Tuesday, July 2, 2013

5 சதவீத பங்குகள் விற்க எதிர்ப்பு என்எல்சி ஸ்டிரைக் நாளை தொடக்கம் ஊழியர்கள் இன்று உண்ணாவிரதம் 4ம் தேதி கடையடைப்பு!

Tuesday, July 02, 2013
இலங்கை::வடலூர்::நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க எதிர்ப்பு தெரிவித்து, நாளை இரவு தொழிலாளர்கள் ஸ்டிரைக் தொடங்குகின்றனர். இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. தொழிலாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வர்த்தகர்கள் 4ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர்.

பொதுத் துறை நிறுவனமான என்எல்சியின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க கடந்த 21ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்பட பல்வேறு அரசியல் கட்சியினரும், அனைத்து தொழிற்சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தொமுச, அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள், பொறியாளர், அதிகாரிகள் சங்கங்கள் கூட்டமைப்பு ஒன்றிணைந்து போராட முடிவு செய்தன. இவர்களுக்கு ஆதரவாக ஒப்பந்த தொழிலாளர்களும் களத்தில் குதிக்கின்றனர்.

முதல் கட்டமாக கடந்த 27ம் தேதி மத்திய அரசை கண்டித்து கோரிக்கை அட்டை அணிந்து வேலைக்கு சென்றனர். தொடர்ந்து வாயில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. பின்னர் ஆலோசனை கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று நெய்வேலி கியூ பாலம் அருகில் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. தொமுச பொதுச் செயலாளர் ராசவன்னியன் தலைமை தாங்கினார். அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார். தொழிற்சங்க கூட்டமைப்பை சேர்ந்த அனைத்து தொழிலாளர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். காலை 11 மணியளவில் நெய்வேலி மெயின் பஜார் அருகே அதிமுக சார்பில் பங்கு விற்பனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைச்சர் சம்பத் தலைமை தாங்கினார்.

பரபரப்பான சூழ்நிலையில், நாளை இரவு 10 மணி முதல் என்எல்சி தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்குகிறது. நிரந்தர ஊழியர்கள், பொறியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என சுமார் 32 ஆயிரம் பேர் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். போராட்டம் தொடங்கிய 48 மணி நேரத்தில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நெய்வேலி, மந்தாரக்குப்பம் வர்த்தக சங்கத்தினர் நாளை மறுநாள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்து உள்ளனர். பங்கு விற்பனை முடிவை மத்திய அரசு வாபஸ் பெறாவிட்டால் நெய்வேலி மட்டுமின்றி மாவட்ட அளவில் போராட்டம் பரவும் என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்துக்கு விற்க பரிசீலனை:


என்எல்சி பங்குகளை தனியாருக்கு விற்பதற்கு பதில் அதை தமிழகத்துக்கே விற்கலாம் என்று முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், தமிழக அரசின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார். பங்குகளை தமிழகத்துக்கு விற்பது குறித்து பங்கு பரிவர்த்தனை வாரியமான செபியுடன் விரைவாக ஆலோசனை நடத்துமாறு முதலீட்டு சந்தை பிரிவுக்கு கேட்டு கொள்ளப்படும். மத்திய அரசு விதிகளின்படி தமிழக அரசின் கோரிக்கை ஏற்கும்படி இருந்தால் பரிசீலிக்கப்படும். 5 சதவீத பங்குகளை விற்றாலும் என்எல்சியின் 89 சதவீத பங்கு மத்திய அரசிடமே இருக்கும். நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமான என்எல்சியில் எந்த மாற்றமும் இருக்காது. உற்பத்தி, லாபத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே தொழிலாளர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் ப.சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment