Friday, April 19, 2013

ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் மரண தண்டனையை பரிசீலனை செய்ய வேண்டும்: கருணாநிதி!


Friday, April 19, 2013
சென்னை::தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எஸ். பிட்டாவைக் கொலை செய்வதற்காக, 1993ஆம் ஆண்டு டெல்லியில் கார் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் பிட்டா உயிர் தப்பிய போதிலும், ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை நடத்திய, தேவேந்தர்பால் சிங் புல்லாருக்கு புல்லாருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது கருணை மனுவை, 2011ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவராக இருந்த பிரதிபா பாட்டீல் அதனை நிராகரித்தார்.

கருணை மனுவின் மீது முடிவெடுக்கக் கால தாமதமானதால், தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைக் குறைக்க வேண்டுமென புல்லார், உச்ச நீதிமன்றத்தில் 2011 செப்டம்பரில் மனு தாக்கல் செய்து, கடந்த 12-4-2013 அன்று அந்த மனு நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து பஞ்சாப் மாநிலம் முழுவதிலும் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டது. மனநிலை பாதிக்கப்பட்ட புல்லாருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கக் கூடாதென சில மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை எழுப்பியுள்ளன. பஞ்சாப் மாநில ஆளுங்கட்சியான சிரோன்மணி அகாலி தளம் சார்பில் இந்தக் கருத்து வலியுறுத்தப்படுகிறது.

அந்த மாநில முதலமைச்சர், பிரகாஷ் சிங் பாதல் அவர்களும், அவர் மகனும் துணை முதலமைச்சருமான
சுக்பீர் சிங் அவர்களும் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களையும், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அவர்களையும் நேரில் சந்தித்து, புல்லாருக்குக் கருணை காட்டும்படி வலியுறுத்தியுள்ளனர். இந்தப் பிரச்சினை காரணமாக பஞ்சாபில் கொந்தளிப்பான நிலை நிலவுவதாகவும், புல்லாருக்குக் கருணை காட்டுமாறும், அதன்
மூலம் மாநிலத்தில் அமைதியை நிலை நாட்ட உதவிடுமாறும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே அவர்களிடம் செய்தியாளர்கள் இதைப் பற்றிக் கேட்ட போது, “பஞ்சாப் முதல் அமைச்சரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்” என்று கூறியிருக்கிறார். மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு மனித உரிமை ஆர்வலர்களுக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் அளித்திருக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற முதலமைச்சர் முதல் அந்த மாநில மக்கள் அனைவரும் ஒருமனதாகக் குரல் கொடுக் கிறார்கள். ஆனால் தமிழகத்திலே என்ன நிலைமை?

தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப் போவதாகக் கூறப்படும் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய மூவரையும் விடுவிப்பதற்கான தீர்மானத்தை பேரவையில் நிறைவேற்றியபோது ஜெயலலிதா தனது உரையில், அரசியல் அமைப்புச் சட்ட விதி 161இன் கீழ் மாநில முதலமைச்சருக்கு இதில் அதிகாரம் இல்லை என்றும், மாநில கவர்னருக்கும் அதிகாரம்
இல்லை என்றும் சொல்லியிருக்கிறார். இன்று வரை ஜெயலலிதா அதே கருத்தைத்தான், அதாவது இதிலே மாநில முதல் அமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்பதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்.

ஆனால் தமிழகச் சட்டப் பேரவையில் 30-8-2011 அன்று அவர் 110வது விதியின்கீழ் படித்த அறிக்கையில், கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று ஆளுநர் 21-4-2000 அன்று ஒப்புதல் அளித்தார் என்று சொல்லியிருக்கிறார். அதே முறையில்தான் இந்த மூன்று பேரின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டுமென்ற அக்கறையுடன் தமிழக அரசும், ஜெயலலிதாவும் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின்
பரிந்துரைக்கு அனுப்ப வேண்டுமென்று நானும், தமிழகத்திலே உள்ள வேறு சில கட்சிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.

அதைப் போலவே, வீரப்பனின் நண்பர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நால்வருக்கும் கருணை காட்டி, தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி அமைத்திட வேண்டு மென்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.

2007ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மன்றம் தூக்குத்தண்டனைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை முன் வைத்தபோது, அதை 104 நாடுகள் ஆதரித்துக் கையெழுத்திட்டன; இந்தியா உட்பட 39 நாடுகள்தான் அதை எதிர்த்து வாக்களித்தன; ஐ.நா. தீர்மானத்தை யொட்டி உலகின் 90 சதவிகித நாடுகள் தூக்குத் தண்டனையை ரத்து செய்துவிட்டன.
அந்தப் பெரும்பான்மையுடன் இந்தியாவும் இணைய வேண்டாமா?

குற்றவாளிகள் தப்பித்தாலும், நிரபராதிகள் தண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்பதை பொறுப்பிலே உள்ளவர்கள் மனதிலே கொண்டு, இந்த நால்வரின் தூக்குத் தண்டனையையும், மற்றும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையையும் புல்லாரின் தண்டனையை மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும்
போது; இணைத்துப் பரிசீலித்து, தண்டனையை மாற்றி அமைத்திட வேண்டும் என்றும், பொதுவாக தூக்குத் தண்டனையையே அறவே ரத்து செய்ய வேண்டும். அதற்கு வழிகாண மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment