Saturday, June 29, 2013

பரிதி இளம்வழுதி - பொன்னுசாமி அ.தி.மு.க.வில் இணைந்தனர்!!

Saturday, June 29, 2013
சென்னை::அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் நேற்று காலை  திமுகவின் முன்னாள் துணை பொதுச்செயலாளரும், தற்போதைய திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், மாநில முன்னாள் அமைச்சருமான பரிதி இளம்வழுதி நேரில் சந்தித்து அதிமுகவில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.
 
 இதேபோல முன்னாள் மத்திய இணையமைச்சரும், பாமகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான. பொன்னுசாமி முதலமைச்சரை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்து அதற்குரிய உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டார்.
 
தி.மு.க. முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி மேலிட தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களாக கட்சி பணியில் இருந்து ஒதுங்கி இருந்தார். அவர் நேற்று திடீரென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
அப்போது அ.தி.மு.க.வில் இணைந்தார். 
 
கடந்த தேர்தலில் அவர் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு தே.மு. தி.க. வேட்பாளர் நல்ல தம்பியிடம் தோல்வியை தழுவினார். தி.மு.க. அமைச்சரவையில் செய்தித்துறை அமைச்சராகவும், துணை சபா நாயகராகவும் பதவி வகித்துள்ளார். இவரது தந்தை இளம்வழுதி தி.மு.க.வின் முன்னணி தலைவராக இருந்தவர். 
 
திமுகவின் அபிமன்யூ என்று வர்ணிக்கப்பட்டவர் பரிதி இளம்வழுதி. 1991 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் முற்றும் முழுதாக தோல்வியடைந்த காலகட்டத்தில் திமுகவில் இரண்டே இரண்டு எம்.எல்.ஏக்களே வெற்றி பெற்றனர்.  ஒன்று கருணாநிதி, மற்றொருவர் பரிதி இளம்வழுதி ஆகும்.
1991 முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக சட்டமன்றத்தில் திமுகவைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே நபர் பரிதி இளம்வழுதி. இதனாலேயே கருணாநிதி பரிதியை அஞ்சாநெஞ்சர் என்றும், திமுகவின் இந்திரஜித் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
 
கடந்த 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திமுக பெ?ருளாளர் ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலாலும் மனக்கசப்பினாலும் திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து பரிதி விலகினார். பரிதி இளம்வழுதியின் ராஜினாமாவை நீண்ட காலத்திற்குப் பிறகுதான் அக்கட்சி ஏற்றது. அவருக்கு பதிலாக திமுக துணைப் பொதுச்செயலாளராக வி.பி.துரைசாமி நியமிக்கப்பட்டார்.
 
பரிதியின் தந்தை இளம்வழுதி திமுகவின் மூத்த உறுப்பினர் மற்றும் கழகப் பேச்சாளர் ஆவார். பாரம்பர்யம் மிக்க திமுக குடும்பத்தைச் சார்ந்தவராகவும், திமுகவின் கடைநிலைத் தொண்டன் என்ற நிலையிலிருந்து பகுதி பொறுப்பு, இளைஞரணியின் 5 மாநில அமைப்பாளர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர். சட்டமன்ற துணைத் தலைவராக இருந்தவர் இவர்.
தி.மு.க மத்திய சென்னை மாவட்டச் செயலாளராக இருந்தவர். மாநில அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருந்தவர். இறுதியாக கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த பரிதி இளம்வழுதி, அதிமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பொன்னுச்சாமி :பாமக முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்னுச்சாமி நேற்று போயஸ்கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார். பாமகவின் தலித் விரோத போக்கை எதிர்த்து சமீபத்தில் கட்சியில் இருந்து இவர் விலகியது குறிப்பிடத்தக்கது. 
 
பொன்னுசாமி மத்திய பெட்ரே?லியத்துறை இணையமைச்சராக இருந்தவர். சிதம்பரம் தெ?குதியில் இரண்டு முறை வென்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.
 
தர்மபுரி கலவரத்தின் போதும், காதல் திருமண எதிர்ப்பு, கலப்புத் திருமண எதிர்ப்பு போன்ற பாமகவின் நிலைபாடுகளின் போதும் தனது அதிருப்தியை பாமக தலைமையிடம் வெளிப்படுத்தியதாகவும் அதை தலைமை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டதாகவும் பொன்னுசாமி தெரிவித்தார்.
 
பாமகவின் பொதுச்செயலாளராக பணியாற்றி வந்த பொன்னுசாமி அக்கட்சியின் செயல்பாடுகள் சரியில்லை என தெரிவித்து தம்முடைய பொறுப்பில் இருந்து விலகியிருந்தார்.தலித் சமூகத்தை சேர்ந்த பொன்னுசாமி பாமகவின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகிய பிறகு, அந்த பதவியில் வடிவேல் இராவணன் என்ற தலித் நியமிக்கப்பட்டார். பாமகவின் தொடர்ச்சியான தலித் விரோத நடவடிக்கைகளால் வடிவேல் இராவணனும் கட்சியை விட்டு வெளியேறினார்.
 
பாமக பொதுச்செயலாளராக ஒரு தலித் மட்டுமே இருக்க வேண்டும் என்பது பாமகவின் விதிமுறைகளில் ஒன்று. வடிவேல் இராவணன் வெளியேறிய பின்பு கடந்த 6 மாதகாலமாக அந்த பொறுப்பில் யாரையும் நியமித்ததாகத் தெரியவில்லை.
 
 
 

No comments:

Post a Comment