Saturday, June 1, 2013

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள தாய்லாந்து பிரதமர் நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்து: ஜனாதிபதி செயலகத்தில் வரவேற்பு!

Saturday, June 01, 2013
இலங்கை::இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள தாய்லாந்து பிரதமர் யின்லக் ஷினவாத்ராவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று செங்கம்பள வரவேற்பளித்து கெளரவித்தார்.
 
இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையில் நேற்று இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றதுடன் இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்துறை, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளின் மேம்பாடு தொடர்பில் நான்கு முக்கிய ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.
 
தாய்லாந்து பிரதமரின் வருகையையொட்டி ஜனாதிபதி செயலகப் பிரதேசம் இலங்கை, தாய்லாந்து தேசியக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் பழைய பாராளுமன்ற முன்றலில் அமைக்கப்பட்டிருந்த விசேட மேடையில் வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
நேற்றுக் காலை ஜனாதிபதி செயலகத்தை வந்தடைந்த தாய்லாந்துப் பிரதமர் யின்லக் ஷினவாத்ராவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வரவேற்றார். தாய்லாந்து பிரதமரைக் கெளரவிக்கும் வகையில் 21 கெளரவ பீரங்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டு இராணுவ அணி வகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
 
அதனையடுத்து ஜனாதிபதி செயலகத்தில் இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் போது இருநாடுகளுக்கும் முக்கியமான பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன.
 
இரு நாடுகள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளில் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் உட்பட அமைச்சர்களும் தாய்லாந்து பிரதிப் பிரதமர் உட்பட அந் நாட்டின் அமைச்சர்களும் தூதுக்குழுவினரும் கலந்துகொண்டனர்.
இப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இருநாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நான்கு உடன்படிக்கைகள் இரு நாட்டுத் தலைவர்கள்
முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.
 
இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச் சீட்டுக்களை வைத்திருப்போருக்கு விசா விலக்களிப்பு சம்பந்தமான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ¤ம் தாய்லாந்து அரசாங்கத்தின் சார்பில் அந் நாட்டின் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சுரபோங் டொலிச்சாக் சய்ருல்லும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
 
இதனையடுத்து மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
இரு நாடுகளுக்குமிடையில் சுற்று லாத்துறை மேம்பாட்டு ஒத்துழைப் புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ¤ம் தாய்லாந்து அரசாங்கத்தின் சார்பில் அந்நாட்டின் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சுரபோல் டொலிச்சாக்சய்ருல்லும் கைச்சாத் திட்டனர்.
 
தாய்லாந்து விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சுக்கும் இலங்கை தொழில் நுட்பம், ஆராய்ச்சி மற்றும் அணு சக்தி அமைச்சுக்குமிடையில் விஞ்ஞான தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதில் இலங்கையின் சார்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் தாய்லாந்து அரசாங்கத்தின் சார்பில் அந்நாட்டுப் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சுரபோல்பொலச்சாக்சக்ருல் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
 
இதனையடுத்து இலங்கையின் வர்த்தக சம்மேளனத்துக்கும் தாய்லாந்தின் வர்த்தக கைத்தொழில் மற்றும் வங்கித்துறை கூட்டிணைந்த குழுவுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.
இதில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சுரேஷ் ஷாவும் தாய்லாந்து வர்த்தக, கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் பெயுர்சட் சர்டி சுட்போலும் கைச்சாத்திட்டனர்.
 
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் பிரதமர் டி. எம். ஜயரட்ண, அமைச்சர்கள் பஷில் ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா, ரிசாட் பதியுதீன், பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, பிரியங்கர ஜயரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 
நேற்றைய தினம் முற்பகல் 11.00 மணியளவில் விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த தாய்லாந்துப் பிரதமர் யின்லக் ஷினவாத்ராவை வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.
 
தாய்லாந்து பிரதமருடன் அந்நாட்டின் பல்வேறு துறைகள் சார்ந்த தூதுக்குழுவினரும் இலங்கை வந்துள்ளனர். தாய்லாந்துப் பிரதமர் இலங்கையில் தங்கியுள்ள நாட்களில் முக்கிய அரசியல் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தைகளை மேற் கொள்ளவுள்ளார்.
 
