Monday, August 12, 2013
புதுடில்லி::ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, தன் கட்சியை, பா.ஜ.,வுடன் இணைத்தார்.
புதுடில்லி::ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, தன் கட்சியை, பா.ஜ.,வுடன் இணைத்தார்.
இது தொடர்பான அறிவிப்பை, பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், முன்னாள் தலைவர்
நிதின் கட்காரி, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜெட்லி ஆகியோர் முன்னிலையில்,
டில்லியில் நேற்று வெளியிட்டார்.முன்னதாக, ராஜ்நாத் சிங் வீட்டில், பா.ஜ., மூத்த
தலைவர்களுடன் சாமி, ஆலோசனை நடத்தினார். அப்போது, ஜனதா கட்சியை, பா.ஜ.,வுடன் இணைக்க
ஒப்புக் கொண்டதை அடுத்து, அறிவிப்பை வெளியிட்டார்.
இணைப்பு செய்தியை வெளியிட்ட சாமி கூறுகையில், ""பா.ஜ., தலைவர்கள், என்னை
அவர்கள் கட்சியில் சேர்க்க சம்மதம் தெரிவித்ததில், மகிழ்ச்சி அடைகிறேன். நாடு,
தற்போதுள்ள இக்கட்டான நிலையில், ஒற்றுமையாக செயல்பட வேண்டியது அவசியம். என்
கட்சியினருடன் சேர்ந்து, புதிய இந்தியாவை உருவாக்க, பா.ஜ., தலைவர்களுடன்
ஒருங்கிணைந்து செயல்படுவேன்,'' என்றார்.
பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் கூறுகையில், ""பா.ஜ.,வுடன், ஜனதா கட்சியை இணைக்க,
சாமி முடிவு செய்துள்ளார். அதை நான் ஏன் ஏற்றுக் கொண்டுள்ளேன். சாமியும், அவரின்
கட்சியும், பா.ஜ.,வுடன் இணைவது, கட்சிக்கு வலு சேர்க்கும் என, நம்புகிறேன்,''
என்றார்.மத்திய அரசில் முன்னர், கேபினட் அமைச்சராக பதவி வகித்துள்ள சுப்ரமணியசாமி,
திட்ட கமிஷன் உறுப்பினராகவும், ஐந்து முறை எம்.பி.,யாகவும் இருந்துள்ளார்.
ஜனதா கட்சி வரலாறு:
ஜனதா கட்சி தலைவராக இருந்த சுப்ரமணிய சாமி, பா.ஜ.,
வுடன் நேற்று இணைந்தார். ஜனதா கட்சியையும் பா.ஜ., வுடன் இணைத்தார். சுதந்திர
இந்தியாவில் தொடர்ந்து 30 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த காங்., கட்சியை வீட்டுக்கு
அனுப்பிய பெருமை ஜனதா கட்சிக்கு உண்டு.
இந்திராவுக்கு சவால்:மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சிக்காலத்தில் (1975
ஜூன் 26 - 1977 மார்ச் 21) வரை, 21 மாதங்கள் நாட்டில் "நெருக்கடி நிலை' அமலில்
இருந்தது. இதனை எதிர்த்து பீகாரைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் நாராயண், ஜனதா கட்சியை
தொடங்கினார். காங்., கட்சியை வீழ்த்த, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள
வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து காங்., (ஓ), பாரதிய ஜன சங், பாரதிய
லோக் தள், காங்., (ஆர்), சுதந்திரா கட்சி, சோசலிஸ்ட் கட்சி, பாரதிய கிராந்தி தள்,
உள்ளிட்ட பல கட்சிகளை ஜனதா கட்சியின் கீழ் ஒன்றிணைத்தார்.
இந்த வலிமையான கூட்டணி இந்திராவை எதிர்த்து களம் கண்டது. நெருக்கடி நிலை
முடிந்த பின், ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் தேர்தலை சந்திந்த ஜனதா கட்சி ஆட்சியை
பிடித்தது. சுதந்திரம் அடைந்து 30 ஆண்டுகள் கழித்து, காங், இல்லாத ஒரு கட்சியின்
பிரதமராக, மொராஜி தேசாய் 1977 மார்ச் 24ல் பதவியேற்றார்.
மூன்று பிரதமர்கள்:
இதன்பின், கருத்து வேறுபாடு காரணமாக பல தலைவர்கள்
ஜனதாகட்சியில் இருந்து விலகினர். இக்கட்சியில் பணியாற்றிய தலைவர்களில் சந்திரசேகர்,
வாஜ்பாய், தேவகவுடா ஆகிய மூன்று பேர் பிரதமர்களாக உருவாகினர். அத்வானி துணை
பிரதமராக பதவி வகித்தார். இதில் வாஜ்பாய், காங்., அல்லாத ஒரு பிரதமர் ஐந்து
ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்த பெருமையை பெற்றார்.
இதன் பின், ஜனதா என்ற வார்த்தையை பயன்படுத்தி பிஜூ ஜனதா தளம், பாரதிய ஜனதா
கட்சி, ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய
கட்சிகள் தோன்றின.
கடைசியாக சுப்ரமணிய சாமி:
இதன்பின் ஜனதா கட்சிக்கு சுப்ரமணிய சாமி தலைமை
யேற்றார். இதன் முக்கிய தலைவர்களாக ஜகதீஷ் ஷெட்டி, அரவிந்த் சதுர்வேதி, லட்சுமிபாய்
நளபாத், அஜய் ஜாகா, மனோஜ் மேக்தா இருந்தனர். இக்கட்சி தமிழகம், ஆந்திரா, கர்நாடகம்,
கேரளா, மகாராஷ்டிரா, சண்டிகார், டில்லி ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வந்தது.
நேற்று பா.ஜ., வுடன் இணைந்தது.
No comments:
Post a Comment