Thursday, April 4, 2013

இலங்கை இராணுவத்தின் அட்டூழியங்கள் தொடர்ந்தால் தமிழ் ஈழம் மலரும்: மேலும் மத்தியில் பாஜக ஆட்சியமைத்தால் இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கை மாறும்: பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா !

Thursday, April 04, 2013
புதுடெல்லி::இலங்கை இராணுவத்தின் அட்டூழியங்கள் தொடர்ந்தால் தமிழ் ஈழம் மலரும் நாள் தொலைவில் இல்லை. மேலும் மத்தியில் பாஜக ஆட்சியமைத்தால் இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கை மாறும் என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்தும் தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பாக சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, இலங்கை இராணுவத்தின் அட்டூழியங்கள் தொடர்ந்தால், தமிழ் ஈழம் மலரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றார்.

மேலும் மத்திய அரசின் அண்டை நாடுகளுடனான வெளியுறவுக் கொள்கை, திருப்திகரமாகவும் அதேசமயம் இரு நாட்டுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையிலும் இருக்க வேண்டும். மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சியமைந்தால் இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கை மாறும்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானத்தின் போது, இந்தியா அமெரிக்கவைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு தானே முன்னின்று தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும்.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எல்லா உதவிகளையும் செய்தது என்று யஷ்வந் சின்ஹா நேரடியாக குற்றம்சாற்றினார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இலங்கைக்கு எதிரான தமிழக சட்டமன்றத் தீர்மானங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது தேசிய கட்சிகள், வட இந்திய கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் என அனைவரும் எதிர்த்தனர். அதில் பாரதிய ஜனதா கட்சியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ராஜபக்சவைப் போர் குற்றவாளி என்று அறிவிக்க வேண்டும் என்பதில் பாஜகவுக்கு உடன்பாடு இல்லை என்று பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார் என்பதை தமிழ் மக்களால் மறக்க முடியவில்லை.

No comments:

Post a Comment