அவர் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தியமையும் குறிப் பிடத்தக்கது...
 
ஜனநாயகம் மீதான நம்பிக்கை வீழ்ச்சியடைய இடமளிக்காது மக்களின் சுதந்திரத்துக்கும், வாழ்வின் மேம்பாட்டுக்கும் ஜனநாயகத்தைப் பயன்படுத்த வேண்டும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட நாடுகள் என்ற அடிப்படையில் இலங்கையும் தாய்லாந்தும் அரசியல் ரீதியில் வலுப்பெற்று செயற்பட வேண்டும் என தாய்லாந்து பிரதமர் யின்லக் ஷினவாத்ரா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
 
அரசியல் மற்றும் ஜனநாயகத்தை மதித்து செயற்படுகின்ற இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையே நீண்ட உறவு காணப்படுவதாகவும் கூறிய தாய்லாந்து பிரதமர், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவே தான் இலங்கைக்கு விஜயம் செய்ததாகவும் தெரிவித்தார். தாய்லாந்து பிரதமர் யின்லக் ஷினவாத்ரா இலங்கைப் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதையிட்டு நேற்று விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றது.இங்கு உரையாற்று கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
செங்கம்பள வரவேற்பு:-
 
தாய்லாந்து பிரதமரின் வருகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததோடு இருநாட்டு தேசிய கொடிகளினாலும் வீதியின் இருபக்கங்களும் aஅலங்கரிக்கப்பட்டிருந்தன. பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்த தாய்லாந்து பிரதமரை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையிலான குழுவினருக்கு செங்கம்பள வரவேற்பளித்தனர். தாய்லாந்து பிரதமருக்கு சபாநாயகரின் ஆசனத்திற்கு அருகில் விசேட ஆசனமொன்று வழங்கப்பட்டது.
 
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றம் கூடியதைத் தொடர்ந்து சபாநாயகர் பாராளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்தார். மேசையில் தட்டி எம்.பி.க்கள் அவரை வரவேற்றனர். தாய்லாந்து பிரதமர் மேலும் கூறியதாவது,
எனது சகோதரர் உரையாற்றிய 10 வருடங்களின் பின்னர் இலங்கைப் பாராளுமன்றத்தில் உரையாற்ற சந்தர்ப்பம் கிடைத்தது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். எமது இரு நாடுகளுக்குமிடையில் மத, அரசியல் சார்ந்த நெருங்கிய உறவு காணப்படுகிறது.
 
இலங்கை மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் வகையில் செயற்படுகின்றனர்.
 
உலகின் முதலாவது பிரதமர் பிறந்த நாட்டில் உரையாற்ற சந்தர்ப்பம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.
இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்காகவே இலங்கைக்கு விஜயம் மேற்கொண் டுள்ளேன்.
இலங்கையில் புத்த மதத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தாய்லாந்து உதவியுள்ளது. அந்தளவிற்கு இரு நாடுகளுக்குமிடையிலான உறவு நீண்டு காணப்படுகிறது.
 
உலகில் துரித பொருளாதார வளர்ச்சி ஏற்படுகையில் சமூக அநீதிகளையும் காண்கிறோம். இதற்கு புத்த மதம் சிறந்த வழிகாட்டல் வழங்குகிறது. தாய்லாந்தில் சமாதானத்தை நிலைநாட்ட பெளத்த மதம் பங்களித்தது.
எமது இரு நாடுகளும் அரசியல் ரீதியில் ஜனநாயகத்தை மதித்து நடக்கும் நாடுகளாகும். மக்களின் அபிப்பிராயங்களை ஜனநாயக ரீதியிலான ஆட்சியிலும் வாழ்க்கை முறையிலும் பயன்படுத்த வேண்டும். மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு ஜனநாயகத்தை பயன்படுத்த வேண்டும். ஜனநாயகம் என்பது மக்களின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் குறிகாட்டியாகும். இருநாடுகளுக்கும் இது தொடர்பில் அனுபவம் காணப் படுகிறது.
 
எமது இருநாடுகளும் காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றன. சுனாமி அனர்த்தமும் எமது இரு நாடுகளையும் பாதித்தது. இயற்கை அனர்த்தங்களினால் எமது மக்களுக்கு ஏற்படும் ஆபத்தில் இருந்து பாதுகாக்க வேண்டியுள்ளது.
 
உலக சனத்தொகையில் 60 வீதமான மக்கள் ஆசியாவிலே வாழ்கின்றனர். இவர்கள் உலக பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றனர். இந்திய சமுத்திரத்தைச் சூழவுள்ள நாடுகளிடையே பொருளாதார உறவு கட்டியெழுப்பப்பட வேண்டியது முக்கியமாகும். ஆசிய நாடுகளுடனான பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கு தாய்லாந்து கரிசனை காட்டி வருகிறது.
உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக நாம் 66 மில்லியன் டொலரை ஒதுக்கியுள்ளோம். இதனூடாக சுற்றுலா மற்றும் வர்த்தக அபிவிருத்திகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
 
மியன்மாருடன் இணைந்து அந்தமான் தீவில் ஆழ்கடல் துறைமுகமொன்றை அமைக்க நாம் திட்டமிட்டுள்ளோம். இதனூடாக அண்டிய நாடுகளுடனான பொருளாதார உறவுகளை மேலும் மேம்படுத்த இயலுமாகும். இலங்கைக்கும் இதனூடாக தெற்காசிய நாடுகளுடனான தொடர்புகளை மேம்படுத்த வாய்ப்பு ஏற்படும். ஆசிய வர்த்தக நடவடிக்கைகளை உலகிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆபிரிக்க நாடுகளுடனும் தொடர்புகளை பலப்படுத்தி வருகிறோம்.
 
உலக நாடுகளுடன் எமது உறவை மேம்படுத்துவதில் இலங்கை முக்கிய கேந்திரமாக காணப்படுகிறது. இதனூடாக இலங்கை பொருளாதாரத்திற்கு உலக பொருளாதாரம் வரை செல்ல வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இலங்கையின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். எமது இரு நாடுகளுக்கும் பொதுவாக பகிர்ந்து கொள்ளக்கூடிய பல விடயங்கள் உள்ளன.
இலங்கைப் பாராளுமன்றத்தில் உரையாற்றக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பை பெரும் கெளரவமாகவே கருதுகிறேன்.
சபாநாயகர் சமல் ராஜபக்ஷ
 
தாய்லாந்தின் பிரதமராக இருந்த உங்களது சகோதரர் உரையாற்றிய 10 வருடங்களின் பின்னர் நீங்கள் இங்கு உரையாற்றுவது எமது பாராளுமன்றத்திற்கு வரலாற்று முக்கியமான நிகழ்வாகும். தென் ஆசியாவில் உள்ள சிறந்த தலைவிகளில் நீங்களும் குறிப்பிடத்தக்க ஒருவர். நீங்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதன் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு மேலும் பலமடைகிறது.
 
தாய்லாந்தும் இலங்கையும் பெளத்த கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட நாடுகளாகும். எமது நாட்டுக்கு அளித்து வரும் ஒத்துழைப்பு குறித்து நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தாய்லாந்து மற்றும் இலங்கை பாராளுமன்றங் களுக்கிடையிலும் நீண்ட, நெருங்கிய உறவு காணப்படுகிறது.
2012 இல் எமது ஜனாதிபதி தாய்லாந்துக்கு விஜயம் செய்தார். இதனூடாக இருநாடுகளுக்குமிடையிலான உறவு மேலும் வலுவடைந்தது. சர்வதேச மற்றும் வலய மாநாடுகளின் போது தாய்லாந்து வழங்கி வரும் ஒத்துழைப்பையும் வரவேற்கிறோம். 2015 இல் தாய்லாந்தில் பீம்ஸ்டெக் மாநாடு நடைபெறுவது குறித்து வரவேற்கிறோம்.

No comments:

Post a Comment