Wednesday, July 3, 2013

புலிகளின் முன்னாள் பொறுப்பாளர்கள் கே.பி. தமிழினி மற்றும் தயா மாஸ்டர் ஆளும் கட்சியின் சார்பில் போட்டி?

Wednesday, July 03, 2013
இலங்கை::புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன்,  புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவு பெண் தலைவி மற்றும் அந்த அமைப்பின் முன்னாள் ஊடகப் பேச்சாளா தயா மாஸ்டர் ஆகியோர் எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளதாக  தகவல் வெளியிட்டுள்ளது.

புலிகளின் முன்னாள் நிதிப்பொறுப்பாளரும் ஆயுத கொள்வனவாளருமான கே.பி' என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன்,  புலிகளின் அரசியல் துறை மகளீர் பிரிவு முன்னாள்  பொறுப்பாளரான  'தமிழினி' என்றழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகாமி மற்றும் 'தயா மாஸ்டர்' என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி ஆகியோர் வடமாகாண சபைக்கான தேர்தலில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

வட மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக இவர்கள் விண்ணப்பித்துள்ள போதிலும் கட்சி வேட்பாளர் நியமனக்குழு முன்னிலையில் இவர்கள் தோன்றவேண்டியிருக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இந்த மூவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றங்கள் எதுவும் இவர்களை குற்றங்காணவில்லை. எனவே, வடமாகாண தேர்தலில் போட்டியிடுவதற்காக இவர்கள் செய்துள்ள விண்ணப்பங்களை கருத்தில் எடுக்காமல் விடுவதற்கான காரணமெதுவுமில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இவர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துக்கொண்டு ஒரு கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில், வடமாகாண சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பதற்காக தயா மாஸ்டர் உதவிசெய்வாரென தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதி யுத்தத்தின் போது படைகளிடம் தயாமாஸ்டர் சரணடைந்தார் என்பதுடன் கே.பி, இலங்கை புலனாய்வு பிரிவினரால் 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி தாய்லாந்தில் கைது செய்யப்பட்டார்.

 புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி தமிழினி அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்தார். புனர்வாழ்வளிக்கப்பட்ட இவர் 2013 ஆம் ஆண்டு ஜுன் 26 ஆம் திகதி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 
குறித்த மூன்று முன்னாள் புலி உறுப்பினர்களுக்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு உள்ளதாகவும் இதனால் அவர்கள் தேர்தலி;ல் போட்டியிடுவதில் தவறில்லை எனவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 
குறித்த மூவரும் முதலில்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்
 
எனினும் இந்த மூவரில் தயா மாஸ்ரர் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. தமிழினி மீண்டும் அரசியல் வாழ்வில் பிரவேசிக்க விரும்பவில்லை எனவும் அமைதியான குடும்ப வாழ்வை நேசிப்பதாகவும் தனக்கு நெருங்கியவர்களிடம் தெரிவித்திருப்பதாக  தெரிய வருகிறது.
 
இதேபோல் கே.பியும் தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ அதற்கான விண்ணப்பத்தை அரசாங்கத்திடம் சமர்ப்பித்து இருப்பது குறித்தோ தகவல்கள் எதுவும் உறுதிப்படுத்தவில்லை.

No comments:

Post a Comment