காவலில் வைக்க உத்தரவிட்டு யாழ்ப்பாணம் ஜெயலில் அடைத்துள்ளனர். தற்போது 130 தமிழக மீனவர்கள் இலங்கை பாதுகாப்பில் உள்ளனர். அவர்களின் 29 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் பாம்பனை சேர்ந்த 35 மீனவர்களும், ராமேஸ்வரத்தை சேர்ந்த 41 மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். 23.9.2013, 25.9.2013 ஆகிய தேதிகளில் விடுவிக்கப்பட்ட அவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை. அவர்களின் 18 படகுகளும் விடுவிக்கப்படவில்லை.
21.4.2005 ல் நடந்த இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையிலும், அதன் பிறகு நடந்த 2 வது பேச்சுவார்த்தையிலும் மீனவர்கள் கைது செய்யப்பட்டாலும் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டாலும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் தமிழக மீனவர்கள் 3 மாதம் வரை ஜெயலில் வைக்கப்படுகிறார்கள். அவர்களுடைய படகுகளும் விடுவிக்கப்படவில்லை.
இந்த சூழ்நிலையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்காதது வேதனையை தருகிறது. இது ஒரு முக்கியமான பிரச்சினை மட்டுமல்ல. உணர்வுப்பூர்வமான பிரச்சினை. பல்லாயிரக்கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினை. ஆனால் இந்த ஏழை மீனவர்களுக்கு எந்த பாதுகாப்பும் அளிக்காமல் மத்திய அரசு கைவிட்டு விட்டது. இதனால் அவர்கள் தினமும் இலங்கை படையினரால் தாக்குதல், கடத்தல் போன்ற சம்பவங்களை சந்தித்து வருகிறார்கள். மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதுடன் வெளியுறவு ரீதியாக இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வரையில் இதற்கு தீர்வு ஏற்படாது. இதை செய்தால்தான் அங்கு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள்.
இது போன்ற பிரச்சினை எதிர்காலத்தில் வராமல் இருக்கும். இலங்கை அரசு இந்திய அரசுடன் இது சம்பந்தமாக உரிய தீர்வை ஏற்படுத்தினால் அது ஆச்சரியமான விஷயமாக இருக்கும். பாதிக்கப்படும் தமிழக மீனவர்கள் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்களை நீண்ட நாள் ஜெயிலில் அடைத்து வைத்து இருப்பதால் அவர்களின் குடும்பத்தினர் தினசரி வாழ்க்கைக்கு கஷ்டப்படுவதுடன் எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் தவிக்கிறார்கள்.
மேலும் அவர்களை பெரும் துன்பத்துக்கு ஆளாக்குகிறது. இதனால் ஒட்டுமொத்த தமிழக மீனவர்கள் சமுதாயத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே மத்திய அரசு இதில் கடும் நடவடிக்கை எடுத்து இலங்கை ராணுவ படையினர் நமது மீனவர்களை தாக்குவது, கைது செய்வது முற்றிலும் தடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழக மீனவ சமுதாயத்தின் வாழ்க்கை அமைதியாக இருக்காது. எனவே இலங்கை சிறையில் உள்ளதமிழக மீனவர்களை உடனடியாக மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment