Friday, July 05, 2013
இலங்கை::13 ஆவது அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வதினூடாக இதுவரை மாகாண சபைகள் அனுபவிக்காத புதிய அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு கிடைக்க இருக்கிறது. 25 வரு
டங்களாக மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் இருந்த போதும் அவை செயற்படுத்தப்படாமலே இருந்தது என தகவல் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
13 ஆவது திருத்தத்திலுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் மாற்றப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அரசாங்கம் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஊடாக 13 ஆவது திருத்தத்தில் மாற்றம் செய்ய உத்தேசித்திருப்பதால் 13 ஆவது திருத்தத்தின் பங்காளி நாடான இந்தியாவுக்கு அது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்காகவே அரசாங்க பிரதிநிதியாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியா சென்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றது. இங்கு 13 ஆவது திருத்தம் குறித்தும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயம் தொடர்பாகவும் ஊடகவியலாளர்கள் வினா எழுப்பினர்.
13 ஆவது திருத்தத்திலுள்ள பொலிஸ், காணி அதிகாரங்கள் மாற்றப்பட வேண்டும். இது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு பாரா ளுமன்ற தெரிவுக் குழுவில் முன்வைக்கப்படும் என்றார்.
விஞ்ஞானபூர்வமாக ஆய்வு செய்ததன் மூலம் காணி, பொலிஸ் அதிகாரங்கள் திருத்தப்பட வேண்டுமென அரசாங்கம் கருதுகிறது. மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள போதும் அவை 25 வருடங்களாக செயற்படுத்தப்படாமல் காணப்படுகின்றன. எனவே அதில் யதார்த்தமான மாற்றங்கள் எதிர்காலத்தில் செய்யப்பட வேண்டியுள்ளது. பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை அதிகரித்தோ அல்லது குறைத்தோ வழங்குவதன் மூலம் மாகாண சபைகளுக்கு புதிதாக அதிகாரம் கிடைக்க இருக்கிறது.
இவ்வளவு காலமும் இருக்காத அதிகாரம் புதிதாக மாகாணங்களுக்கு கிடைக்குமென அமைச்சர் இங்கு விளக்கினார். இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரமே 13 வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. இரு நாட்டு தலைவர்கள் கைச்சாத்திட்டதன் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தத்தில் 25 வருடங்களின் பின்னர் அரசாங்கம் திருத்தம் மேற்கொள்ள இருப்பதால் அது குறித்து இராஜதந்திர ரீதியில் இந்தியாவுக்கு அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அரசாங்க பிரதிநிதியாக ஜனாதிபதி, அமைச்சர் பெசில் ராஜபக்ஷவை தெரிவு செய்து இந்தியாவுக்கு அனுப்பியுள்ளார். அவர் அங்குள்ள முக்கிய தலைவர்களைச் சந்தித்து எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவார்.
இந்தியாவுடன் எமக்குள்ள நல்லுறவின் அடிப்படையில் 13 ஆவது திருத்தம் பற்றி அறிவூட்டப்படுகிறது என்றும் அவர் கூறினார். 13 ஆவது திருத்தம் மாற்றப்பட்டால் கச்சதீவை மீளப்பெறுவதாக இந்தியா உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்தியா அவ்வாறு அறிவிக்காது என்றே நம்புகிறோம். இலங்கைக்குப் பாதகமான அறிக்கைகளை இந்திய தலைவர்கள் விடுகின்றனர். கச்சதீவு விவகாரமும் அவ்வாறான அறிவிப்பே என்றும் அவர் குறிப்பிட்டார். சிவசங்கர் மேனனின் வருகை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர் சிவசங்கர் மேனன் இந்தியாவின் செய்தியொன்றுடன் வருவதாக பரவலாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் எவ்வாறான யோசனையை எடுத்து வருகிறார் என்பது குறித்து அவர் வந்த பின் கவனிக்க முடியும் என்றார்.
இந்தியாவுடன் உள்ள நீண்ட கால உறவினடிப்படையிலேயே அந்த நாட்டுடனான சந்திப்புகள் இடம்பெறுகின்றன.
இராஜதந்திர பேச்சுக்கள் எப்பொழுதும் சுமுகமாக இருந்து விடுவதில்லை. தேவையானவற்றை தெரிவு செய்தே பேச்சுக்கள் நடைபெறுகின்றன. பல்வேறு விமர்சனங்கள், கருத்துத் தெரிவிப்புகள் இடம்பெறுகின்றனவென்றும் அவர் கூறினார்.
13 ஆவது திருத்தம் தொடர்பாக ஆராயும் தெரிவுக்குழு 9ம் திகதி கூடுகிறது. இது எவ்வளவு காலம் கூடி ஆராயும் என உறுதியாக கூற முடியாது.
தேவையான அம்சங்கள் பூர்த்தியான பின் 19 ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment