Thursday, July 4, 2013

13வது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு அமைய மாகாணங்களுக்கு காவற்துறை அதிகாரங்கள் பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும்: கோத்தபாய ராஜபக்ஷ!

Thursday, July 04, 2013
இலங்கை::13வது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு அமைய மாகாணங்களுக்கு காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால்,  முதலமைச்சர்களினால் நிர்வகிக்கப்படும் 9 காவற்துறைகள் உருவாகும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 
 
இந்த காவற்துறை நிலையங்களில் நேரடியான நிர்வாகம் காவற்துறை மா அதிபரிடம் இருந்து மாகாண முதலமைச்சரின் கைகளுக்குள் செல்லும். முதலமைச்சரின் கீழ், பிரதிக்காவற்துறை மா அதிபர் ஒருவர் மாகாண காவற்துறையை நிர்வகிப்பார்.
 
காவற்துறைக்கு ஆட்சேர்ப்பு மாகாணத்திற்குள்ளேயே மேற்கொள்ளும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் இனரீதியான காவற்துறை நிலையங்கள் உருவாகும்.
 
அத்துடன் இந்த நிலைமையானது பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் ஆபத்தான நிலைக்கு நாட்டை இட்டுச் செல்லும். அதேவேளை மாகாண சபையின் காவற்துறைக்கு பொறுப்பாக இருக்கும் பிரதிக்காவற்துறை மா அதிபர் ஒருவர், கொலை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அவரிடம் விசாரணை நடத்த மாகாண முதலமைச்சரிடம் அனுமதிபெற வேண்டும்.
 
விசாரணையை நடத்துவதா இல்லையா என்பது முதலமைச்சரின் விருப்பத்திற்கு அமையவே நடைபெறும். இதன் மூலம் காவற்துறையினரின் ஒழுக்கம், சட்டத்தை பாதுகாக்கும் பணியின் பிரதான நபரான காவற்துறை மா அதிபரின் அதிகாரம் இல்லாமல் போய்விடும் எனவும் பாதுகாப்புச் செயளலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment