Monday, September 2, 2013

சென்னை அண்ணாநகரில் புலிகள் 2 பேர் கைது!

Monday, September 02, 2013
சென்னை::அண்ணாநகரில் ஒரு வீட்டில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த  புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

அண்ணாநகர் கோல்டன்ஜார்ஜ் நகரில் ஒரு வீட்டில் சந்தேகப்படும்படி 2 பேர் தங்கியிருப்பதாக க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் க்யூ பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை அங்கு சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அவர்கள் இருவரும் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன் (34), கோபி (30) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு மற்றும் வான்படையில் முக்கிய நிர்வாகிகளாக இருந்ததும் போலீஸார் விசாரணையில் தெரியவந்ததது.

மேலும், கடந்த ஆண்டு பம்மல் சங்கர்நகரில் ஒரு வீட்டில்  புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டபோது, இவர்கள் தப்பியோடியிருப்பது தெரியவந்ததுள்ளது.

மேலும் க்யூ பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்டப் போரில் புலிகள் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் இறந்த பின்னர், அங்கிருந்து சிவனேஸ்வரனும், கோபியும் இந்தியாவுக்கு தப்பியோடி வந்திருப்பது தெரியவந்துள்ளது. இங்கு ஏற்கனவே சங்கர்நகரில் கைது செய்யப்பட்ட 4 பேருடன் இணைந்து இலங்கையில் வெடிகுண்டு வைப்பதற்கான பயிற்சியில் ஈடுபட்டதாகவும், அதற்காக பண்ருட்டி அருகே ஒத்திகையில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் இலங்கையைச் சேர்ந்த 3 பேர் வெடிகுண்டு வைக்க பயிற்சி பெற்றிருப்பது  தெரியவந்துள்ளது. போலீஸாரிடம் சிக்காமல் இருப்பதற்கு கைது செய்யப்பட்ட சிவனேஸ்வரன், அன்பு, நேசன், பிரியன், இசை பிரியன் என பல்வேறு பெயர்களை வைத்துக் கொண்டதும் தெரிந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சிவனேஸ்வரனும், கோபியும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்குத் தொடர்பாக மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment