Saturday, May 25, 2013

பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன் சென்னையில் இன்று மரணம்!

Saturday, May 25, 2013
சென்னை::பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 91. உடல்நல குறைவு காரணமாக கடந்த 12-ந்தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் 19-ந்தேதி வீடு திரும்பினார். மூச்சுக் கோளாறுக்கு வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

1923ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மீனாட்சி அய்யங்காரின் மகனாக மதுரையில் பிறந்த டி.எம். சவுந்தரராஜன், பிரபல இசை வித்துவான் பூச்சி ஸ்ரீனிவாச அய்யங்காரின் மருமகன் ராஜாமணி அய்யங்காரிடம் இசை பயிற்சி பெற்று பல ஆண்டுகளாக மேடை கச்சேரி செய்து வந்தார்.

1950-ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்ற பாடலைப் பாடி திரை இசைப்பாடகராக அறிமுகமான டி.எம். சவுந்தரராஜன் தனது கம்பீர குரலின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தார்.

2003-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், ஏராளமான மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார்.

தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ் என அனைத்து பிரபலங்களுக்கும் குரல் கொடுத்துள்ள டி.எம். சவுந்தரராஜன் ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் மெல்லிசை பாடல்களையும் பாடியுள்ளார்.

எந்த நடிகருக்காக பாடினாரோ, அந்த நடிகரின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்ணில் நிலைநிறுத்தும் ஆற்றல் டி.எம். சவுந்தரராஜனுக்கு மட்டுமே உண்டு என்று தமிழக மக்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

வீரம், காதல், சோகம், துள்ளல், நையாண்டி, தத்துவம் மற்றும் கிராமிய ரசம் சொட்டும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள டி.எம். சவுந்தரராஜன் இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்களுக்காகவும் பாடியுள்ளார்.

2012-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக உருவான ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ என்ற பாடல்தான் டி.எம்.சவுந்தரராஜன் குரலில் பதிவான கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த டி.எம்.சவுந்தரராஜனின் உடல் மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களும், முக்கிய பிரமுகர்களும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment