Friday, July 5, 2013

இலங்கையில் புதிய உள்நாட்டு விமான சேவை ஆரம்பம்!

Friday, July 05, 2013
இலங்கை::இலங்கையில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் வசதிகளை அதிகரிக்குமுகமாகவும் அவர்களுக்கு உள்நாட்டுக்குள் நம்பகரமான பயணச் சேவையை வழங்கும் முகமாகவும் “சினமன் எயா” நிறுவனமானது தமது உள்நாட்டு விமான செவையை உத்தியோக பூர்வமாக இன்று (ஜூலை 04) ஆரம்பித்து வைத்தது.
 
இதன் அங்குரார்பண நிகழ்வு வோடர்ஸ ஏஜ்ஜின் நீர்ப்பரப்பு வளாகத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திச் செயலாளர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். சினமன் எயா நிறுவனமானது தமது திட்டமிட்ட விமான சேவையினையும் பயணிகளின் தேவைக்கேற்ற வகையிலான விமான சேவையினையும் நேரடியாகவும், ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் உடன் இணைந்தும் வழங்கவுள்ளது.
 
இதன் முதற்கட்டமாக நேர அட்டவணையைக் கொண்ட விமான சேவையினை கட்டுநாயக்காவில் இருந்து ஆரம்பிக்கும். இதற்கமைய பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கொக்கலை மற்றும் திக்வெல்ல ஆகிய இடங்களுக்கு தினசரி சேவையினை நடாத்தவுள்ளது. இதன் மூலம் தென்பகுதிக்கான பிரதான சுற்றுலா தளங்களான காலி, கொக்கலை, வெலிகம, மிரிஸ்ஸ, திக்வெல்ல மற்றும் தங்காலை ஆகிய இடங்களை அடையக் கூடியதாக உள்ளதுடன் இம்மாத இறுதியில் கண்டிக்கான (பொல்கொல்ல) விமான சேவையையும் ஆரம்பிக்கவுள்ளது. இதன் மூலம் பயணிகள் கண்டி நகரினை 30 நிமிடங்களில் சென்றடையக் கூடியதாக இருப்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
 
மேலும் எதிர்வரும் வாரங்களில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சீகிரியா, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை நகரங்களுக்குமான சேவையையும் ஆரம்பிக்கவுள்ளது.
 
இவ் விமான சேவைக்கான பயணச்சீட்டுக்களை அதன் இணையத்தில் (www.cinnamonair.com) நேரடியாக ஒதுக்கிக் கொள்ள முடிவதுடன் முன்னணி பயண நிர்வாக நிறுவனங்கள், முன்னணி ஹோட்டல்களில் உள்ள பயண ஏற்பாட்டு கவுண்டர்கள் மற்றும் வோட்டஸ் ஏஜ்ஜின் ஊடாகவும் இடஒதுக்கீட்டினை மேற்கொள்ள முடியும். இதற்காக அனைத்து வகையான கடன் அட்டைகளும் ஏற்றுக் கொள்ளப்படுவதுடன் உறுதிப்படுத்தலும் கட்டணம் ஏற்றுக் கொள்ளலும் உடனடியாக செயற்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 
சினமன் எயா நிறுவனத்தின் உரிமையையும் செயற்பாட்டினையும் சப்ரோன் விமானசேவை நிறுவனம் கொண்டுள்ளது. இது முதலீட்டு ஊக்குவிப்பு சபையினால் அனுமதிக்கப்பட்ட ஜோன் கீள்ஸ் ஹோல்டிங், எம்எம்பீஎள் லெஷர் ஹோல்டிங் மற்றும் பொனிஸ் வென்ஷர் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும்.

No comments:

Post a Comment