Tuesday, July 2, 2013

மாகாண சபைகளுக்கு காவற்துறை அதிகாரங்களை வழங்கினால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து காவற்துறை மா அதிபர் நளின் இலங்ககோன் பாதுகாப்புச் சபையில் விளக்கம்!

Tuesday, July 02, 2013
இலங்கை::மாகாண சபைகளுக்கு காவற்துறை அதிகாரங்களை வழங்கினால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து காவற்துறை மா அதிபர் நளின் இலங்ககோன் பாதுகாப்புச் சபையில் நடைபெற்ற விசேட கருத்தரங்கில் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்த விசேட கருத்தரங்கில் அமைச்சர்கள் டியூ. குணசேகர, வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
 
மாகாண சபைகளுக்கு காவற்துறை அதிகாரங்களை வழங்குவதால் ஏற்படும் ஆபத்தான நிலைமை குறித்து காவற்துறை மா அதிபர் தனது உரையின் போது தெளிவுப்படுத்தியுள்ளார்.
 
அதேவேளை காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்படுவது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிரேஷ்ட காவற்துறை அதிகாரி ஒருவர், காவற்துறை அதிகாரம் என்பது, வாகன தவறுகளுக்காக சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டு அபராதம் விதிக்கப்படும் அதிகாரம் அல்ல எனவும் அதற்கும் மேற்பட்ட அதிகாரங்களை கொண்டது எனவும் கூறியுள்ளார்.
 
முதலமைச்சர் ஒருவர் தவறு செய்தால், அவரது காவற்துறையினரே அவரை விசாரணை நடத்துவர்,  இந்த குற்றம் குறித்து பொதுமக்களிடம் இருந்து முறைப்பாடு கிடைத்தால், முதலமைச்சரிடம் அனுமதி பெற்ற யாழ்ப்பாணத்திற்கு சென்று, புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்த வேண்டும். அவ்வாறான அனுமதியை முதலமைச்சர் வழங்குவாரா என அந்த அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment