Sunday, April 21, 2013

30 ஆண்டுகால யுத்தத்தின் பின்னர் பல்வேறு சர்வதேச அழுத்தங்களுக்கும் உள்ளூரில் உள்ள சுயநலவாதிகளின் எதிர்ப்புகளுக்கும் முகம் கொடுத்து நாடு,அமெரிக்காவின் போலி அச்சுறுத்தல்கள் இலங்கையை எவ்வகையிலும் பாதிக்காது!

Sunday, April 21, 2013
இலங்கை::30 ஆண்டுகால யுத்தத்தின் பின்னர் பல்வேறு சர்வதேச அழுத்தங்களுக்கும் உள்ளூரில் உள்ள சுயநலவாதிகளின் எதிர்ப்புகளுக்கும் முகம் கொடுத்து நாடு இன்று அபிவிருத்திப் பாதையில் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது.
 
சர்வதேச அழுத்தங்கள் மற்றும் உள்ளூரில் எழும் எதிர்ப்புகள் ஆகியவற்றுடன் சட்டத்தில் உள்ள ஓட்டைகளும் அரசாங்கத்தின் முற்போக்கு செயற்பாடுகளுக்கு இன்று ஓரளவு தடையை ஏற்படுத்துகின்றது.
பொதுவாக அரசாங்க சேவையில் எந்தவொரு சிறு பணியையும் ஒரு நொடிப் பொழுதுக்குள் தீர்த்து வைப்பதற்கு தடையாக இருப்பது திஞி மற்றும் பிஞி என்ற சில சட்டபூர்வமான நடைமுறைகளாகும். திஞி என்பதை நிர்வாக சட்டப்பிரமாணங்கள் என்றும் பிஞி என்பதை நிதி விவகார சட்டப்பிரமாணம் என்றும் அழைக்கின்றோம்.
 
இவ்விரு சட்டப்பிரமாணங்களுக்கு ஏற்புடையதாக அமையாத எந்தவொரு அரசாங்கத்தின் செய்முறையும் சட்டப்பூர்வமாக அமையாது. இவ்விரு சட்டப்பிரமாணங்களும் பல தசாப்தங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டவை. அவசரமாக ஒரு பிரதேசத்தில் ஏதாவது ஒரு அபிவிருத்தி நடவடிக்கையை அரசாங்கம் செயற்படுத்த விரும்புவதற்கு முன்னர் அது திஞி, பிஞி என்ற இரு சட்டப்பிரமாணங்களுக்கு ஏற்புடையதாக இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்விரு சட்டப்பிரமாணங்களினால் நாட்டில் மேற்கொள்ளப்படவிருக்கும் எத்தனையோ அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. உதாரணமாக கும்புறு என்ற சிங்களப் பதத்தின் தமிழ்மொழி பெயர்ப்பு நெற்காணி என்பதாகும்.
நெற்காணியொன்றை நிரப்பி அங்கு வீடுகளை அல்லது கட்டிடங்களை அமைப்பதை கமநல சேவைச் சட்டம் தடை விதிக்கின்றது. நாட்டில் உள்ள நெற்காணிகளை பாதுகாத்து எங்கள் நாட்டின் மக்களுக்கு போதியளவு நெல்லை உற்பத்தி செய்வதற்கு வகை செய்வதற்காகவே இந்தச் சட்டம் பல தசாப்தங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது. பொதுவாக சிங்களத்தில் கும்புறு என்பது ஒரு பொதுப்பெயராக அல்லது ஒரு குடும்பப் பெயராக இருக்கின்றது. எத்தனையோ சந்தர்ப்பங்களில் குடும்பப் பெயரை உடைய கும்புறுவத்த, கும்புறுபொல போன்ற பெயருடைய காணிகளை அரசாங்க அதிகாரிகள் தவறாக நெற்காணிகள் என்று அங்கு வீடுகளையோ, பாரிய கட்டிடங்களையோ நிர்மாணிக்க அனுமதி தர மறுக்கிறார்கள்.
இப்படியான ஓர் உண்மைச் சம்பவம் சில காலத்திற்கு முன்னர் நடந்தது. சம்பந்தப்பட்ட காணியின் உரிமையாளர் உள்ளூரில் வசதி படைத்த ஒரு வர்த்தகப் பிரமுகராவார்.
அவர் வெளிநாட்டில் உள்ள ஒரு கோடீஸ்வர முதலீட்டாளருடன் கூட்டுச் சேர்ந்து தமது காணியில் பலநூற்றுக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு பாரிய தொழிற்சாலையை ஆரம்பிப்பதற்கு முயற்சி செய்தார்.
அதற்காக அவர் தனக்கு சொந்தமான காணியை நிரப்பி அதில் பலமாடி கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு அரசாங்கத்திணைக்களம் ஒன்றிடம் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தார். அந்தக் காணி உறுதியை அவதானித்த சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரி இதில் கும்புறு காணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது நெற்காணி, அதனால் நான் அனுமதிக்க மாட்டேன் என்று எவ்வளவோ ஆதாரங்களை காட்டியும் கூட ஏற்க மறுத்துவிட்டார்.
அதையடுத்து சம்பந்தப்பட்டவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி பல அரசாங்க திணைக்களங்களுக்கு சென்று இறுதியில் இந்த காணியில் கும்புறு என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது நெற்காணி இல்லை என்பதை நிரூபிப்பதற்கு இரண்டாண்டு காலம் எடுத்தது. இவ்வளவு காலம் காத்திருக்க முடியாது என்ற மன அழுத்தத்துடன் அந்த வெளிநாட்டு கோடீஸ்வர முதலீட்டாளர் இனிமேல் நான் இலங்கையில் வந்து முதலீடு செய்ய மாட்டேன் என்று வேதனையில் அறிவித்து விட்டு சென்றுவிட்டார்.
இவ்விதம் தான் இலங்கையில் உள்ள சில பழைய சட்டங்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வேகமான அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் பாதகமாக அமைந்துள்ளன.
இப்படியான சட்டபூர்வமான தடைகள் குறித்து தனது அவதானத்தை செலுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், நாடு வளர்ச்சி காண வேண்டுமானால் நடைமுறையில் உள்ள அபிவிருத்திப் பணிகளுக்கு தடையாக இருந்து காலதாமதப்படுத்தும் திஞி, பிஞி என்ற இரு சட்டப்பிரமாணங்கள் உட்பட சகல விதமான சட்டங்களும் மாற்றியமைக்கப்பட வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.
எந்தவொரு அபிவிருத்தி பணியையும் ஆரம்பிப்பதற்கு முன்னர் அப்பிரதேசத்தில் வாழும் மக்களின் கருத்துக்களுக்கும் செவிமடுத்து அவை யதார்த்தபூர்வமாக இருக்குமானால் அதனையும் உள்ளடக்கக்கூடிய வகையில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வது நல்லது. அதன் மூலம் பிற்காலத்தில் பிரதேசவாசிகள் ஒரு அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை செய்து பிரச்சினைகள் உருவாகுவதை சுமுகமான முறையில் தீர்த்துவிடலாம்.
 
நாம் இது வரை ஒரு அபிவிருத்தி திட்டத்தை செயற்படுத்துவதற்கு தடையாக இருக்கும் சட்டங்களைப் பற்றி அவதானித்தோம். அடுத்தபடியாக அதனைவிட முக்கியமான சில பிரச்சினைகள் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கத்தை எதிர்க்கும் உள்ளூரிலும் வெளிநாட்டிலும் உள்ள பிற்போக்கு சக்திகள் அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்கு நம் நாட்டு மக்களிடையே மிகவும் தந்திரமான முறையில் ஒற்றுமையின்மையையும் பகைமை உணர்வையும் வலுப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
இந்நாட்டுக்கு எதிரான விஷமிகளும், தேசத்துரோக சக்திகளும் அரசசார்பற்ற அமைப்புகளிடம் இருந்து கிடைக்கும் ஆயிரக்கணக்கான டொலர் நோட்டுகளுக்காக நாட்டுக்கு துரோகம் செய்யும் சில நயவஞ்சகர்கள் இவ்விதம் எமது நாட்டுக்கும், அரசாங்கத்திற்கும், அரசாங்கத் தலைவர்களுக்கும் தீங்கிழைக்கக்கூடிய போலிப் பிரசாரங்களையும் திட்டமிட்ட முறையில் ஆதாரமற்ற வதந்திகளையும் சர்வதேச அரங்கில் பரப்பி வருகின்றனர்.
 
அரசாங்கத்தை எதிர்க்கும் சில எதிர்க்கட்சியினரும் இந்த அரச எதிர்ப்பு தேசத்துரோகிகளுடன் இணைந்து நாடு எப்பாடு பட்டாலும் பரவாயில்லை. பதவியில் உள்ள அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமென்ற எண்ணத்துடன் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இழைத்துவரும் துரோகங்களை எக்காரணம் கொண்டும் மறந்துவிடவோ, அந்த சக்திகளை மன்னிக்கவோ கூடாது.
நாட்டு மக்களிடையே அதிருப்தியின்மையையும், ஒற்றுமையின்மையையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் போலி வதந்திகளை உள்ளூரில் பரப்பி, மத ரீதியிலும், இன ரீதியிலும் வெறுப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வகையில் சிலர் திட்டமிட்டு செயற்பட்டு வருவதனால் பொதுமக்கள் புத்திசாதுர்யத்துடன் நடந்து கொண்டு அவர்களின் போலிப் பிரசாரங்களை கேட்டு ஏமாந்துவிடலாகாது.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதற்கு அமைய எங்கள் நாட்டின் மத ரீதியிலான, இன ரீதியிலான, பிரதேச ரீதியிலான முரண்பாடுகளை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் இலாபத்தை அடைய சில எதிர்க்கட்சிகளும், அரச விரோத சக்திகளும் இன்று இரகசியமாக செயற்பட்டுக் கொண்டு வருகின்றன.
இலங்கைக்கு தீங்கிழைத்து, தனது சொற்படி நம் நாட்டு அரசாங்கம் தலையாட்டி பொம்மையாக இருக்க வேண்டுமென்ற குறிக்கோளுடன் அமெரிக்க அரசு ஜெனீவாவில் நம்நாட்டுக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டு வந்து அச்சுறுத்த முயற்சி செய்ததே ஒழிய, எங்கள் நாட்டுடனான இராஜதந்திர இணைப்பை துண்டித்துக் கொள்ள அமெரிக்கா ஒரு போதும் விரும்பப் போவதில்லை.
இந்து சமுத்திரத்தின் ஒரு கேந்திர நிலையில் இலங்கை அமைந்திருப்பதனால் நம் நாட்டின் மீதான இராஜதந்திர உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்ள விரும்பமாட்டாது. இலங்கை அமெரிக்காவை தூக்கியெறிந்துவிட்டு இந்தியாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்வதோ, அல்லது சீனாவுடனான நல்லுறவை பெருக்கிக் கொள்வதற்கோ அமெரிக்கா என்றுமே விரும்பாது.
இந்துசமுத்திரத்தில் இலங்கை ஒரு கேந்திர நிலையில் இருப்பதனால் இந்தப் பிராந்தியத்தின் நாடுகளிடையே பதற்ற நிலை ஒன்று உருவானால் அமெரிக்காவுக்கு அதில் முக்கிய பங்கு வகிப்பதற்கு ஒரு நேச நாடு இல்லாது போய்விடும் என்ற அச்சத்தினால்தான் இலங்கைக்கு நிரந்தரமாக தீங்கிழைக்காமல் அவ்வப்போது நுள்ளிவிட்டு நான்தான் உலகத்தின் பொலிஸ்காரன், கவனமாக இரு என்று எங்களை அச்சுறுத்துவதை விட அமெரிக்காவினால் எந்த ஆபத்தும் ஏற்படப் போவதில்லை என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
அதே நேரத்தில் இந்திய மத்திய அரசாங்கமும் இலங்கையுடனான நல்லுறவை தொடர்ந்தும் நீடித்துக் கொள்ளவதிலேயே ஆர்வம் கொண்டுள்ளது. இலங்கை தனது அரவணைப்பில் இருந்து பிரிந்து சென்று சீனாவின் மடியில் விழுந்துவிட்டால் தெற்காசியாவில் தனக்கு இருக்கும் அதிகாரம் பலவீனப்பட்டுவிடும் என்று இந்திய மத்திய அரசாங்கம் அஞ்சுகிறது. ஆனால், சீனாவோ பாரம்பரியமாக இலங்கையுடன் இருந்துவரும் நட்புறவை மேலும் தொடர்வதில் விருப்பம் கொண்டுள்ளது.
இலங்கையில் ஆரம்பித்த இனப்பிரச்சினை பயங்கரவாத யுத்தமாக உருவெடுப்பதற்கு முன்பும் யுத்தம் நடந்து கொண்டிருந்த 30 ஆண்டு காலத்திலும் அதற்கு பின்னரும் என்றும் சீனா எங்கள் நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடவே இல்லை. தனக்கு சாதகமாக இலங்கை அரசாங்கம் சர்வதேச அரங்கில் ஆதரவளிக்க வேண்டுமென்று கூட சீன அரசாங்கம் என்றுமே நம்நாட்டு அரசாங்கங்கள் மீது அழுத்தங்களை கொண்டுவரவும் இல்லை.
சீன மாலுமிகள் பலநூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு வணிகம் செய்யவே வந்தார்கள். அவர்கள் நினைத்திருந்தால் தங்கள் சக்கரவர்த்தியின் அங்கீகாரத்துடன் இலங்கையை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோருக்கு முன்னரே ஆக்கிரமித்து எங்கள் தாய்த்திருநாட்டை சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நாடாக மாற்றியிருக்கலாம்.
இலங்கையில் இருந்து வாசனைத்திரவியங்களையும், இரத்தினக் கற்களையும் வாங்கி அதற்கு பதிலாக விலை உயர்ந்த கம்பளங்களை விற்பனை செய்வதே அன்றைய சீன மாலுமிகளின் குறிக்கோளாக இருந்தது.
அவர்களில் சிலர் இலங்கையையே தங்கள் தாயகமாக மாற்றி 1920ம், 30ம், 40ம், 50ம், 60ம் ஆண்டு தசாப்தங்களில் இலங்கையில் புடவை விற்பனைத் தொழிலையும் பொய்ப்பல் கட்டும் தொழிலையும் சிறப்புற செய்து நியாயமான அளவு இலாபத்தை வைத்து வர்த்தகம் செய்தார்கள்.
இந்த சீன வர்த்தகர்கள் என்றுமே எங்கள் நாட்டின் செல்வத்தை சுரண்டக்கூடிய வகையில் எமது பொருளாதாரத்தை சூறையாடவில்லை. சீன வர்த்தகர்கள் காலப்போக்கில் தமிழ், சிங்கள, பெண்களை மணந்து இலங்கை பிரஜைகளாகியுள்ளார்கள். இப்போது அந்த இனம் மெதுவாக மறைந்து அவர்களின் சந்ததியினர் தமிழர்களாகவும், முஸ்லிம்களாகவும், சிங்களவர்களாகவும் மாறி எமது நாட்டில் சங்கமித்து வருகிறார்கள்.
இவ்விதம் இன்று நம்நாடு அயல்நாடுகளின் அச்சுறுத்தலின்றி அயல்நாடுகளை நட்பு நாடுகளாக மாற்றி நம்நாட்டு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. நாம் சர்வதேச அழுத்தங்கள் குறித்தும் எங்களுக்குள் இருந்துவரும் தேசத்துரோக சக்திகள் குறித்தும் அவதானமாக இருந்து நாட்டின் முன்னேற்றத்தை இழக்காக வைத்து செயற்பட்டால் எமது நாடு தெற்காசியாவில் ஒரு விந்தைக்குரிய நாடாக மாறுவதை எவரும் தடுத்துவிட முடியாது.
 
R.ஜீ;ஹீ

No comments:

Post a Comment