Monday, April 29, 2013

விஷத்தை கண்டுபிடிக்க உணவை சாப்பிட வைத்தார்: ஹிட்லரிடம் பணிபுரிந்தபெண் திடுக்தகவல்!

Monday, April 29, 2013
பெர்லின்::தன்னை யாராவது விஷம் வைத்து கொன்று விடுவார்கள் என்ற பயந்த ஹிட்லர் தான் உண்ணும் உணவில் விஷம் கலந்துள்ளதா என்பதை அறிய 15 இளம் பெண்களை அந்த உணவை முதலில் சாப்பிட வைத்து பிறகு தான் சாப்பிட்டது தெரிய வந்துள்ளது.
 
ஜெர்மனியை சர்வாதிகாரம் செய்த ஹிட்லர் இரண்டாம் உலகப் போரின் இறுதி கட்டத்தில் உல்ப்ஸ் லையர் என்னும் பாதுகாப்பான இடத்தில் இருந்தார். இந்த இடம் தற்போது போலந்தில் உள்ளது. அப்போது அவரிடம் இரண்டரை ஆண்டுகள் பணிபுரிந்த மார்கட் வோயல்க் என்ற பெண் இத்தனை ஆண்டுகள் கழித்து தனது 95வது வயதில் தனது அனுபவங்களை உலகிற்கு தெரிவித்துள்ளார்.
 
மார்கட் இருபதுகளில் இருந்தபோது ஹிட்லரிடம் பணியாற்றியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஹிட்லர் ஒரு சைவப் பிரியர். அவரிடம் நான் பணிபுரிந்த காலத்தில் அவர் மாமிசம் சாப்பிட்டு நான் பார்த்ததில்லை. இங்கிலாந்துக்காரர்கள் தன்னை விஷம் வைத்து கொன்றுவிடுவார்களோ என்று அவர் அஞ்சினார். அதனால் அவர் சாப்பிடும் முன்பு அவரது உணவை சாப்பிட்டு விஷம் உள்ளதா என்பதை கண்டறிய 15 இளம் பெண்களை பணியமர்த்தி இருந்தார். அதில் நானும் ஒருத்தி.
 
போர் காலத்தில் மக்கள் உணவுக்கு கஷ்டப்பட்ட நேரத்தில் நாங்கள் ஹிட்லருக்கு வழங்கப்படும் சுவையான உணவை ருசி பார்த்தோம். ஆனால் அதில் விஷம் இருக்குமோ என்ற பயத்திலேயே அதை ரசித்து சாப்பிட்டதில்லை. ஒவ்வொரு வேளையும் உணவை சாப்பிடுகையில் இது தான் நம் கடைசி உணவு என்று நினைப்போம். போர் மோசமடைந்ததையடுத்து நான் பெர்லினுக்கு சென்றுவிட்டேன். அதன் பிறகு என்னுடன் பணிபுரிந்த 14 பேரையும் ரஷ்ய படை சுட்டுக் கொன்று விட்டதாக கேள்விப்பட்டேன் என்றார்.

No comments:

Post a Comment