Saturday, April 13, 2013

அடுத்தடுத்து டெல்லி அதிர்ச்சி தோல்வி சன் ரைசர்ஸ் 3வது வெற்றி!

Saturday, April 13, 2013
சென்னை::ஐபிஎல்லில் நேற்று இரவு பெரோஷா கோட்லா மைதானத்தில் சன் ரைசர்ஸ் ஐதரபாத் & டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி மளமளவென விக்கெட்டை இழந்தது. முதல் ஓவரிலேயே வார்னரை டக்அவுட்டில் ஸ்டெய்ன் வெளியேற்றினார். ஜெயவர்த்தனே 12, சேவக் 12 ரன்கள் எடுத்து இஷாந்த் ஷர்மா வேகத்தில் வீழ்ந்தனர். அடுத்து வந்த வீரர்களுக்கு அமீத்மிஸ்ரா, ஆனந்த்ஜான், பெரேரா ஆகியோர் கடும் நெருக்கடி கொடுத்தனர்.

ஜூனிஜா 15, போத்தா 9, இர்பான் பதான் 23, மோர்க்கல் 0, நதீம் 0 ரன்களில் பெவிலியனுக்கு நடையை கட்டினர். கேதார் ஜாதவ் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். 20 பந்தில் 2 சிக்சர், 1 பவுண்டரியுடன் 30 ரன் எடுத்து டெல்லி அணி 100 ரன்களை கடக்க உதவினார். முடிவில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது. உமேஷ்யாதவ் 6 ரன்னுடன் களத்தில் இருந்தார். சன் ரைசர்ஸ் தரப்பில் ஸ்டெய்ன், இஷாந்த்ஷர்மா, பெரேரா தலா 2, ஆனந்த்ஜான், அமீத் மிஸ்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் சன் ரைசர்ஸ் பேட்டிங்கை துவக்கியது. அக்ஷாத் ரெட்டி 1 ரன் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். இதையடுத்து களமிறங்கிய சங்ககரா, பார்த்திவ்படேலுடன் சேர்ந்து நிதானமாக ஆடினார். பாத்திவ் படேல் 19 பந்தில் 19 ரன்னும், சங்ககரா 28 பந்தில் 28 ரன்னும் சேர்த்து ஆட்டமிழந்தனர். கேமரூன்ஒயிட் 4, விகாரி 17, ஆசிஷ்ரெட்டி 16 ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர். அதிர்ச்சியளிக்கும் விதமாக பெரேரா வந்த வேகத்தில் 2 ரன்னில் இர்பான் பதான் பந்தில் அவுட்டானார்.

எனினும் அமீத் மிஸ்ரா, ஸ்டெய்ன் ஜோடி பதற்றமில்லாமல் ஆடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றது. கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தில் 2 ரன் அடித்த ஸ்டெய்ன், அடுத்த பந்தில் பவுண்டரி விளாசி வெற்றியை வசப்படுத்தினார். முடிவில் 19.2 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்து சன் ரைசர்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது.அமீத்மிஸ்ரா 16, ஸ்டெய்ன் 9 ரன்னுடன் களத்தில் இருந்தனர். ஆட்டநாயகன் விருது அமீத் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்டது. சன் ரைசர்ஸ் அணிக்கு இது 3வது வெற்றியாகும்.

சொந்த மைதானத்தில் 2 வெற்றிகளை பெற்றிருந்த சன் ரைசர்ஸ், வெளி மைதானத்தில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதேவேளையில் டெல்லி அணி தொடர்ச்சியாக 4வது தோல்வியை சந்தித்துள்ளது.

ஹீரோ கார்னர்

ஆட்டநாயகன் விருது வென்ற அமித் மிஸ்ரா கூறுகையில், கடந்த 2 சீசன்களாகவே பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். தற்போது அது நல்ல பலனை கொடுத்துள்ளது. அணியின் வெற்றிதான் முக்கியம். கேப்டன், பயிற்சியாளர், அணி நிர்வாகம் என அனைவருமே ஆதரவாக உள்ளனர் என்றார்.

கேப்டன்ஸ் கார்னர்

சங்ககரா: கடுமையாக போராடி வெற்றி பெற்றுள்ளோம். 4 ஓவர்களுக்கு முன்னதாகவே ஜெயித்திருக்க வேண்டும். ஆனால் தொடக்கம் எங்களுக்கு சிறப்பாக அமையவில்லை. வெற்றியின் புகழ் அனைத்தும் ஸ்டெய்ன், மிஸ்ரா, ரெட்டி, பார்த்திவ்படேல் ஆகியோரை சாரும். அணியின் ஒட்டுமொத்த பவுலிங்கும் மிரட்டும் விதத்தில் இருந்தது. ஜெயவர்த்தனே: ரன் குவிப்புக்கு மைதானம் மோசமாக இருந்தது. 160 முதல் 170 ரன்கள் வரை குவிக்க முடியும் என கணித்தோம். ஆனால் 140 ரன்கள் குவிக்கும் மைதானம் போல் ஆகிவிட்டது. பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தனர். ஆனால் அதிக ரன்கள் குவிக்காததால் நெருக்கடி கொடுக்க முடியவில்லை. டெல்லி ரசிகர்கள் இந்த சூழ்நிலையிலும் ஆதரவாக உள்ளனர். அவர்களது நம்பிக்கைக்கு மதிப்பளிப்போம்.

எக்ஸ்ட்ராஸ்:

*    டெல்லி அணி தொடர்ச்சியாக 6 தோல்விகளை சந்தித்துள்ளது. கடந்த சீசனில் அந்த அணி 2 ஆட்டங்களில் தோல்வி கண்டிருந்தது.

*    டெல்லி அணி நேற்றைய ஆட்டத்தில் 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த சீசனில் இது 3வது குறைந்தபட்ச ஸ்கோர்.

*    ஐபிஎல் சீசன்களில் டெல்லி அணி 3வது குறைந்தபட்ச ஸ்கோர் இது. இதற்கு முன் 95 மற்றும் 87 ரன்களில் ஆட்டமிழந்துள்ளது.

*   வார்னர் 12வது முறையாக டக்அவுட்டாகி உள்ளார்.

*    இந்த சீசனில் மெய்டன் ஓவருடன் விக்கெட் வீழ்த்திய 2வது வீரர் என்ற பெருமையை ஸ்டெய்ன் பெற்றுள்ளார்.

*    ஸ்டெய்ன் இந்த சீசனில் 4 ஆட்டங்களில் 51 டாட் பந்துகளை வீசியுள்ளார்.

*    அமீத் மிஸ்ரா 5வது முறையாக ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment