Monday, May 27, 2013

மாவோயிஸ்ட்களின் தாக்குதலில் பலி 27 ஆக உயர்வு!

Monday, May 27, 2013
ராய்ப்பூர்::மாவோயிஸ்ட்களின் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது. கடத்தப்பட்ட சத்தீஷ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் நந்த குமார் படேல் மற்றும் அவரது மகன் உள்பட 10 பேர்கள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல்கள் துப்பாக்கி குண்டுக்காயங்களுடன் நேற்று கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன. 
ஆந்திரா, ஒரிசா, பீகார், சத்தீஷ்கர்,ஜார்க்கண்ட், அசாம், மணிப்பூர், அருணாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தீவிரவாத அமைப்புகள் செயல்படுத்த முடியாத பல கோரிக்கைகளை சாக்குப்போக்காக வைத்து அப்பாவி மக்கள், அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகளை கொன்று குவித்து வருகின்றன.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிந்த சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் கடத்தல், கொள்ளையடித்தல்,படுகொலையில் ஈடுபடுதல் போன்ற ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த மாநிலத்தில் உள்ள ஜக்தால்பூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிமாற்ற யாத்திரை நேற்றுமுன்தினம் நடைபெற்றது. யாத்திரையை முடித்துவிட்டு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள், தலைவர்கள் ஆகியோர் காரிலும் ஜீப்களிலும் ஜக்தால்பூருக்கு திரும்பிக்கொண்டியிருந்தனர். அந்த பகுதியில் வனப்பகுதியும் உள்ளது. இவர்கள் சென்ற வாகனங்கள் சனிக்கிழமை மாலை 5.30 மணி அளவில் தர்பாகாட்டி கிராமத்தை கடந்து சென்றகொண்டியிருந்தனர். அப்போது வனப்பகுதியில் ஒளிந்திருந்து 100-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் வெளியே வந்து யாத்திரைக்கு சென்றுவிட்டு திரும்பியவர்களை வழிமறைத்தனர்.

சாலையில் தடைகளை ஏற்படுத்தினர். மரங்களையும் வெட்டிப்போட்டு தடுத்து நிறுத்தினர். அவர்கள் வந்த வாகனம் செல்ல முடியாமல் நின்றபோது அவர்களை நோக்கி இயந்திர துப்பாக்கிகளால் சுடத்தொடங்கினர். பதிலுக்கு காங்கிரஸ் தலைவர்களுடன் வந்த பாதுகாவலர்களும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை நோக்கி சுட்டனர். ஆனால் சிறிது நேரத்திற்குள் பாதுகாப்பு அதிகாரிகள் வைத்திருந்த துப்பாக்கிக்குண்டுகள் தீர்ந்துவிட்டன. இதை பயன்படுத்திக்கொண்டு மாவோயிஸ்ட்கள் தங்கள் தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தினர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரா கர்மா உடலை துப்பாக்கி தோட்டாக்களால் சல்லடைபோல் துளைத்தனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் இறந்தார். அவரைத்தவிர் அக்கட்சியின் முன்னாள் எம்.பி. கோபால் மாதவன், முன்னாள் எம்.எல்.ஏ., உதயா ஆகியோர் உள்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். 19 பேர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் என்றும் மேலும் 5 பேர் பாதுகாப்பு அதிகாரிகளாவார்கள். காயம் அடைந்தவர்களில் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வி.சி.சுக்லா, பழங்குடியினர் பெண்தலைவர் பூலோ தேவி ஆகியோரும் அடங்குவர்.

வி.சி.சுக்லாவின் உடலில் 3 குண்டுகள் பாய்ந்தன. அவர் ஆபத்தான நிலையில் ஜக்தால்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவசர அறுவை சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை ஸ்திரமாக இருப்பதாக முதல்வர் ராமன் சிங் தெரிவித்தார். இருந்தபோதிலும் உயர் சிகிச்சைக்காக அவர் டெல்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். சத்தீஷ்கர் மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சரான மகேந்திர கர்மா, மாவோயிஸ்ட்களுக்கு எதிராக சல்வாசூடும் என்ற அமைப்பை ஏற்படுத்தி தீவிரமாக செயல்பட்டவர். எனவே அவரை குறிவைத்தே இத்தாக்குதலை நடத்தப்பட்டதாக போலீசார் சந்தேகிக்கப்படுகிறது. மேலும் மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல் அவரது மகன் தினேஷ் மற்றும் பலரை மாவோயிஸ்ட்கள் கடத்தி சென்றுவிட்டனர். அவர்களை தேடும் பணியில் போலீசாரும் பாதுகாப்பு படையினரும் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்தநிலையில் படேல், அவரது மகன் தினேஷ் உள்பட 10 பேர்களை மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல்கள் துப்பாக்கிக்குண்டு காயங்களுடன் கிடப்பதை போலீசாரும் பாதுகாப்பு படையினரும் கண்டுபிடித்து எடுத்துள்ளனர். இவர்களை சேர்த்து மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இவர்களின் உடல்கள் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பஸ்தர் பகுதியில் உள்ள ஜிராம் வனப்பகுதியில் கிடந்தன. மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதலில் 37 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடந்த இடத்தில் பலத்த மழை பெய்து வருவதால் மீட்புபணியில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது என்று சத்தீஷ்கர் மாநில போலீஸ் டைரக்டர் ஜெனரல் ராம் நிவாஸ் தெரிவித்துள்ளார். காணாமல் போன காங்கிரஸ் தொண்டர்கள் ஜக்தல்பூருக்கு திரும்பிவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment