Wednesday, July 3, 2013

முத்தரப்பு கிரிக்கெட் போட்டி: 161 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி!

Wednesday, July 03, 2013
கிங்ஸ்டன்::முத்தரப்பு கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இலங்கை வீரர்கள் ஜெயவர்த்தனே, தரங்கா சதம் விளாசினர். இந்தியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் இடையிலான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இருமுறை மோத வேண்டும். இந்தியா, இலங்கை அணிகள் தங்களது தொடக்க ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீசிடம் தோல்வி அடைந்தன.

இந்த நிலையில் 3-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் கிங்ஸ்டனில் நேற்று சந்தித்தன. தசைப்பிடிப்பு காரணமாக தொடரில் இருந்து இந்திய கேப்டன் டோனி விலகி விட்டதால், அவருக்கு பதிலாக விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்றார். ஒரு நாள் போட்டியில், இந்தியாவின் 22-வது கேப்டன் கோலி ஆனார்.

டோனிக்கு பதிலாக முரளிவிஜய் வாய்ப்பு பெற்றார். வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமார் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஷமி அகமது சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் இரு மாற்றமாக ஜீவன் மென்டிஸ், அஜந்தா மென்டிஸ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக செனநாயக்கே, குசால் பெரேரா இடம் பெற்றனர்.

டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் கோலி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்படி மஹேலா ஜெயவர்த்தனேவும், தரங்காவும் இலங்கையின் இன்னிங்சை தொடங்கினர். அவசரம் காட்டாமல் இருவரும் இந்திய பந்து வீச்சை நிதானமாக எதிர்கொண்டனர். ஏதுவான பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு ஓட விட்டனர். இருவரும் இலங்கை அணிக்கு வலுவான தொடக்கம் அமைத்து தந்தனர்.

தரங்கா 22 ரன்கள் எடுத்த போது, ஒரு நாள் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்த 9-வது இலங்கை வீரர் என்ற சிறப்பை பெற்றார். ஜெயவர்த்தனே 25 ரன்களில் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை முரளிவிஜய் தவற விட்டார். இதனால் இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் பெரும்பாடு பட்டனர்.

அபாரமாக ஆடிய ஜெயவர்த்தனே தனது 17-வது சதத்தை பூர்த்தி செய்தார். ஸ்கோர் 213 ரன்களை எட்டிய போது இந்த ஜோடி பிரிந்தது. ஜெயவர்த்தனே 107 ரன்களில் (112 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) அஸ்வின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

இந்தியாவுக்கு எதிராக இலங்கை ஜோடி ஒன்று முதல் விக்கெட்டுக்கு சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அதிகபட்சமாக தரங்கா 174 ரன்கள் எடுத்தார். மேத்யூஸ் 44 ரன்கள் எடுத்தார்.

இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் எடுத்தது.

349 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்ப முதலே தடுமாறத் தொடங்கின. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மாவும், தவானும் களம் இறங்கினர்.

இந்திய வீரர்களின் ரன்கள் விவரம்:-
ரோஹித் ஷர்மா - 5, தவான் - 24, விஜய் - 30, கோஹ்லி - 2, கார்த்திக் - 22, ரெய்னா - 33, ஜடேஜா - 49, அஸ்வின் - 4, சமி அகமத் - 0, ஷர்மா- 2 யாதவ் - 0.

44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 187 ரன்கள் எடுத்தது. இதனால், இலங்கை அணி 161 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் விருது இலங்கை வீரர் தரங்காவிற்கு வழங்கப்பட்டது.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment