Friday, April 26, 2013

தமிழ்நாட்டு சம்பவங்கள் மூலம் இலங்கை - இந்திய உறவு பாதிக்காது: இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா!

Friday, April 26, 2013
இலங்கை::தமிழ் நாட்டில் இலங்கையைச் சேர்ந்த பெளத்த பிக்குமார் தாக்குதலுக்குள்ளான இரு சம்பவங்கள் வேதனைக்குரியவை என்றும் இந்த சம்பவங்கள் எவ்வகையிலும் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான வரலாற்று, கலாசார மற்றும் நாகரீக தொடர்புகளையோ இருநாட்டு மக்களுக்கிடையிலான நட்புறவையோ சீர்குலைக்காது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடைபெற்றவுடன் தமிழ்நாட்டு மாநில அரசாங்கம் குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக இந்திய மத்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி சட்ட நடவடிக்கை எடுத்திருப்பதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா மேலும் கூறினார்.

மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களையும் இராமன்ன பிரிவின் மகாநாயக்கரையும் சந்தித்த போதே இந்திய உயர்ஸ்தானிகர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார். இந்த சந்திப்பின் போது பெளத்த பீடத்தின் மூன்று மகாநாயக்க தேரர்களும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 2500 வருடங்களுக்கு முன்பிருந்து அறிவியல், கலாசார, மத மற்றும் மொழி ரீதியான நட்புறவு வலுப்பெற்றுள்ளதென்றும் கி.மு. மூன்றாவது நூற்றாண்டில் இந்தியாவின் இளவரசரான அரஹாட் மஹிந்த பெளத்தத்தை அறிமுகம் செய்ததில் இருந்து இவ்விரு நாடுகளுக்கிடையில் நட்பு வலுபெற்றிருப்பதாக கூறினர். இந்தக்கருத்துக்கு பதிலளித்த இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா; தமிழ் நாடு உட்பட இந்தியாவுக்கு வரும் சகல இலங்கையருக்கும் பூரண பாதுகாப்பு அளிப்பதற்கும் அவர்களின் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிப்பதற்கும் இந்திய மத்திய அரசாங்கமும் தமிழ்நாட்டு மாநில அரசாங்கமும் நடவடிக்கை எடுத்துள்ளது.

பெளத்த தர்மத்தை அடிப்படையாக வைத்து கலாசார, கலை, இலக்கிய, தத்துவஞான துறையில் இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல ஒருமைப்பாடு இருக்கின்றது.

இந்தியா இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்துகிறது. 34 வருட இடைவெளிக்கு பின்னர் கபிலவஸ்து புனித சின்னங்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. குப்தா மன்னன் காலத்தைச் சேர்ந்த 16அடி புத்தபெருமானின் சிலையை சர்வதேச பெளத்த நூதனசாலையை கலாபவனவத்தில் அமைப்பதற்கும் இரு நாடுகள் கூட்டிணைந்து செயற்படுகின்றன. இதில் புத்த பெருமானின் 2600ஆவது சம்புத்த ஜெயந்தி முக்கியத்துவம் பெறுகிறது எனவும் அவர் மேலும் கூறினார். இந்திய உயர்ஸ்தானிகர் இம்மூன்று மகாநாயக்க தேரர்களையும் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்தார்
        

No comments:

Post a Comment