Saturday, April 13, 2013

ராஜிவ் கொலையாளிகள் மூவருக்கு நெருக்கடி : பரபரப்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

 
Saturday, April 13, 2013
புதுடில்லி::தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைக்கக் கோரி, காலிஸ்தான் தீவிரவாதி, புல்லார் தாக்கல் செய்த, மேல் முறையீட்டு மனுவை ரத்து செய்த, சுப்ரீம் கோர்ட், "கருணை மனுவை பரிசீலிக்க, தாமதமானது என்ற காரணத்துக்காக, தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைக்க முடியாது' என, தீர்ப்பளித்துள்ளது. இதனால், ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற, மூன்று பேர் தண்டனை குறைப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டில்லியில், 1993ல், கார் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. அப்போதைய, இளைஞர் காங்., தலைவர், எம்.எஸ்.பிட்டாவை குறி வைத்து, இந்த தாக்குதல் நடத்தப்பட்டது; இதில், பிட்டா, உயிர் தப்பினார். அவரின் பாதுகாவலர்கள், இருவர் உட்பட, ஒன்பது பேர் உயிரிழந்தனர்.இந்த தாக்குதலில், காலிஸ்தான் தீவிரவாதி, தேவிந்தர்லால் புல்லார் சிங்கிற்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஜெர்மனிக்கு தப்பிச் சென்ற புல்லார், அந்த நாட்டிடம், அடைக்கலம் கேட்டார். இதை ஏற்க மறுத்த, ஜெர்மனி அரசு, புல்லாரை, இந்தியாவுக்கு நாடு கடத்தியது; அவர், கைது செய்யப்பட்டார். கடந்த, 2001ல், டில்லி கீழ் கோர்ட், அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது.இதை எதிர்த்து, அவர் தாக்கல் செய்த, மேல் முறையீட்டு மனுவை, சுப்ரீம் கோர்ட், தள்ளுபடி செய்தது. இதையடுத்து, 2003ல், தூக்கு தண்டனையை குறைக்கக் கோரி, புல்லார் சார்பில், ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது.

எட்டு ஆண்டுகளுக்கு பின், 2011ல், ஜனாதிபதியாக இருந்த, பிரதிபா, புல்லாரின் கருணை மனுவை நிராகரித்தார். தன் கருணை மனுவை பரிசீலிப்பதற்கு, ஜனாதிபதி, எட்டு ஆண்டுகள் அவகாசம் எடுத்ததை காரணம் காட்டி, தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்படி, சுப்ரீம் கோர்ட்டில், புல்லார் சார்பில், மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.கடந்தாண்டு ஏப்ரலில், இந்த வழக்கின் விசாரணையை முடித்த, சுப்ரீம் கோர்ட், தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த வழக்கில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதிகள், ஜி.எஸ்.சிங்வி, ஜே.எஸ்.முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய,"பெஞ்ச்' தீர்ப்பளித்தது.
தீர்ப்பில், நீதிபதிகள் கூறியதாவது:
 
கருணை மனுக்களை விசாரிப்பதில் கால தாமதம் ஏற்படுவது, தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைப்பதற்கான காரணங்களில் ஒன்றாக இருந்தாலும், "தடா' வழக்குகளிலோ, அது போன்ற வழக்குகளிலோ, இந்தக் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த வழக்குகள், முற்றிலும் வித்தியாசமான தன்மையைக் கொண்டுள்ளன. தனிப்பட்ட காழ்ப்போ, சொத்துப் பிரச்னையோ, சண்டையோ ஏற்பட்டு, அவற்றின் மீது போடப்பட்ட வழக்குகளின் தன்மையுடன், தடா வழக்குகள் ஒத்துப் போகாது.இப்போது கருணையை எதிர்பார்ப்பவர்கள், துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், பயங்கர ஆயுதங்களுடன் அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும்போது, பாதிக்கப்படும் மக்களின் உறவினர்களையும், குழந்தைகளையும், ஒரு கணம் கூட, கருத்தில் கொள்ளாமல், மனித உயிர்களை மதிக்காமல் செயல்பட்டவர்கள்.புல்லார் தாக்கல் செய்த மனுவில், அவருக்கான தூக்கு தண்டனையை, ஏன் குறைக்க வேண்டும் என்பதற்கு தேவையான, சட்ட ரீதியான ஆவணங்கள் எதுவும் இல்லை. மேலும், கருணை மனு மீது, ஜனாதிபதி தாமதமாக முடிவு எடுத்தால், அந்த ஒரு காரணத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து, தூக்கு தண்டனையை,ஆயுள் தண்டனையாகக் குறைக்க முடியாது. எனவே, புல்லார் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள், தீர்ப்பில் தெரிவித்தனர்.

ராஜிவ் கொலையாளிகள்?
சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு, இதே காரணத்துக்காக, கோர்ட்டில் நிலுவையில் உள்ள, மற்ற பல வழக்குகளிலும், தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர், ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை கைதிகள், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.தங்கள் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க, 10 ஆண்டுகளுக்கு மேல், தாமதம் ஏற்பட்டதால், தங்களின் தூக்கு தண்டனையை குறைக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில், இவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் நிலுவையில் உள்ளன.அதேபோல், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட, சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள், நான்கு பேரின் கருணை மனுக்களையும், கடந்த பிப்ரவரியில், ஜனாதிபதி நிராகரித்தார். இவர்களும், சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். இதே போன்ற காரணத்துக்காக, மேலும், 10 பேரின் வழக்குகளும், கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள, இந்த தீர்ப்பு, தூக்கு தண்டனையை எதிர் நோக்கியுள்ள, இந்த 17 பேரின் கதி என்னவாகும் என்ற, கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
காலிஸ்தான்?
இந்தியாவில், சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியை, தனி நாடாக அறிவிக்க கோரி, துவக்கப்பட்ட அமைப்பு தான், காலிஸ்தான். முதலில்,
அமைதியான வழியில் போராட்டம் நடத்திய, இந்த அமைப்பினர், 1980க்கு பின், ஆயுதம் தாங்கிய, தீவிரவாத கும்பலாக உருவெடுத்தனர். தங்கள் அமைப்புக்காக, வெளிநாடுகளில் நிதி திரட்டினர். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள, சீக்கியர்களின் பொற்கோவிலுக்குள், ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்து, சட்ட விரோதநடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இவர்களை ஒடுக்குவதற்காக, 1984ல், பிரதமராக இருந்த, இந்திரா, பொற்கோவிலுக்குள், ராணுவத்தை அனுப்பி, தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். இந்த நடவடிக்கைக்கு, "ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்' என, பெயரிடப்பட்டது. ராணுவத்தின் தாக்குதலில், ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
புல்லாருக்கு மன நல பாதிப்பு?
காலிஸ்தான் தீவிரவாதி, புல்லாரின் மனைவி, நவ்னீத் கவுர் கூறியதாவது:என் கணவர், பல ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அவரின் தண்டனை குறைக்கப்படும் என, பெரிதும் நம்பியிருந்தேன். சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் மூலம், அனைத்து நம்பிக்கைகளும் தகர்ந்து விட்டன.ஓட்டு வங்கி அரசியலுக்காக, என் கணவர், பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டிய, காங்., மூத்த தலைவர், ஜெகதீஷ் டைட்லர் உள்ளிட்டோருக்கு, இன்னும் தண்டனை விதிக்கப்படாதது ஏன்? போதிய ஆதாரங்கள் இருந்தும், அவர்களை தண்டனையிலிருந்து, தப்ப விட்டுள்ளனர்.என் கணவருக்கு, மன நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 2005ம் ஆண்டிலிருந்து, சிகிச்சை பெற்று வருகிறார். இது போன்ற நெருக்கடியான சூழ்நிலையில், எங்களால் வேறு என்ன செய்ய முடியும் என, தெரியவில்லை.இவ்வாறு, நவ்னீத் கவுர் கூறினார்.  

No comments:

Post a Comment