Monday, July 1, 2013

புலிகளின் தலைவர் பிரபாகரன் வரலாற்றில் எதனை செய்தாரோ அதனையே தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் செய்துவருகின்றார்:கெஹெலிய ரம்புக்வெல!

Monday, July 01, 2013
இலங்கை::புலிகளின் தலைவர் பிரபாகரன் வரலாற்றில் எதனை செய்தாரோ அதனையே தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் செய்துவருகின்றார். தாங்கள் ஜனநாயக செயற்பாட்டில் அக்கறை கொள்ளவில்லை என்பதனையும் ஜனநாயக விரோதமாகவே செயற்படுவோம் என்பதனையும் மீண்டும் ஒருமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதிபடுத்தியுள்ளது என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

பிரபாகரனின் கொண்டிருந்த கருத்தியலை தமிழ்க் கூட்டமைப்பு தொடர்ந்து கொண்டு செல்கின்றது என்பது தெரிவுக்குழு குறித்த அவர்களின் முடிவின் ஊடாக தெரியவந்துள்ளது. மேலும் பாராளுமன்றத் தெரிவுக்குழு என்பது ஒரு திறந்த மேடையாகும். யார் வந்தாலும் வராவிடினும் அதன் செயற்பாடுகளை அரசாங்கம் திட்டமிட்டபடி ஆரம்பிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு திருத்தங்கள் மற்றும் 13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்துகொள்வதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளமை தொடர்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றக்கூட்டத்தின்போதே தெரிவுக்குழுவில் கலந்துகொள்வதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆளும் கட்சியினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான ஆளும் கட்சியின் பிரதிநிதிகள் 19 பேர் பெயரிடப்பட்டுள்ளனர். எனினும் ஐக்கிய தேசிய கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் இந்தத் தெரிவுக்குழுவில் பங்குப்பற்றப்போவதில்லை என அறிவித்துள்ளன.

No comments:

Post a Comment