Monday, September 2, 2013

ஐ. நா. வின் மனித உரிமைகள் ஆணையர் நவிபிள்ளை வெளிப்படுத்தியுள்ள கருத்து ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான்: கெஹலிய ரம்புக்வெல்ல!

Monday, September 02, 2013
இலங்கை::ஐ. நா. வின் மனித உரிமைகள் ஆணையர் நவிபிள்ளை வெளிப்படுத்தியுள்ள கருத்து ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான் என்றும் இலங்கையில் எதேச்சாதிகாரம் நடைமுறையில் இல்லை என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். நவி பிள்ளை இலங்கை எதேச்சாதிகார பாதையில் செல்வதாகக் கருத்துக் கூறியிருக்கிறார்.

இதனைவிட வேறு வகையான நிலைப்பாட்டை இங்கு நாங்கள் எதிர்பார்க்கவில்லை. காற்று எந்தப் பக்கம் வீசுகிறது என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் கூறியுள்ளார். 30 ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் பிடியில் இருந்த வடக்கில் இன்று மக்களுக்கு தேர்தல் என்ற வார்த்தையை யாவது கேட்பதற்கு உரிமை கிடைத் திருக்கிறது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இங்கு தேர்தல்கள் நடக்கின்றன.  அரசியலமைப்பின் கட்டமைப்புக்கு வெளியில் எதுவும் நடக்கவில்லை. பலமான பாராளுமன்றம் இருக்கிறது. பெரும்பான் மையான மக்களின் பங்களிப்புடன் அரசியல் நடக்கிறது என தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளரின் கருத்துக்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலொன்றின் வெளிப்பாடு தான் என்றும் கூறினார்.

புலிபயங்கரவாதத்தின் மூலம் இந்த நாட்டின் ஸ்திர தன்மையை சீர்குலைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன. அவை தோல்வியடைந்தாலும் சர்வதேச மட்டத்தில் தொடர்ந்தும் முன்னெடுக்கப் பார்க்கிறார்கள்.  புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களின் கருத்துக்களை இன்னும் முன்னெடுத்துச் செல்லும் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். யுத்த காலத்தில் சர்வதேச அழுத்தங்களை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொண்டதோ அதேபோலவே இப்போதும் பதில் நடவடிக்கை அமையும் என்றும் அவர் கூறினார். 

புலிகளுடனான போரின்போது சர்வதேச அமைப்புகள் எவ்வளவு நெருக்குவாரங்களை கொடுத்தன. முப்படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதியும் மக்களின் ஆணைபெற்ற கட்சியின் அரசாங்கம் என்ற வகையில் திடமான முடிவுகளை எடுக்காமல் சர்வதேச மட்டத்தில் உள்ள சிலரை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் செயற்பட்டிருந்தால் நாட்டில் இன்னும் யுத்தம் முடிந்திருக்காது.  இதேவேளை நாட்டு மக்களினது அனைத்து விதமான உரிமைகளையும் கடமைகளையும் அரசாங்கம் தற்போது முன்னெடுத்துச் செல்லும் இவ்வேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை அடக்கு முறையான நாடொன்றாக மாறுவதாகக் கூறும் பசப்பு வார்த்தை நாட்டு மக்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் ஒரு செயலாகும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று (01) கண்டியில் தெரிவித்தார்.

மனித உரிமை ஆணையாளரினால் எந்தவொரு ஆதாரமற்ற முறையில் அவ்வாறு ஒரு கருத்தை தெரிவிப்பதையிட்டு நாம் கவலைப்படும் அதேவேளை, இக்கருத்து தொடர்பில் அரசாங்கத்துக்கு தற்போது பல சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். கண்டி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஒன்று கூடலொன்று நேற்று கண்டி ஒக்ரே ஹோட்டலில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்து பேசுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தொடர்ந்து அங்கு கூறும் போது, அவ்வாறு நவநீதம்பிள்ளை கூறியிருக்கும் கருத்தை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. அரசியல் யாப்புக்கமைய அரசியல் விவகாரங்கள் சரியான முறையில் இடம்பெறுகின்றன. அது போன்று தேர்தல் முறைகள் சரியான முறையில் இடம்பெற்று வருகின்றன. சகல விடயங்களும் ஒழுங்கான முறையில் அரசு நடைமுறைப்படுத்தி வரும் இவ்வேளை, அவ்வாறு ஆணையாளர் தனது மனதுக்கு வந்தது போல் கூறுவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ள ஆணையாளர் அங்கு இடம்பெற்றுள்ள அபிவிருத்தி, புனர்வாழ்வு, தொழில்வாய்ப்பு, மீள்குடியேற்றம், நீதியான தேர்தல் போன்ற விடயங்கள் குறித்து அரசாங்கத்தை பாராட்டியுள்ள அவர் அதேவேளை, இவ்வாறு இலங்கையில் ஏகாதிபத்திய அடக்கு முறையான கலாசாரமாக மாறும் நிலை ஏற்பட்டிருப்பதாக கூறியிருப்பது குறித்து கவலையடைகின்றோம்.அரசாங்க தகவல் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள பல ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். ஊடகம் தொடர்பான விளக்கவுரைகள் அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆர். ஆரியரத்ன அத்துக்கல மற்றும் பணிப்பாளர் வசந்த பிரிய ராமநாயக்க ஆகியோர்களினால் வழங்கப்பட்டன.
 

No comments:

Post a Comment