Saturday, April 13, 2013

ஏவுகணை தாக்குதல் திட்டத்தை வடகொரியா கைவிட வேண்டும் அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

Saturday, April 13, 2013
சியோல்::ஏவுகணை தாக்குதல் திட்டத்தை வட கொரியா கைவிட வேண்டும். அப்படி எதுவும் நடக்காமல் தடுக்கும் பொறுப்பு சீனாவுக்கு உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி எச்சரித்துள்ளார்.தென் கொரியா மற்றும் அங்குள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரிய தலைவர் கிம் ஜாங் யுன் மிரட்டல் விடுத்து வருகிறார். இதற்காக எல்லை பகுதிகளில் ஏவுகணைகளை தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் வடகொரியா அணு ஆயுத தாக்குதலிலும் ஈடுபடலாம் என்ற அச்சம் நிலவுகிறது. கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவும் தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, தென் கொரிய தலைநகர் சியோலில், அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

வட கொரியா தனது ஏவுகணை தாக்குதல் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். மிகப் பெரிய தவறை வட கொரிய அரசு செய்ய கூடாது. தாக்குதல் நடத்தினால், சர்வதேச நாடுகளிடம் இருந்து வடகொரியா இன்னும் தனிமைப்படுத்தப்பட்டு விடும். எனவே, போர் பதற்றத்தை தணிப்பது வட கொரியாவுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் நல்லது. இந்த விஷயத்தில் அதன் நட்பு நாடான சீனா தலையிட்டு ஏவுகணை தாக்குதல் திட்டத்தை உடனடியாக கைவிட வடகொரியாவை அறிவுறுத்தவேண்டும்.  கடந்த பிப்ரவரியில் 3வது முறையாக அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வட கொரியா  ஏவுகணை சோதனை நடத்தியதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது.இவ்வாறு கெர்ரி கூறினார்.இந்நிலையில் இன்று கெர்ரி சீனா சென்று அங்குள்ள தலைவர்களிடம் வடகொரிய பிரச்னை குறித்து ஆலோசனை நடத்துகிறார். நாளை ஜப்பான் செல்கிறார்.

No comments:

Post a Comment