Monday, August 12, 2013

வேட்பாளர்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பம்! :-தேர்தல் வன்முறைகளை தடுக்க விசேட செயற்றிட்டம்!

Monday, August 12, 2013
இலங்கை::வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக  தேர்தல் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
 
இதற்கமைய இன்று யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் இதற்கான கருத்தரங்குகள் நடத்தப்படவுள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் நியூஸ் பெர்ஸ்டுக்கு தெரிவித்துள்ளார்.
 
தேர்தல் பிரசாரங்களின்போது பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது விளக்கமளிக்கப்படவுள்ளதாகவும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் கூறியுள்ளார்.
 
தேர்தல் வன்முறைகளை தடுக்க விசேட செயற்றிட்டம்!
 
தேர்தல் வன்முறைகளை தடுப்பதற்காக விசேட செயற்றிட்டமொன்றை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
புலனாய்வுப் பிரிவினரை பயன்படுத்தி தேர்தல் வன்முறைகள் இடம்பெறுவதற்கு முன்னரே தடுப்பதற்கான ஒழுங்குகளை செய்துள்ளதாக தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்கு
பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் காமினி நவரத்ன கூறுகின்றார்.
 
தேர்தல் நடைபெறவுள்ள மாவட்டங்களிலுள்ள பிரதிநிதிகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களின் ஒத்துழைப்பும் இதற்காக பெறப்பட்டுள்ளது.
 
தேர்தல் சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் இதுவரை 10 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு  கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் காமினி நவரத்ன குறிப்பிட்டுள்ளார்.
 
குருநாகல் மாவட்டத்தில் 5 முறைப்பாடுகளும், யாழ் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு முறைப்பாடுகளும், கண்டியில் ஒரு முறைப்பாடும் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

No comments:

Post a Comment