Saturday, May 25, 2013
இலங்கை::வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் முஸ்லிம்கள் உளப்பூர்வமாக அக்கறை கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் அவ்வாறு வழங்கப்படுகின்ற எந்தவொரு தீர்வும் இன்னும் ஒரு சிறுபான்மையான முஸ்லிம்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக ஆக்கிவிடக் கூடாது. என்பதை சிந்திக்கத் தெரிந்த சகலரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகின்றோம் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.
இலங்கை::வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் முஸ்லிம்கள் உளப்பூர்வமாக அக்கறை கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் அவ்வாறு வழங்கப்படுகின்ற எந்தவொரு தீர்வும் இன்னும் ஒரு சிறுபான்மையான முஸ்லிம்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக ஆக்கிவிடக் கூடாது. என்பதை சிந்திக்கத் தெரிந்த சகலரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகின்றோம் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.
13வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்;
“13வது அரசியலமைப்புத் திருத்
தத்தில் காணி பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், 2 தசாப்தங்கள் கடந்த நிலையிலும் இன்னும் அவ்வதிகாரங்கள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட வில்லை.
அதேநேரம் வட மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறுவதற்கான உத்தியோக பற்றற்ற அறிவிப்புக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டுமா என்ற தலைப்பு சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
ஒருபுறம் தீவிரவாத போக்குடைய பேரினவாத அமைப்புக்கள் அவை நீக்கப்பட வேண்டும் என்றும், சிறுபான்மைகளுக்கு மத்தியில் இருந்து அவை நீக்கப்படக் கூடாது என்ற கருத்துக்களும் பலமாக மோதிக் கொண்டிருக்கின்றன. ஆனால் துரதிஸ்ட வசமாக காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படுவதனால் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற சாதக பாதகங்கள் தொடர்பாக எவரும் வாய் திறப்பதாக தெரியவில்லை.
முஸ்லிம்களின் பிரதான கட்சி என்று தங்களை அழைப்பவர்கள் ஒருதலைப்பட்சமாக இவ்வதிகாரங்கள் வழங்கப்படுவதனால் முஸ்லிம்களுக்கு ஏதாவது சாதக சூழ்நிலை இருக்கின்றதா? அல்லது ஆகக்குறைந்தது பாதகம் இல்லாமலாவது இருக்குமா என்பது தொடர்பாக இதுவரை எந்தவொரு விளக்கத்தினையும் அளிக்கவில்லை.
அதேநேரம் ஆங்காங்கே முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் சில பேனா பிடிப்பவர்களும் காணி பொலிஸ் அதிகாரம் பறிக்கப்படுமானால் அது சிறுபான்மையினருக்குச் செய்கின்ற துரோகம் என்ற பொதுமையான வசனத்தை மாத்திரம் பாவிக்கின்றார்களே தவிர அது தொடர்பாக முஸ்லிம்களுக்கு ஏற்படுகின்ற சாதக பாதக விளைவுகள் தொடர்பாக எந்த விளக்கத்தையும் அளித்ததாகத் தெரியவில்லை.
இன்று முஸ்லிம்கள் ஒருவித மூளைச்சலவை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கு ஒரு புறம் தங்களை முஸ்லிம்களின் பிரதான கட்சி என்று அழைப்பவர்கள் யுத்த நிறுத்த காலத்திலிருந்து சில மேற்கத்தேய சக்திகளின் பின்னணியில் தொடர்சியாக முஸ்லிம்களுக்கு ஏற்படும் விளைவுகள் பற்றி கருத்துக் கூறாது மட்டற்ற அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவாக தொடர்ச்சியாக செய்யப்பட்டு வந்த பிரச்சாரமும் மறுபுறத்தில் சில ஊடகங்கள் தமிழ் தரப்பிற்கு சாதகமானவற்றை சிறுபான்மைகள் என்ற வரைவிலக்கணத்திற்குள் பொதுமைப்படுத்தி செய்து வந்த பிரச்சாரமுமாகும்.
இதன் விளைவாக இன்று முஸ்லிம்கள் காணி, பொலிஸ் அதிகாரங்களினால் தமக்கு ஏற்படப்போகும் தாக்கங்கள் என்ன? என்ற கேள்விகளைக் கூட தமக்குள் எழுப்ப மறந்து அதிகாரப்பகிர்வில் குறைப்புச் செய்வது சிறுபான்மைகளுக்கு எதிரான செயல். எனவே அது முஸ்லிம்களுக்கும் எதிரான செயல் என்ற ஒரு பார்வையை தன்னகத்தே கொண்டு இருக்கின்றார்கள்.
பொலிஸ் அதிகாரத்தை எடுத்துக் கொண்டால் இன்று பாதுகாப்பு தொடர்பாக எழுகின்ற எந்தப் பிரச்சினையானாலும் ஒரேயொரு ஜனாதிபதியைத்தான் அணுக வேண்டும். ஆட்சியில் இருக்கின்ற ஜனாதிபதி சிறுபான்மைகளை அரவணைத்துச் செல்கின்ற ஒருவராக இருந்தால் சிறுபான்மைகள் தமது பாதுகாப்பு தொடர்பாக கவலைப்பட வேண்டிய தேவையே இருக்காது.
மாறாக சிறுபான்மை விரோதப் போக்குடைய ஒருவர் ஜனாதிபதியாக இருந்தாலும் சிறுபான்மைகள் தமது பலத்தை ஒன்று சேர்த்து மத்திய அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கின்ற பொழுது அவர்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அதன் கணிசமான தாக்கத்தைச் உள்வாங்கியே தீர வேண்டும்.
அதேநேரம் சிறுபான்மைகளுக்குள் இருக்கின்ற தனித்தனி சமூகங்களை எடுத்துக் கொண்டாலும் அவர்களின் முழுப்பலமும் மத்தியில் ஒன்று சேர்கின்றபொழுது அது எதிர்க்கட்சியானும், ஆளும் கட்சியானாலும் சரி அதுவும் குறிப்பிடத்தக்க தாக்கத்தைச் செலுத்தியே தீரும். அதே நேரம் மத்திய ஆட்சியாளர்கள் என்னதான் வீறாப்பு பேசினாலும் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு அல்லது அபிப்பிராயங்களுக்கு ஓரளவுக்காயினும் வளைந்து கொடுத்துத்தான் ஆக வேண்டும்.
இலங்கையில் இனவாதக் குழுக்கள் அண்மையில் ஏற்படுத்திய பிரச்சாரங்கள் இலங்கையும் ஒரு மியன்மாராய் மாறிவிடுமோ என்ற அச்சத்தை முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்படுத்தியிருந்தது. அதேநேரம் ஆட்சியாளர்களே இதன் பின்னணியில் இருக்கின்றார்கள் என்றதொரு பலமான குற்றச்சாட்டும் இருந்தது. ஆனால் எது எவ்வாறாயினும் நிலமை இந்தளவுக்காவது கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டுக் கொண்டிருப்பதற்கு பல கோணங்களிலிருந்தும் கொண்டுவரப்பட்ட வெளியுலக மற்றும் உள்ளக அழுத்தங்கள்தான் காரணம் என்று கூறினால் அந்த அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது ஒரேயொரு திசையை நோக்கி என்பது சொல்லாமலே புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
மாறாக இவ்வதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றபொழுது இதேபோன்றதொரு சூழ்நிலை உருவாகுமானால் இதே அழுத்தங்கள் ஒன்பது திசையை நோக்கி செயற்படுத்தப்பட வேண்டியிருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது, ஒரு ஜனாதிபதியை அனுக வேண்டிய இடத்தில் 9 முதலமைச்சர்களை அனுக வேண்டியிருக்கும். எல்லா முதலமைச்சர்களும் சிறுபான்மைக்கு ஆதரவான போக்குடையவர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. மட்டுமல்லாமல் சிறுபான்மைகளின் சனச்செறிவு குறிப்பாக முஸ்லிம்களின் சனச்செறிவு கிழக்கிற்கு வெளியே எந்தவொரு மாகாணத்திலும் குறிப்பிட்டளவு தாக்கத்தைச் செலுத்தக் கூடிய நிலையில் இல்லாத சூழ்நிலையில் அம்முதலமைச்சர்கள் பெரும்பான்மையை திருப்திப்படுத்துவதில்தான் குறியாக இருப்பார்கள். இந்நிலையில் சிறுபான்மைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும்.
13வது அரசியலமைப்புத் திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படாத நிலையில் மாகாண சபைகளின் தாக்கம் இன்னும் இலங்கையில் பூரணமா உணரப்படவில்லை. காணி பொலிஸ் அதிகாரங்களுடன் முழுமையாக அமுல்படுத்தப்படுகின்ற பொழுது கிழக்கு மாகாணத்தைத் தவிர ஏனைய மாகாணங்களிலுள்ள முஸ்லிம்களின் நிலைமை சட்டிக்குள் போட்ட கறியைப் போன்றதாக இருக்கும். பொலிஸ் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்ததன் பின்பு மத்திய அரசாங்கமும் நினைத்த மாத்திரத்தில் தலையிட முடியாது.
சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களும் மத்திய அரசாங்கத்தில்தான் தாக்கத்தைச் செலுத்துமே தவிர மாகாண சபைகளில் குறிப்பிடத்தக்க தாக்கம் செலுத்த மாட்டாது.
எனவே எல்லாம் நடந்து முடிந்ததன் பின்புதான் மத்திய அரசாங்கமும் வந்து என்ன நடந்தது. என்று கேட்கின்ற நிலை வரும்.
அதேநேரம் 22 வருடம் அகதி வாழ்க்கை வாழ்ந்து மீண்டும் திரும்பிவந்த மக்களுக்கு தமது குடியிருப்பு காணிகளும் பறிபோன நிலையில் குடியிருக்க மாற்று காணிகளும் இல்லாத நிலையில் காட்டையாவது துப்பரவு செய்து வாழுவோம் என்று சென்ற மக்களுக்கு அங்கு ஏற்படுத்தப்பட்ட எதிர்ப்புக்களும், தடைகளும் முஸ்லிம்களின் கண்களை அகலத் திறந்திருக்கின்றன.
இந்நிலையில் காணி பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுகின்ற பொழுது வட பகுதி முஸ்லிம்களின் எதிர்காலம் பாரிய கேள்விக்குறியாகி விடுமோ? என்ற அச்சம் இருக்கின்றது.
மறுபுறத்தில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் காணிகள் தமிழ் தரப்பினரிடையேதான் பறிபோயிருக்கின்றன. அதேநேரம் அவற்றை மீட்டெடுப்பதற்கான முயற்சிக்கு தடைக்கற்களாகவும் தமிழ் பிரதிநிதித்துவங்களே செயற்படுகின்றன.
அண்மையில் விடுதலைப் புலிகளின் காலத்தில் கல்குடாத் தொகுதியில் பறிபோன முஸ்லிம்களின் காணிகளை மீழ் வரையறை செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் எவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலத்த எதிர்ப்பினைத் தொடந்து செயற்படுத்த முடியாமல் போயின என்பது நாடறிந்த விடயமாகும்.
எனவேதான் காணி, பொலிஸ் அதிகார விடயத்தில் முஸ்லிம்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. தமிழ் மக்களின் உணர்வுகள் உள்வாங்கப்படுகின்ற அதேவேளை முஸ்லிம்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகாத வகையில் தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது.
எனவே, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இது தொடர்பாக விரிவான கலந்துரையாடல்களை சமூகத்தின் பல மட்டங்களிலும் செய்ய இருக்கின்றது. அதனைத் தொடர்ந்தே தமது இறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்குமே தவிர சில முஸ்லிம் அரசியல் கட்சிகள் தெரிவிப்பது போன்று வட மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருந்தால் என்ன இல்லா விட்டால் என்ன? தேர்தல் நடாத்தப்பட வேண்டும். அதேபோன்று முஸ்லிம்கள் எக்கேடு கெட்டால் என்ன காணி பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டே ஆக வேண்டும். அதனைத்தான் மேற்கத்தேய சக்திகளும் எதிர்பார்க்கின்றன என்ற நிலைப்பாட்டை எம்மால் எடுக்க முடியாது” என்றும் ஹமீட் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment