Sunday, April 21, 2013

தேர்தல் பிரசாரம் சூடு பிடித்தது : பா.ஜ. தலைவர்கள் கர்நாடகாவில் முற்றுகை!

Sunday, April 21, 2013
பெங்களூர்::கர்நாடகாவில் பாஜவை ஆதரித்து அத்வானி, சுஷ்மா சுவராஜ் உள்பட முக்கிய தலைவர்கள் இன்று அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். இவர்களைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் பிரசாரத்துக்கு வருகின்றனர்.கர்நாடகாவில் ஆளும் பா.ஜ. அரசின் பதவி காலம் முடிவதை அடுத்து, இங்கு சட்டசபை தேர்தல் மே 5ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை நடந்தது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளுக்கு 3,945 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 253 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இறுதியாக 2,692 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. இதில் 95 தொகுதிகளில் 16க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதால் 2 வாக்கு இயந்திரங்களை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்குவதையடுத்து மாநில கட்சிகள் போட்டி போட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் தேவகவுடாவின் மூத்த மகன் எச்.டி.ரேவண்ணா, மருமகள் அனிதா குமாரசாமி, முன்னாள் அமைச்சர் பிஜிஆர் சிந்தியா போன்ற கட்சி முன்னணியினர் போட்டியிடுகின்றனர். கர்நாடக ஜனதா கட்சி சார்பில் எடியூரப்பா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஐ.ஆர்.பெருமாள், ஸ்ரீராமுலுவின் பிஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஸ்ரீராமுலு, நடிகை பூஜா காந்தி போன்றவர்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள் அனைவரும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜ ஆகிய கட்சிகளின் மேலிட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். இன்று பிற்பகல் 3 மணிக்கு மேல் பெங்களூரில் சுஷ்மா சுவராஜ், ஆந்திராவை ஒட்டி உள்ள வட கர்நாடக மாவட்டங்களில் வெங்கய்யா நாயுடு, பெல்காமில் கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பிரசாரம் செய்கின்றனர். டெல்லியில் இயிருந்து ஹூப்ளிக்கு தனி விமானத்தில் வரும் அத்வானி, அங்கிருந்து காரில் ஹாவேரி, மங்களூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இதற்காக பல்வேறு இடங்களில் பொதுக்கூட்ட மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வரும் 26ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கர்நாடகா வருகிறார். சிக்மகளூர், மங்களூர், குல்பர்கா, பெல்காம், மைசூர் மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் மே 2ம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்கிறார். 23ம் தேதி முதல் மே 1ம் தேதி வரை சிக்மகளூர், மங்களூர், பெங்களூர், கோலார், தும்கூர் மற்றும் ஹாவேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்கிறார். 29ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் ஹூப்ளி, தார்வார் மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் பேசுகிறார். இதனால் தேர்தல் சூடு பிடித்துள்ளது.பெங்களூரில் கடந்த 17ம் தேதி பாஜ அலுவலகம் அருகே வெடிகுண்டு வெடித்து சிதறியதில் 16 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து பிரசாரத் திற்கு வரும் தலைவர் களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment