Sunday, April 21, 2013

சீனாவில் பயங்கர பூகம்பம் பலி எண்ணிக்கை 161 ஆக உயர்வு!

Sunday, April 21, 2013
பீஜிங்::சீனாவின் தென் மேற்கு சிசுவான் மாகாணத்தில் இருந்து 80 மைல் தொலைவில் உள்ளது யான் நகரம். லுஷான் கவுன்டியில் அமைந்துள்ள இந்நகரில் நேற்று காலை 8.02 மணியளவில் பூமிக்கு அடியில் 12 கி.மீ. ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பம் சீனாவின் புவியியல் ஆய்வு மையத்தில் ரிக்டரில் 7 புள்ளி ஆகவும், அமெரிக்க புவியியல் மையத்தில் ரிக்டரில் 6.6 புள்ளிகளாகவும் ஆகவும் பதிவானது.
இந்த பூகம்பத்தால் பல கட்டிடங்கள், ஜன்னல்கள் நொறுங்கின. இதில் இடிபாடுகளில் சிக்கி  161 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 5700க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானது.

பாதிக்கப்பட்ட இடங்களில் பேரிடர் நிவாரண குழுவினர், ராணுவ வீரர்கள் மீட்புப் படையினர் போர்க் கால அடிப்படையில் மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இதில் 32 பேரை உயிருடன் மீட்டனர். இந்த பூகம்பத்தால் அணு உலைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சீனா சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பூகம்பத்தால் சிசுவான் மாகாண மக்கள் நேற்றிரவு முழுவதும் சாலைகளில் டென்ட் அமைத்து பீதியுடன் இருந்தனர். வீடுகளுக்கு யாரும் செல்லவில்லை. இதனால் குழந்தைகள், முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.சீனாவில் கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் பலியானோர் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது. இங்கு மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

No comments:

Post a Comment