Friday, April 19, 2013

யுத்தம் தொடர்பிலான சகல விடயங்கள் குறித்தும் உள்நாட்டு ரீதியான விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை அரசாங்கம் உருவாக்கியுள்ளது: ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹணே!

Friday, April 19, 2013
இலங்கை::குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்பது நல்லிணக்கமாகாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. குற்றவாளிகளை கண்டு பிடித்து அவர்களுக்கு தண்டனை விதிப்பதனை அரசாங்கம் நல்லிணக்கமாக கருதவில்லை எனவும், காயங்களை ஆற்றுவதே முக்கியமானது எனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.
 
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடாத்தி தண்டனை விதிக்குமாறு இலங்கை மீது மிதமிஞ்சிய அளவில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். உலகின் ஏனைய நாடுகளில் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
 
யுத்தம் தொடர்பிலான சகல விடயங்கள் குறித்தும் உள்நாட்டு ரீதியான விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை அரசாங்கம் உருவாக்கியுள்ளதாகவும், இது சர்வதேச தரத்திலானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
.
சட்ட மா அதிபர் திணைக்களமும், இராணுவ நீதிமன்றமும் இது தொடர்பில் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். உலகின் ஏனைய நாடுகளை விடவும் துரித கதியில் இலங்கையில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமை நிறுவப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
நல்லிணக்க முனைப்புக்களில் நிலவும் சிக்கல்களை அரசாங்கம் புரிந்து கொண்டு செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். முழு அளவிலான நல்லிணக்கத்தை குறுகிய சில ஆண்டுகளில் ஏற்படுத்திவிட முடியும் என்பதில் நம்பிக்கை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரே இரவில் இயல்பு நிலைமையை ஏற்படுத்த முடியும் என எவரும் கருதிவிடக் கூடாது என பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment