Friday, August 30, 2013
இலங்கை::ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு கண் தெரிந்திருந்தால் வடக்கில் யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள அனைத்து முன்னேற்றங்களையும் கண்டிருப்பார். ஏனெனில் கண்ணுள்ள அனைவரும் இந்த முன்னேற்றங்களை பார்த்துள்ளனர்.
எவ்வாறாயினும் நாட்டில் மனித உரிமைகள் தொடர்பிலான தேசிய திட்ட வரைபு கண்டுள்ள முன்னேற்றங்களை நவநீதம்பிள்ளைக்கு தெளிவுபடுத்தியுள்ளோம் என்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் ஜனாதிபதியின் மனித உரிமை விவகாரங்களுக்கான பிரதிநிதியுமான அமைச்சர் மஹிந்தசமரசிங்க தெரிவித்தார்.
சர்வதேச தலைவர்கள் நாட்டுக்குள் வரும் போது இலங்கை தொடர்பில் தப்பான அபிப்பிராயங்களை ஏற்படுத்த பல குழுக்கள் செயற்படுகின்றன. வடக்கில் முன்னெடுக்கப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான போராட்டங்களும் அவற்றில் ஒன்றாகும்.
சவால்களை எதிர்கொள்ள நாம் தயாராகவே உள்ளோம். ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டில் அனைத்து நாடுகளும் இல்லை. எனவே தான் அமெரிக்காவின் தீர்மானம் பெரும்பான்மையில் வெற்றி பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்
நவநீதம்பிள்ளை, அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை நேற்று முற்பகல் அமைச்சில் சந்தித்து மனித உரிமை விவகாரங்களின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்து கொண்டார் என்றார்.
இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் கண்டுள்ள முன்னேற்றங்கள்
தொடர்பிலும் மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பிலும் இலங்கை கண்டுள்ள முன்னேற்றங்களை மிகவும் தெளிவாக வெளிப்படுத்தினோம் எனச் சுட்டிக்காட்டினார்.
இதனை மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் குழு நன்கு விளங்கிக் கொண்டது. குறிப்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற அமைச்சுக்களும் அரச நிறுவனங்களும் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அறிக்கைகளையும் சமர்ப்பித்தோம் எனவும் குறிப்பிட்டார்.
அதேபோன்று பரிந்துரைக்கு அமைவாகவும் மனித உரிமைகளை பாதுகாப்பதிலும் அரசு மேற்கொண்ட தேசிய திட்ட வரைபையும் அது கண்டுள்ள வெற்றியையும் எடுத்துரைத்தோம். உறுதிமொழிகளை பாதுகாக்க காலம் கடத்தவோ 2012 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் தொடர்பிலான பூகோள மீளாய்வுக் கூட்டத் தொடர் வரையும் காத்துக் கிடக்கவோ போவதில்லை.
இலங்கை விஜயம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் செப்டெம்பர் மாத அமர்வில் அறிக்கையினை சமர்ப்பிப்பார். அப்போது நவநீதம்பிள்ளையை நாங்கள் அங்கு வைத்து சந்திப்போம். யுத்த காலப் பகுதியில் லுயிஸ்ஆபர் போன்றவர்கள் வந்த போதிலும் இதேபோன்று பாரிய மனித உரிமைகள் மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறி போராட்டங்களை முன்னெடுத்தனர் எனத் தெரிவித்தார்.
இன்றும் அதே நிலையே உள்ளது. உறவுகளை காணவில்லை என்று அழுது புலம்பி ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர். இவை திட்டமிட்ட நடவடிக்கைகளாகும். அரசாங்கத்தை பொறுத்த வரையில் தேசிய பாதுகாப்பே முக்கியமானது. வடக்கு விஜயம் தொடர்பில் நவநீதம்பிள்ளை ஒன்றும் கூறவில்லைஎனவும் தெரிவித்தார்.
அவருக்கு கண்ணிருந்தால் அப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் கண்டிருப்பார். ஏனெனில் யுத்தம் முடிவடைந்து நான்கு வருடம் என்ற குறுகிய காலப்பகுதியில் வடபகுதி கண்டுள்ள முன்னேற்றங்கள் கண்ணுள்ள அனைவருக்கும் தெரியும் எனக் கூறினார்.
No comments:
Post a Comment