Tuesday, April 16, 2013

காவல்துறையை நவீனமாக்க மத்திய அரசு முன் வர வேண்டும் : ஜெயலலிதா!

Tuesday, April 16, 2013
சென்னை::மாநிலங்களில் உள்ள காவல்துறையை நவீனமாக்க மத்திய அரசு முன் வந்து நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

புது தில்லியில் இன்று நடைபெறும் முதல்வர்களின் மாநாட்டில், தமிழக அரசின் சார்பில் சட்டத் துறை அமைச்சர் முனுசாமி, உள்துறை செயலர் ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். முதல்வர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு முதல்வர்  ஜெயலலிதாவின் உரையை வாசித்த முனுசாமி, மாநில காவல்துறையில் மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள மாற்றங்கள், மாநில நிர்வாகங்கள் ஒப்புக் கொண்டால் மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும். உள்துறை பாதுகாப்பு குறித்து பிரதமர் தலைமையில் நடத்தப்பட்ட மாநாட்டில், முதல்வர்களின் கருத்துக்களைத் தொடர்ந்து, புதிய பரிந்துரைகள் நிறுத்தப்பட்டது. இதே நிலைதான் தற்போதைய மாநாட்டிலும் பின்பற்றப்பட வேண்டும்.

காவல்துறை நிர்வாகம் என்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. தமிழகத்தில், அனைத்து குற்ற நடவடிக்கைகளுக்கும் எதிராக  காவல்துறை உறுதியான நடவடிக்கைகளை எடுத்து, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நல்ல முறையில் நிலை நாட்டி வருகிறது.
தமிழகத்தில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, அனைத்து காவல்நிலையங்களிலும், குற்ற விசாரணை மற்றும் சட்டம் ஒழுங்குக்கு என தனித்தனியாக அமைக்கப்பட்ட காவலர்கள் செயல்பட்டு வருகின்றனர். மேலும், காவலர்களின் பணியிட மாற்ற நிர்வாகங்களை பணியிட மாற்ற ஆணையமே தமிழகத்தில் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் பரிந்துரையில், முனிசிபல் காவல் படை உருவாக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதுபோன்ற அமைப்பு இந்தியா மாநிலங்களுக்கு பொருந்தாது. இதனால் ஒருங்கிணைப்பு பாதிக்கப்பட்டு பிரச்னைகள் அதிகரிக்கும்.

பல மாநிலங்களில், நிதிப்பற்றாக்குறை காரணமாக, காவல்துறையில் லட்சக்கணக்கில் காலிப்பணியிடங்கள் உள்ளன. தற்போது இந்தியாவில் 750 குடிமக்களுக்கு ஒரு காலவர் என்ற நிலையே உள்ளது. மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் நிதியை உயர்த்தினால், மாநிலங்களும், காவலர் பணியிடங்களை நிரப்ப வசிதியாக இருக்கும். மேலும், காவல்துறை வாகனங்களையும், தகவல் தொழில்நுட்ப சாதனங்களையும் மேம்படுத்த, மத்திய அரசு முன் வந்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு தற்போதிருக்கும் காவல்துறைக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கும் பட்சத்தில், மாநிலங்களில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற காவல்துறையே போதுமானதாகும்.

சில சமயங்களில், மாநில சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் போது, மாநிலங்கள் கோராமலேயே, மத்தியப் படைகள் செயல்பட அனுமதிப்பதும், சிபிஐயுக்கு தற்போதுள்ள அதிகாரங்களை கூடுதலாக்குவதும் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகும்.
தமிழகத்தில் நன்கு சிறந்த தொழில்நுட்பங்களைக் கூடிய தடய அறிவியல் துறை செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.
    

No comments:

Post a Comment